க.மனோகரன் சிறுகதைகள் - க.மனோகரன்; பக்.380; ரூ.380; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-17; ✆ 044- 2433 1510.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர், உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சென்னை அருகே நாவலூரில் வசித்துவரும் இவர், 14 நாவல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய 23 சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது.
தனது வாழ்வில் சந்தித்தோர், தனக்கு நேரிட்ட அனுபவங்கள், சூழ்நிலைகள், பணி அனுபவத்தில் கிடைத்த சுவாரஸ்ய நிகழ்வுகளையே தனக்கே உரிய எழுத்து நடையில், சிறுகதைகளாக்கியுள்ளது சிறப்பு. பல சிறுகதைகள் நகைச்சுவை ததும்ப உள்ளன.
இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது, நம்முடன் நடமாடுவோரைப் பற்றிய நினைப்புகளே மேலோங்குகின்றன.
இறைநம்பிக்கை, வாழ்க்கையில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் சிக்கல்கள் போன்றவற்றை தனது அனுபவத்தின் வாயிலாக, சிறுகதைகளாக வடித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் என்றே கூறலாம்.
'பெருமாளும் பெருச்சாளியும்' என்ற சிறுகதை கரோனா காலத்தில், நூலாசிரியருக்கு தோன்றிய நகைச்சுவையான கற்பனைக் கதை; படிக்கப் படிக்கச் சுவாரசியமாகவே நகர்கிறது. சில கதைகள் பெரியதாக இருந்தாலும், சிறுகதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பது சிறப்பு.
'நாவல்கள் திரைப்படம் என்றால், சிறுகதைகள் என்பவை புகைப்படங்கள் போன்றவை' என்று நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதைப் போன்று, சிறுகதைகளில் அவரது எழுத்து நடையும், கற்பனை வளமும் வியக்க வைக்கின்றன.
நூலில் எழுத்து வடிவத்தைப் பெரிதாகவே அச்சிட்டிருப்பது மூத்த குடிமக்கள் படிக்க வசதியாக இருக்கிறது. சிறுகதைப் பிரியர்களுக்கு இந்த நூல், நல்ல வாசிப்பு அனுபவத்தை அளிக்கக் கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.