82. காலை எழுந்து கடிமலர் - பாடல் 9
கதிர்களைச் செலுத்தி
பாடல் 9:
கடல்மணி வண்ணன் கருதிய நான்முகன்
தானறியா
விடமணி கண்டம் உடையவன் தான் எனை
ஆளுடையான்
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார்
சடை மேல்
படமணி நாகம் அன்றோ எம் பிரானுக்கு அழகியதே
விளக்கம்:
இந்த தலத்தில் சூரியன் சிவவழிபாடு செய்து பலன் பெற்றான். இதனை உணர்த்தும் வகையில் சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். சூரியனின் கதிர்கள் சுவாமி சன்னதியில் சென்று விழுவதை, சூரியக் கதிர்களால் நீராடும் இறைவன் என்று அப்பர் கூறுகின்றார். சூரியன் செய்த வழிபாட்டினை, பொய் விரா மேனி தன்னை என்று தொடங்கும் பதிகத்தின் (4.41) எட்டாவது பாடலில் குறிப்பிடும் அப்பர் பிரான், சூரியனைப் பின்பற்றி நாமும் அவரைப் போன்று சிவபெருமானை வழிபடவேண்டும் என்று தூண்டுகின்றார். இன்னொருவரை வணங்குவதால் சூரியனை கடவுளாக கருத வேண்டாம் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். சூரியனை தனது வலது கண்ணாக ஏற்று தன்னுடன் சிவபிரான் வைத்துக் கொண்டுள்ள செய்தியும் இந்த பாடலில் கூறப்படுகின்றது.
அம் கதிரோன் அவனை அண்ணலாக் கருத வேண்டா
வெம் கதிரோன் வழியே போவதற்கு அமைந்து கொள்மின்
அம் கதிரோன் அவனை உடன் வைத்த ஆதி மூர்த்தி
செங்கதிரோன் வணங்கும் திருச்சோற்றுத் துறையனாரே
பொழிப்புரை:
அடியைக் கண்டு விடலாம் என்று பன்றி உருவெடுத்து நிலத்தைத் தோண்டி கீழே சென்றவனும் கடலின் நிறம் கொண்டவனும் ஆகிய திருமால் மற்றும் முடியைக் கண்டு விடலாம் என்று கருதி அன்னமாய் பறந்து சென்ற நான்முகன் ஆகியோரால் அறிய முடியாதவன் சிவபெருமான்: பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சினைத் தான் உண்டு, அந்த விடத்தை கருமணி போன்று கழுத்தில் தேக்கிய சிவபிரான் என்னை ஆட்கொண்டவன் ஆவான். சோற்றுத்துறையில் உறையும் அவனது திருமேனி மேல். சூரியன் தனது கதிர்களைச் செலுத்தி அவனை நீராட்டி வழிபடுகின்றான். அவனது திருமுடி மீது, இரத்தினங்களைத் தனது கழுத்தில் கொண்டுள்ள பாம்பு படர்ந்து மிகவும் அழகாக காணப் படுகின்றது.
Advertisement