அவுரி (சிறுகதைத் தொகுப்பு) - ஊத்தங்கால் ப.கோவிந்தராசு; பக்.124; ரூ.125; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட், சென்னை-600 050 ✆ 044 26359906.
தமிழ்ச் சிறுகதைகளுக்கு வயது ஒரு நூற்றாண்டு ஆகியிருக்கிறது. சிறுகதைகள் நம் எண்ணத்தோடும், உணர்வோடும் இரண்டறக் கலந்துவிட்டவையே. ஒரு சிறு புல்லின் அசைவையும் ஒரு பெரும் எரிமலை வெடிப்பையும் நம் மன அறைகளின் வேறுபட்ட தட்பவெப்பத்தை ஒப்பிட்டுச் சொல்லும் திறன் ஒரு சிறுகதை ஆசிரியருக்கு உண்டு. அதை இந்நூலின் ஆசிரியர் நிரூபிக்கிறார்.
டோசர் வரவை சப்தமின்றியும், சாமி வரவை பெரும் சப்தத்துடனும் இங்கே வாசகனுக்குச் சொல்லிச் செல்லும் விசித்திரம் சிறுகதையின் நர்த்தனத்தில் சாத்தியப்பட்டிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
மொத்தம் 11 சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். பெரும்பாலானவை புதுச்சேரி வானொலியில் ஒலிபரப்பானவை. மேலும், முன்னணி இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை. வாசிக்கும்போது சலிப்புத் தட்டாத நடையில் ஆசிரியர் கதைகளை அழகாக நகர்த்துகிறார். வேறு எந்தச் சிறுகதை ஆசிரியரின் சாயலும் இல்லாது எளிமையான முறையில் அதே நேரத்தில் வேகமாகவும் நகர்ந்து செல்கின்றன கதைகள்.
ஒரு சில கதைகளில் வட்டார வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தனது மண்ணில், தனது மக்களிடத்தே வரும் சவால்களை, பிரச்னைகளை இயற்கையாகவோ, பாரம்பரியமாகவோ சரி செய்யக்கூடிய முறைகளை கதையில் சொல்லித் தருகிறார் ஆசிரியர். நமக்கோ அது ஒரு வாழ்க்கைப் பாடமாகிறது.
நம் வாழ்க்கைப் பாதையில் அன்றாடம் கடந்து செல்லும்போது எதிர்கொள்ளும் ஒரு புழுதிச் சூழலின் வீரியத்தைப் பயம் கொண்டு பார்க்காமல், அதன் வளைவலைகளை வியப்போடு அணுகுவதற்கு சிறுகதைகள் சொல்லித்தரும் என்பதற்கு இந்த 'அவுரி' ஒரு சான்றாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.