நாள்தோறும் நம்மாழ்வார்

ஏழாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

தனித்த நெஞ்சத்தை

செ.குளோரியான்

பாடல் - 1

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்
தாமரைக்கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்,
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்,
வெள்ளச் சுகம் அவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழா ஒலியும்
பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும்
அறாத் திருப்பேரெயில் சேர்வன் நானே.

தாய்மார்களே, வெள்ளைச் சுரிசங்கோடு சக்ராயுதத்தை ஏந்திய தாமரைக்கண்ணன், கருடன்மேலேறி என் நெஞ்சுக்குள்ளே வருகிறான், அப்பெருமான் வரும் தன்மையைப் பாருங்கள், இதை நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்? இன்பவெள்ளமான அந்தப் பெருமான் வீற்றிருக்கும் வேதத்தின் ஒலியும், விழாவின் ஒலியும், பிள்ளைகள் கூட்டமாகச் சேர்ந்து விளையாடுகிற ஒலியும் எப்போதும் கேட்கிற திருப்பேரெயில் என்ற திருத்தலத்தை நான் சென்றுசேர்வேன்.

***

பாடல் - 2

நானக் கரும்குழல் தோழிமீர்காள்,
அன்னையர்காள், அயல்சேரியீர்காள்,
நான் இத் தனிநெஞ்சம் காக்கமாட்டேன்
என் வசம் அன்று இது, இராப்பகல் போய்த்
தேன்மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
வானப்பிரான் மணிவண்ணன், கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே.

நறுமணம் வீசும் கருமையான கூந்தலைக்கொண்ட தோழிகளே, அன்னையரே, அருகிலிருக்கும் சேரியில் உள்ள மற்றோரே, என்னுடைய இந்தத் தனித்த நெஞ்சத்தை என்னால் காக்கமுடியவில்லை. ஏனெனில், அது என் வசத்தில் இல்லை, கண்ணனிடம் சென்றுவிட்டது, தேன் துளித்த பூக்கள் நிறைந்த பொழில்களும் குளிர்ந்த வயல்களும் சூழ்ந்த தென் திருப்பேரெயிலிலே வீற்றிருக்கும் பரமபதநாதன், மணிவண்ணன், கண்ணன், அப்பெருமானின் செங்கனிவாயில் என் மனம் ஈடுபட்டுவிட்டது, இரவுபகலாக அங்கேயே தங்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை

SCROLL FOR NEXT