நாள்தோறும் நம்மாழ்வார்

நான்காம் பத்து ஒன்றாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

மணி மின்னுகின்ற திருமேனியை

செ.குளோரியான்

பணிமின் திருஅருள் என்னும் அம் சீதப் பைம் பூம்பள்ளி
அணிமென்குழலார் இன்பக்கலவி அமுது உண்டார்
துணிமுன்பு நாலப் பல் ஏழையர்தாம் இழிப்பச் செல்வர்
மணிமின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.

அரசர்களின் அரண்மனையில் அழகிய, குளிர்ச்சியான, புதிய பூக்களை நிரப்பிய படுக்கை, அதில் அழகான, மென்மையான கூந்தலையுடைய பெண்கள் அமர்ந்திருப்பார்கள், அந்தப் பெண்களிடம் அந்த அரசர்கள் ‘எனக்குத் திருவருள் செய்யுங்கள்’ என்று கெஞ்சுவார்கள், பின்னர் அவர்களுடன் அமுதம் போன்ற இன்பத்தை நுகர்வார்கள், இப்படிப் போகத்தில் வாழ்ந்த அரசர்கள்கூட, என்றைக்கேனும் வறுமைநிலையை அடையக்கூடும், அப்போது, அவர்கள் அணிந்திருக்கும் துணி முன்னால் தொங்க அவர்கள் நடந்துசெல்வார்கள், பல பெண்கள் அவர்களைப் பார்த்து இழிவாகப் பேசுவார்கள், ஆகவே, இந்த நிலையற்ற தன்மையை உணருங்கள், மணி மின்னுகின்ற திருமேனியைக் கொண்ட நம் மாயவனின் பெயரைச் சொல்லி வாழுங்கள்.

பாடல் - 6

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்றுமுதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை, நிற்குறில்
ஆழ்ந்தார் கடல் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.

இந்த உலகில் பிறந்தவர்கள் யாருமே நிரந்தரமாக வாழவில்லை, எல்லாருமே பெரிய மழைநீரில் தோன்றும் குமிழியைப்போல இறந்துபோனார்கள், நரகத்திலே ஆழ்ந்தார்கள், அன்றுமுதல் இன்றுவரை இங்கே நிரந்தரமாக வாழ்ந்தவர்கள் என்று யாருமே இல்லை, நீங்கள் அப்படி நிலைத்துநிற்கும் வாழ்வை விரும்பினால், பாற்கடலிலே கண்வளரும் அண்ணலான திருமாலுக்கு அடியவர்களாகுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை

SCROLL FOR NEXT