நாள்தோறும் நம்மாழ்வார்

ஏழாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

எதைச் சாதிப்பது?

செ.குளோரியான்

பாடல் - 7

பேர்எயில் சூழ் கடல் தென் இலங்கை
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப்
பேர்த்துவர எங்கும் காணமாட்டேன்,
ஆரை இங்கு உடையம் தோழீ,
என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,
ஆரை இனிக் கொண்டு என் சாதிக்கின்றது,
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே.

பெரிய மதில் சுவர்களாலும் கடலாலும் சூழப்பட்ட தென் இலங்கையை வென்ற பெருமான் வந்து வீற்றிருக்கும் திருநகரம், திருப்பேரெயில், அங்கே சென்ற என்னுடைய நெஞ்சத்தைத் தேடிப்பார்க்கிறேன், அது திரும்பிவரும் வழியைக் காணோம், அதைக் கூவி அழைக்கவல்லவர்களும் யாரும் நமக்கில்லை. தோழீ, இனி யாரைக்கொண்டு எதைச் சாதிப்பது? என் நெஞ்சம் கண்டதையே நானும் கண்டேன்.

***

பாடல் - 8

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக்
கார்க் கடல்வண்ணனோடு என்திறத்துக்
கொண்டு அலர் தூற்றிற்றதுமுதலாக்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழி,
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும்
நீள் விசும்பும் கழியப்பெரிதால்,
தெள் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த
தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே.

எம்பெருமான்மீது நான் வைத்திருக்கும் காதலை எல்லாரும் கண்டார்கள், அந்தக்
கருமேகவண்ணனையும் என்னையும்பற்றி அலர் பேசினார்கள், அந்தக் காதலைப்பற்றி நான் சொல்லட்டுமா தோழீ! இதுபோன்ற பேச்சுகளால் என் காதல் குறையவில்லை, மண் திணிந்திருக்கிற இந்த உலகமும் ஏழு கடலும் நீண்ட வானமும்போலப் பெரிதானது, தெளிவான அலைகளால் சூழப்பட்ட, எம்பெருமான் வீற்றிருக்கும் அந்தத் தென் திருப்பேரெயில் திருநகரத்துக்கு நான் சென்றுசேர்வேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT