உங்களுக்குத் தெரியுமா..?

உங்களுக்குத் தெரியுமா..? தமிழ்நாட்டு மருத்துவக் கல்வி தோற்றமும் வளர்ச்சியும்!

DIN


தமிழர்களுக்கென்று சிறப்பான நாகரீகம் உண்டு என்பதை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுப்பதற்கில்லை. தமிழ் நாகரீகம் எந்த அளவு பரவியிருந்தது என்பதற்கும், அதன் சிறப்புக்கும் சங்ககால இலக்கியங்களே சாட்சி. நாகரீகம் வளர்ந்த சமுதாயத்தில் உடல் நலனை பாதுகாக்க பல்வேறு அம்சங்கள் இருப்பதைப் போலவே, மருத்துவ முறையும் இயற்கையாகவே இருக்க வேண்டும். எனினும், இருக்கும் ஆதாரங்கள் வைத்து பார்த்தால் தமிழகத்தில் சிறந்த மருத்துவ முறை இருந்ததை தெரிந்துகொள்ள முடியும். மனிதகுலத்தின் வரலாறு எவ்வளவு பழமையானதோ அதே அளவுக்கு மருத்துவத்தின் வரலாறும் பழமையானதாகும். தமிழ் இலக்கியத்தின் புனித நூலான திருக்குறளில் மருத்துவம் பற்றிய மனித சிந்தனைகள் பெருமளவில் இடம் பெற்றிருக்கின்றன. 

காலப்போக்கில் தமிழக மருத்துவத்திற்கு சித்த மருத்துவம் எனப் பெயர் வந்தது. இந்த மருத்துவத்தை சித்தர்கள் செய்ததால் அதற்கு அவ்வாறு பெயர் வந்தது. சமண மதத்தவர்கள் தமிழகம் வந்தபிறகு தமிழக மக்களின் வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவக் கல்வியை குறிப்பாக சித்த மருத்துவக் கல்வியை பரப்புவதில் ஆர்வமாக இருந்ததால், தமிழகத்தில் மருத்துவம் பரவியது.

இந்தியா முழுவதும் சித்தர்கள் பரவியிருந்தாலும் அவர்களின் மருத்துவ நூல்கள் தமிழ் மொழியில் மட்டும்தான் எழுதப்பட்டிருந்தன. எனவே, சித்த மருத்துவம் தமிழ் மருத்துவம் என்றும் அழைக்கப்பட்டது.

தமிழகத்தில் மருத்துவக்கல்வி வரலாறு: கிபி 900 - 1200 ஆண்டு சோழர்கால கல்வெட்டுகளில் இருந்து தென்னிந்தியாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் குறித்த தகவல்களை அறிய முடியும். அவற்றில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் நகரில் அமைந்திருக்கும் 1067 ஆண் ஆண்டின் வீர ராஜேந்திர சோழனின் கல்வெட்டு குறிப்பிடத்தக்கவை. இந்த கல்வெட்டுகளில் மருத்துவக் கல்லூரி, விடுதிகள்ஸ மருத்துவமனை போன்றவற்றை பற்றி விவரங்கள் பெற முடிகிறது. 

அந்தக்காலத்தில் திருமுக்கூடல் நகரில், வைத்திய சாலை(அதுல சாலை) என்ற பெயரில் ஏராளமான மருத்துவமனைகள் இருந்துள்ளன. இவை ஒவ்வொன்றிலும் 15 படுக்கைகள், ஒரு அறுவை மருத்துவர், இரு செவிலியர்கள், ஒரு முடி திருந்துபவர் மற்றும் இரு பணியாளர்கள் இருந்துள்ளனர். மருத்துவர்களுக்கு வைத்திய விரித்த அல்லது வைத்யகம் என்ற பெயரில் ஊதியம் வழங்கப்படும். அதுமட்டுமின்றி தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் சவர்னன் என்ற பெயரில் பரம்பரை மருத்துவர் ஒருவரும் இருந்துள்ளார். நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறிய கிளினிக் இருக்கும் அந்த கிளினிக்கில் இருக்கும் மருத்துவவரை வைத்தியன் என்றும், அறுவைசிகிச்சை மருத்துவரை கள்ளி யாக்கிரயாய் செய்வான் என்று அழைப்பது வழக்கம். 

தமிழகத்தில் அலோபதி என்ற புதிய மருத்துவமுறை ஐரோப்பியர்களால் குறிப்பாக ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தொடக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் நோயுற்ற போர்வீரர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்காகத்தான் மேலைநாட்டு மருத்துவமனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இவை வளர்ச்சியடைந்து அரசு மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவம் அளிக்கும் விரிவான மருத்துவ முறையாக மாற்றம் பெற்றது. 

சென்னை: சென்னையில் முதல் மருத்துவமனை 1664 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ கோகன் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து தொடங்கப்பட்டது. அப்போது அந்த மருத்துவமனைக் கட்டிடத்திற்கு மாத வாடகையாக அப்போதைய நாணயமான 2 பகோடாக்கள் தரப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல் மருத்துவமனை தொடங்கப்பட்ட நகரம் என்ற பெருமையை சென்னை பெற்றது. அதன்பின்னர் இங்கிலாந்து போர் வீரர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்காக 1679 ஆம் ஆண்டு சென்னையில் ராணுவ மருத்துவமனை தொடங்கப்பட்டது. 1745 ஆம் ஆண்டு சென்னையில் கடற்படை மருத்துவமனை தொடங்கப்பட்டு 1790 ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்து வந்தது. அதுவரை அங்கு சிகிச்சை பெற்று வந்த கடற்படை வீரர்கள், அதன்பிறகு காரிசான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து 1808 ஆம் ஆண்டு புதிய கடற்படை மருத்துவமனை கட்டப்பட்டது. இது 1831 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்து வந்தது. அதன்பின்னர் துப்பாக்கி ஊர்தி மருத்துவமனையாக மாற்றப்பட்டது. 

1816 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி சென்னையில் வெளியடப்பட்ட பொது அறிவிப்பின் மூலம், சென்னையில் 983 பகோடா செலவில் தொழு நோயாளிகளுக்கான தனி மருத்துவமனை அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த மருத்துவமனை சென்னை அரசு தொழுநோய் மருத்துவமனை என பெயமாற்றம் செய்யப்பட்டது. 1921 ஆம் ஆண்டு வெலிங்டன் பிரபு ஆட்சிக் காலத்தில் அந்த மருத்துவமனை மூடப்பட்டது. அதற்குபதிலாக செங்கல்பட்டில் வெலிங்டன் தொழுநோய் மருத்துவமனை என்ற பெயரில் புதிய மருத்துவமனை கிற்ஸ்துவ அறக்கட்டளை மூலமாக தொடங்கப்பட்டது. 1819 ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் இந்தியாவின் மிகப்பழமையான கண்மருத்துவமனை தொடங்கப்பட்டது. 

தோற்றமும் வளர்ச்சியும்: தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலம் 1835 ஆம் ஆண்டுதான். அந்த ஆண்டில் இருந்துதான் கிழக்கிந்திய நிறுவனத்தின் சென்னை மாகாண அரசு மருத்துவக்கல்வியை முறைப்படி அங்கீகராம் அளித்து ஊக்குவிக்கத் தொடங்கியது. 

இந்தியாவின் தலைச்சிறந்த மருத்துவக்கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் சென்னை மருத்துவக்கல்லூரி 1835 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி சென்னை மருத்துவப்பள்ளி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இதனை அப்போதைய அரசின் ஆணைப்படி, ஆளுநர் பிரடெரிக் ஆதம் திறந்துவைத்தார். இந்த மருத்துவப் பள்ளியின் முதல் வகுப்பு 1835 ஆண் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி தொடங்கியது. 1838 ஆம் ஆண்டு தனியார் மாணவர்களும் இந்த மருத்துவப் பள்ளியில் சேர அனுமதி அளிக்கப்பட்டது. இந்த பள்ளியில் அனைவருக்கும் இலவச மருத்துவம் அளிக்கப்பட்டது.  அதன்பின் ஆண்டுகள் செல்லச் செல்ல ஏராளமான மாணவர்கள் இந்த பள்ளியில் சேர்ந்து படிக்கத்தொடங்கினர். இதனால் சென்னை மருத்துவப்பள்ளியின் புகழ் வேகமாக பரவியதால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனமாக மாறியது. மும்பை மற்றும் கொல்கத்தா மருத்துவ பள்ளிகளுக்கு இணையானதாக கருதப்பட்டது. 1850 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சென்னை மருத்துவ மருத்துவப் பள்ளி தரம் உயர்த்தப்பட்டு சென்னை மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்டது. 

1851 ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநராக இருந்த சர் ஹென்றிபோர்ட் சென்னை பல்கலைக்கழத்தின் மூலம் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி வழங்கப்பட வேண்டும் வலியுறுத்தினார். இதனிடையே அதாவது 1854 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியை மருத்துவம் மற்றும் அறுவை மருத்துவத்திற்கான காலணி பள்ளிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என லண்டனில் உள்ள ராயல் காலேஜ் சர்ஜனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை 1855 ஆம் ஆண்டு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

1863ல் 1857 ஆம் ஆண்டின் 27வது சட்டத்தின்படி சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்திற்கு மருத்துவப்பட்டங்கள் மற்றும் பட்டயங்ககளை வழங்கும் தனி உரிமை தரப்பட்டது. அதன்படி, மருத்துவக் கல்வியில் பட்டம் பெற விரும்புபவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை நடத்தும் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறுவது அவசியம் என்று சென்னை அரசு அறிவித்தது. 

சென்னைப் பல்கலைக்கழகம் 1857 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தாலும், 1863 ஆம் ஆண்டில்தான் அதற்கு தேர்வு நடத்தி பட்டம் வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.

தேர்வு நடத்தி பட்டம் வங்கும் அதிகாரம் சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் ஏற்படுத்தப்பட்டது. இது மருத்துவக்கல்லூரி வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  அதன்பின்னர் சென்னை மருத்துவக்கல்லூரி வேகமாக வளர்ந்து, அனைத்து திசைகளிலும் திறன் பெற்று முழுமையும் தற்சார்ப்பும் பெற்றது. 

1857 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட பொதுஆணையின்படி சென்னை மருத்துவக்கல்லூரியில் மற்றொரு புதிய வரலாறு படைக்கப்பட்டது.  அந்த ஆணையின்படி பால்ஃபர் நகரில் உள்ள தலைமை அறுவை மருத்துவரின் பரிந்துரையை ஏற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் பெண்களை சேர்ப்பது பற்றி வேறு எந்த மருத்துவக் கல்லூரி நினைத்துக் கூட பார்க்காத நிலையில் சென்னைக் கல்லூரி இதை சாதித்து. அந்த நேரத்தில் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தில் கூட மருத்துவக் கல்லூரிகளில் கூட பெண்கள் சேர்க்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

வைக்கோல் கட்டு ஏற்றிவந்த மினி லாரியில் தீப்பிடித்து விபத்து

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT