மதம் தரும் பாடம் - நாகூர் ரூமி; பக்.152; ரூ.180; கிழக்கு பதிப்பகம்; சென்னை - 14. ✆ 044-42009603.
ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பெüத்தம், ஜைனம் ஆகிய மதங்களில் விரவிக் கிடக்கும் நீதி நெறிகள், ஞானக் கருத்துகள், நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்கள், நேர்மை புகட்டும் பாடங்களை 28 தலைப்புகளில் இந்நூல் விவரிக்கிறது.
மதம் என்றும் மார்க்கம் என்றும் அழைக்கப்படும் விஷயம் பல நேரங்களில் வெறியூட்டியுள்ளது; சில நேரங்களில் மட்டுமே நெறியூட்டியுள்ளது என்று குறிப்பிடும் நூலாசிரியர், அதற்குக் காரணம் மதங்கள் அல்ல; புறக்காரணிகள்தான் என்று சுட்டிக்காட்டுகிறார்.
கலைகளை வளர்த்தெடுத்த மதங்களால் கொலைகளும் நடந்துள்ளன. எதைக் கொள்வது, எதைத் தள்ளுவது என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு ஏதுவாக பல சுவையான சம்பவங்களை மைய இழையாகக் கொண்டு இந்நூல் பின்னப்பட்டுள்ளது.
'பிராமண எதிர்ப்பு' இன்றைய அரசியல் தளத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், பள்ளிச் சிறுவனாக இருந்தபோது மழையில் நனைந்த அம்பேத்கருக்கு புதிய உடையை அளித்த ஆசிரியரும், தனது மதிய உணவில் ஒரு பகுதியை அம்பேத்கருக்கு அளித்த ஆசிரியரும் பிராமணர்கள். அம்பேத்கருக்கு உணவளித்த பிராமண ஆசிரியரின் பெயரால்தான் அவர் இன்றளவும் 'அம்பேத்கர்' என்று அழைக்கப்படுகிறார் என்பது வரலாறு நமக்குத் தரும் வியப்பு.
நபிகளாரின் மகத்துவம், திருக்குரானை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மர்மட்யூக், கோலியாத்தை கவண் எறிந்து கொன்ற டேவிட், மகாவீரர் ஞானமடைந்தது, பாபரை கொல்லவந்த ராஜபுத்திர இளைஞன் அவருக்கே மெய்க்காப்பாளன் ஆனது உள்ளிட்டோர் குறித்த பல சுவையான நிகழ்வுகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எல்லா மதங்களும் அழகானவை, அமைதியானவை, அற்புதமானவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.