பாடல் - 7
மடந்தையை, வண் கமலத் திருமாதினைத்
தடம்கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்
வடம்கொள் பூந்தண் அம் துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால், வாள் நுதலீர், என் மடக்கொம்பே.
(தாய் சொல்கிறார்)
ஒளிநிறைந்த நெற்றியைக்கொண்ட பெண்களே, என்னுடைய மகள், மடப்பம் என்ற குணத்தைக்கொண்டவள், பூங்கொம்புபோல் மென்மையானவள், எம்பெருமான் மீது நேசம் வைத்துள்ளாள், வளம் நிறைந்த தாமரை மலரிலே வீற்றிருக்கும் மடந்தையான திருமகளைத் தன்னுடைய பெரிய, மாலை சூடிய மார்பினில் வைத்தவர் எம்பெருமான், அந்தப் பெருமானின் திருவடிகளின்மேல், பூக்களைச் சேர்த்துத் தொடுத்து வைக்கப்பட்டுள்ள குளிர்ச்சியான, அழகிய துளசி மலரை எண்ணி இவள் சுருண்டு விழுகிறாள்.
******
பாடல் - 8
கொம்புபோல் சீதை பொருட்டு இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணைமேல் அணி
வம்பு அவிழ் தண்அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால், நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?
(தாய் சொல்கிறார்)
பெண்களே,
பூங்கொம்பு போன்ற சீதையை மீட்பதற்காக, இலங்கை நகர் மீது நெருப்பைச் சொரியும் அம்புகளைச் செலுத்தியவர் எம்பெருமான், அவருடைய திருவடிகளின்மேலே உள்ள நறுமணம் கமழும், குளிர்ச்சியான, அழகிய துளசி மலரையே இவள் விரும்புகிறாள், நான் இதற்கு என்ன செய்வேன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.