நாள்தோறும் நம்மாழ்வார்

ஏழாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

நான் கொண்ட காதல்

செ.குளோரியான்

பாடல் - 5

முனிந்து சகடம் உதைத்து, மாயப்
பேய் முலை உண்டு, மருதுஇடைப் போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த
கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்,
முனிந்து இனி என்செய்தீர் அன்னைமீர்காள்,
முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே
காலம் பெற என்னைக் காட்டுமினே.

தாய்மார்களே, கோபப்பட்டு வண்டியை உதைத்து சகடாசுரனை வீழ்த்தியவன், மாயமாக வந்த பேய் பூதனையின் முலையை உண்டு அவளை அழித்தவன், இரட்டை மருதமரங்களுக்கு நடுவே சென்று அவற்றை முறித்து நள, கூபரர் என்ற கந்தர்வர்களின் சாபத்தைத் தீர்த்தவன், பழுத்த விளாமரத்தை நோக்கிக் கன்றை வீசி, கபித்தாசுரன், வத்ராசுரனை அழித்தவன், அத்தகைய கண்ணபிரானை எண்ணி என்னுடைய பெண்மை தோற்றது, இனி என்மேல் கோபித்து என்ன செய்யப்போகிறீர்கள்? இனியும் காலம் தாழ்த்தவேண்டாம், அவன் முற்பட்டுவந்து எழுந்தருளிய, பழங்கள் நிறைந்த சோலைகளைக்கொண்ட திருப்பேரெயில் திருநகரத்துக்கே என்னை அழைத்துச்செல்லுங்கள்.

***

பாடல் - 6

காலம் பெற என்னைக் காட்டுமின்கள்,
காதல் கடலின் மிகப் பெரிதால்,
நீலமுகில் வண்ணத்து எம்பெருமான்
நிற்குமுன்னே வந்து என் கைக்கும் எய்தான்,
ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த,
நான்மறையாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடுபுனல் திருப்பேரெயிற்கே.

நீலமுகில்வண்ணத்து எம்பெருமான் என்முன்னே வந்து நிற்பான், ஆனால், வந்து என் கையில் அகப்படமாட்டான், அப்பெருமான்மேல் நான் கொண்ட காதல், கடலைவிடப் பெரியது. ஆகவே, இனியும் காலம் தாழ்த்தவேண்டாம், பூவுலகில் அவன் வந்து வீற்றிருந்த திருத்தலம், நான்கு வேதங்களிலும் வல்லவர்களான அந்தணர்கள் தொடர்ந்து வேள்விகளை நடத்துகிற ஊர், அழகான செந்நெற்கள் கவரி வீசுகிற ஊர், நீர்வளம் நிறைந்த ஊர், அந்தத் திருப்பேரெயில் திருநகருக்கு என்னை அழைத்துச்செல்லுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை

SCROLL FOR NEXT