20. செத்தையேன் சிதம்பன் - பாடல் 5
உடலினையும் உயிரினையும் தம் வசப்படுத்த முயற்சி செய்யும் ஐந்து பொறிகளின் செயல்களை தடுத்து நிறுத்தும் ஆற்றல்
பாடல் 5
தடுத்திலேன் ஐவர் தம்மைத் தத்துவத்து உயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கிப் பன்மலர் பாதம் உற்ற
அடுத்திலேன் சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம்
கொடுத்திலேன் கொடியவா நான் கோவல் வீரட்டனீரே

விளக்கம்

ஆர்வலித்து = ஆசை கொண்டு. இந்த பதிகத்தின் பல பாடல்களிலும் தனது உள்ளத்தின் செயல்பாடுகளைக் கூறுவதால், இங்கே மலர்கள் என்று கூறுவது அக மலர்களை குறிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும். கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு ஆகியவை அக மலர்கள் எனப்படும். நீர்மை = இயல்பு, குணம், தன்மை,

பொழிப்புரை

உடலினையும் உயிரினையும் தம் வசப்படுத்த முயற்சி செய்யும் ஐந்து பொறிகளின் செயல்களை தடுத்து நிறுத்தும் ஆற்றல் இல்லாதவனாக நான் உள்ளேன். மெய்ப்பொருளின் உயர்வான தன்மையை அறிந்து, எனது உயிர், மெய்ப்பொருளை நாடும் வழியில் செலுத்தாமல் இருக்கின்றேன். இறைவனே, உலகெங்கிலும் பரந்து காணப்படும் உனது திருப்பாதங்களில் அகமலர்கள் எனப்படும் எட்டு நல்ல பண்புகளை கடைப்பிடித்து உன்னிடத்தில் அன்பு செலுத்தி, அன்பு நிறைந்த உள்ளத்துடன் உன்னை வழிபடாமல் நான் இருக்கின்றேன். மொத்தத்தில் நான் ஒரு கொடியவனாக எனது வாழ்க்கையை கழித்துவிட்டேன். கோவல் வீரட்டத்து உறையும் இறைவனே, நீதான் என்னை நல்வழிப்படுத்தி, எனது வாழ்க்கையில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும்.

Advertisement