தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்-தி.நெல்லையப்பன், பக்.155; ரூ.400; மைன்ட் ரீடிங் பப்ளிகேஷன், டிஎன்எச்பி காலனி, மதுரை - 625 011. ✆ 63809 81249.
வாய்மொழி இலக்கியங்கள் தொடங்கி நவீன இலக்கியங்கள்வரை மிக நீண்ட நெடிய இலக்கிய மரபும் பண்பாடும் கொண்டது தமிழினம்.
ஓர் இனத்தின் பழக்க வழக்கங்கள், பண்பாட்டு அசைவுகள், விழுமியங்கள், சடங்குகள், சமய வழிபாடு போன்றவை காலவெள்ளத்தில் நிலைத்து நிற்பதும் மறைந்து போவதும் இயல்பாக நிகழ்கிற ஒன்றே. இது தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்ல; எல்லா சமூகங்களிலும் வாழ்வியல், பொருளியல் அம்சங்களுடன் தொடர்புடையதாக இருப்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
தமிழர் தம் வாழ்வியல் பண்பாடுகளில் மறைவனவற்றையும் தொடர்கின்ற பண்பாட்டுக் கூறுகளைக் காக்கும் முயற்சியாகவும் பல்வேறு சடங்குகள், விழாக்கள், தொட்டில், சிறுவர் விளையாட்டுகள், ஊர்களும் தயாரிப்பு பொருள்களும், வீட்டுத் திண்ணையும் மனித நேயமும், மலர் வழிபாடு, ஆசி பெறும் பண்பு, குங்குமம் - பூ அளித்தல், பலகார பறிமாற்றம், வாழையும் தமிழரும், வளைகாப்பு, சீர்வரிசை, நாற்றங்கால் படையல், பனையும் பழக்கமும், விரதங்கள், பெண்களின் உடை பண்பாடு, துடைப்பம், பாடை, பறை - இப்படியாக வாழ்வின் தொடக்கம் முதல் முடிவு வரை பல நூறு பண்பாட்டு செய்திகள் இந்த நூலில் உணர்த்தப்பட்டுள்ளன.
பண்பாட்டு விழுமியங்கள், சடங்குகள் என்பன கிராமப் பகுதிகளிலும் சமூக இனங்களிலும் மரபு வழி மரபாகவே பின்பற்றிவரும் நிகழ்வுகள் தொடர்ந்துதான் வருகின்றன. சில பண்பாட்டு நிகழ்வுகள் மாற்றமடைந்துள்ளன.
ஒரு பண்பாடு சிதைவடைந்தால், மாற்றமடைந்தால் அல்லது மறையும் நிலை உருவானால் அதிலுள்ள கலைகள் வீழ்கின்றன; கைவினைகளும் காணாமல் போகின்றன. தமிழர்களின் பழக்கங்களும் வழக்கங்களும் மாறிவிட்டால் கலப்பான பண்பாடு உருவாகும் என்கிறார் ஆசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.