32. பனைக்கை மும்மத வேழம் - பாடல் 1
திருவதிகையில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட நாளிலிருந்து தில்லைக் கூத்தனது நடனக் கோலத்தைக் காண வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்த அப்பர் பிரான், சமணர்களின் சூழ்ச்சியால்,
(தில்லை – குறுந்தொகை)
பின்னணி
திருவதிகையில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட நாளிலிருந்து தில்லைக் கூத்தனது நடனக் கோலத்தைக் காண வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்த அப்பர் பிரான், சமணர்களின் சூழ்ச்சியால், கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் தள்ளி விடப்படினும், சிவபெருமானின் அருளால், திருப்பாதிரிபுலியூர் (இன்றைய கடலூர்) அருகே கரை சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து அதிகை சென்று, தன்னை பல இடர்களிலிருந்தும் காப்பாற்றிய அதிகைப் பெருமானுக்கு நன்றி சொல்லும் விதமாக, பல பதிகங்கள் பாடி அவரைப் போற்றி மகிழ்கின்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, ஆமாத்தூர், பெண்ணாகடம், முதுகுன்றம், நெல்வாயில் அரத்துறை முதலிய தலங்கள் வழியாக சிதம்பரம் வந்து சேருகின்றார். தில்லைப் பெருமானைக் கண்ட அப்பர் பிரானுக்கு, கூத்தப் பிரானது திருமுறுவல், என்று வந்தாய் என்று தன்னைக் கேட்பதுபோல் தோன்றியது. அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பத்தனாய் பாடமாட்டேன் என்று தொடங்கும் பதிகத்தையும், அன்னம் பாலிக்கும் என்று தொடங்கும் பதிகத்தையும் பாடிய பின்னர், அருகில் இருக்கும் வேட்களம், கழிப்பாலை ஆகிய தலங்களில் உள்ள இறைவனை வழிபட்டு, பதிகங்கள் அருளிய பின்னர் மறுபடியும் தில்லைக் கூத்தனைக் காண ஆர்வம் கொண்டார். கழிப்பாலைத் தலத்திலிருந்து தில்லை வரும் வழியில், தில்லைப் பெருமானை மறந்து வாழ்வினில் உய்வினை அடைய முடியாது என்ற பொருள் படும் இந்த பதிகத்தைப் பாடியவாறே தில்லை வந்து சேர்கின்றார். இந்த தகவலை அளிக்கும் பெரியபுராணப் பாடலை நாம் இங்கே காண்போம். வளை = சங்கு. ஞாழல் = புன்னை.
Advertisement
மனைப்படப்பில் கடற்கொழுந்து வளை சொரியும் கழிப்பாலை மருங்கு நீங்கி
நனைச் சினை மென்குளிர் ஞாழல் பொழிலூடு வழிக் கொண்டு நண்ணும் போதில்
நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டருளும் அம்பலத்து நிருத்தனாரைத்
தினைத் தனையாம் பொழுது மறந்து உய்வனோ எனப்பாடித் தில்லை சார்ந்தார்
பல தலங்கள் சென்று இறைவனை வழிபட்டு, அவனைப் புகழ்ந்து பதிகங்கள் பாடுவதே தங்களது வாழ்க்கை நெறியாகக் கொண்டிருந்த மூவர் பெருமானார்கள், ஒரு தலத்திலிருந்து அடுத்த தலம் செல்லும் வழியிலும் பதிகங்கள் பாடிக்கொண்டு சென்ற நிலை, அவர்களது நெஞ்சம் முழுதிலும் இறை உணர்வே மிகுந்து இருந்தது என்பதை நமக்கு உணர்த்துகின்றது.
எருக்கத்தம்புலியூர் தலத்திலிருந்து முதுகுன்றம் சென்ற ஞானசம்பந்தரது உள்ளத்தில், முதுகுன்ற நாதரின் அருள் திறம், நிறைந்து காணப்பட்டதால், முதுகுன்று அடைவோமே என்று பதிகத்தின் முதல் பத்து பாடல்களும் முடியும் வண்ணம், மத்தாவரை நிறுவிக் கடல் என்று தொடங்கும் பதிகத்தினை (1.12) பாடியவாறே செல்கின்றார். பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தலத்தின் இன்றைய பெயர் விருத்தாசலம். வரை = மலை. இங்கே மேரு மலையைக் குறிக்கும், மேரு மலையினை மத்தாகக்கொண்டு பாற்கடல் கடையப்பட்டபோது எழுந்த விடத்தை உண்டு உலகத்தினை காப்பாற்றிய சிவபெருமானது இடம் என்று பதிகத்தினைத் தொடங்குகின்றார்.
மத்தா வரை நிறுவிக் கடல் கடைந்து அவ்விடம் உண்ட
தொத்தார் தரு மணி நீள் முடி சுடர்வண்ணனது இடமாம்
கொத்தார் மலர் குளிர் சந்தகில் ஒளிர் குங்குமம் கொண்டு
முத்தாறு வந்து அடி வீழ் தரு முதுகுன்று அடைவோமே
கானாட்டு முள்ளூர் தலத்திலிருந்து எதிர்கொள்பாடி செல்லும் வழியில் சுந்தரர், பதிகத்தின் முதல் பத்து பாடல்களையும் எதிர்கொள்பாடி அடைவோமே என்று முடியுமாறு இசைத்துப் பாடி, தான் எதிர்கொள்பாடி சென்றுகொண்டிருந்ததை உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் (7.07) முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நாம் இறந்த பின்னர் நமக்குத் துணையாக வருவது சிவபெருமானைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதை உணர்த்தும் பாடலிது.
மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆருமில்லை சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே
பாடல் 1
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனை
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ

விளக்கம்

பனைக்கை = பனை மரம் போன்று அடி பெருத்து நுனி சிறுத்து காணப்படும் துதிக்கை. அனைத்து வேடமாம் = உலகமே தனது உருவமாக உடையவன். பொதுவாக, யானை மிகவும் சாதுவான பிராணி. ஆனால் மதம் பிடித்த யானை, மிகவும் ஆவேசமாக செயல்படுவதால் அதனை எதிர்கொள்வது மிகவும் கடினம். மதம் பிடித்த யானைக்கு மூன்று இடங்களிலிருந்து (மண்டையோடு, கண்களுக்கும் காதுகளுக்கும் இடையே உள்ள இடம் மற்றும் ஆண்குறி) மத நீர் ஒழுகும் என்பதால் மும்மத வேழம் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது, கயாசுரன் என்ற யானையின் தோலை உரித்து, அதனை போர்வையாக போர்த்துக்கொண்டது, எட்டு வகையான வீரச் செயல்களில் ஒன்றாகும்.

சிவபெருமான் நினைப்பவர் மனத்தினைக் கோயிலாகக் கொள்பவர் என்பதற்கு சிறந்த உதாரணம், திருமயிலையில் வாழ்ந்த வாயிலார் நாயனார். எப்பொழுதும் சிவபெருமானை நினைத்துக்கொண்டே இருந்த வாயிலார், பெருமானைத் தனது மனதினில் நிறுத்தி, தனது ஞானம் என்ற விளக்கினை அந்த கோயிலுள் ஏற்றி, சிவபெருமானைத் தான் நினைப்பதால் ஏற்பட்ட ஆனந்தம் என்கின்ற நீரினால் நீராட்டி, தனது அன்பினையே நிவேதனப் பொருளாக இறைவனுக்கு படைத்து அர்ச்சனை செய்தார் என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். இந்த பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் இறைவனை மறவாமல் நினைந்திருந்த தன்மை, இறைவனை தனது மனதினில் நிறுத்துக்கொள்வதற்கு கருவியாக அமைந்தது என்று இந்த பாடலில் சேக்கிழார் கூறுகின்றார்.

மறவாமையால் அமைத்த மனக்கோயில் உள்ளிருத்தி
உறவாதி தனை உணரும் ஒளிவிளக்குச் சுடர் ஏற்றி
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி
அறவாணர்க்கு அன்பென்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்

இவ்வாறு தனது மனக்கோயிலில் இறைவனை நிறுத்தி வழிபட்ட வாயிலார் முக்திப்பேறு அடைந்தார் என்பதையும் சேக்கிழார் கூறுகின்றார். முக்தி அடைந்த அடியார்கள், வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், நிரந்தரமாக முக்தி உலகில் இருக்க முடியும் என்பதால், பேராத நெறி என்று முக்திப்பேற்றினை சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.

நீராடும் சடையாரை நீடு மன ஆலயத்துள்
ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர் பால்
பேராத நெறி பெற்ற பெருந்தகையார் தமைப் போற்றிச்
சீராரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம்.

இவ்வாறு நினைப்பவர் மனத்தினைக் கோயிலாகக் கொண்டு உறைபவன் சிவபெருமான் என்பதால்தான், தினமும் திருக்கோயிலுக்குச் சென்று நெய்யும் பாலும் கொண்டு இறைவனை நீராட்ட முடியாதவர்கள் தாங்கள் உய்வதற்கான வழி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம் என்று அப்பர் பிரான் நமக்கு சொல்லிக்கொடுக்கும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் மருளவா மனத்தனாகி என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் (4.76) நான்காவது பாடல் ஆகும். நமது உடலினைக் கோயிலாகவும், நல்ல எண்ணங்கள் கொண்ட மனதினை இறைவனுக்கு அடிமையாகவும், உண்மையான தூய நடத்தைகளுடன், நமது மனத்தினில் உள்ள ஆன்மாவை இலிங்கமாக பாவித்து, நமது அன்பையே நெய்யாகவும் பாலாகவும் நினைத்து அன்பினால் இறைவனை நீராட்டி, கொல்லாமை, அருள், ஐம்பொறி அடக்கல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு ஆகிய மலர்களைக்கொண்டு இறைவனைத் தான் வழிபட்டதாக அப்பர் பிரான் கூறுகின்றார். வாயிலார் நாயனார் வாழ்ந்த வாழ்க்கை நெறிமுறையுடன் இந்த பாடலில் கூறப்படும் வழிமுறை ஒத்துப்போவதை நாம் உணரலாம்.

காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனம் அணி இலிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே

பரந்த உலகாகவும், அந்த உலகில் உள்ள அனைத்துப் பொருட்களாகவும் சிவபெருமான் இருக்கும் தன்மை, அனைத்தும் வேடமாம் என்ற சொற்றொடர் மூலம் குறிக்கப்படுகின்றது. அனைத்தும் வேடமாம் என்ற தொடருக்கு, எவரெவர் எந்தெந்த கோலத்தினை விரும்புகின்றாரோ அந்த கோலத்தில் காட்சி அளிப்பவன் சிவபெருமான் என்றும் விளக்கம் சிலர் கூறுகின்றார்கள்.

பொழிப்புரை

மதம் பிடித்தமையால் மிகுந்த ஆவேசத்துடன் தாக்கவந்த யானையின், பனை மரத்தினைப் போன்று பருத்து வலிமையுடன் காணப்படும் துதிக்கையை கொண்டிருந்த யானையின் தோலினை உரித்துக் கொன்றவன் சிவபெருமான். தன்னை நினைப்பவர் மனத்தினைக் கோயிலாகக் கொண்டவன் சிவபெருமான்: பரந்த உலகமாகவும், அந்த உலகில் உள்ள அனைத்துப் பொருட்களாகவும் இருக்கும் சிவபெருமானை, அம்பலத்தில் கூத்தாடும் பெருமானை, நான் தினையளவு சிறிய நேரம் கூட மறக்காமல் எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருப்பேன்; தினைப் பொழுது சிவபெருமானை மறந்தாலும் நான் வாழ்வில் உய்வினை அடையமாட்டேன்.