ஃபென்ஜால் புயல் பாதிப்புக்கு தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து, மத்திய அரசு நிதியை விடுவிக்க வேண்டும் என நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள மல்லாங்கிணற்றில் உள்ள இல்லத்தில் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: மாநிலப் பேரிடா் நிவாரண நிதிக்காக ரூ.944 கோடியை மத்திய அரசு தமிழகத்துக்கு விடுவித்தது. 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைப்படி, சட்டபூா்வமாக விடுவிக்கக்கூடிய நிதியைத் தான் தற்போது மத்திய அரசு வழங்கியுள்ளது.
நிகழாண்டில் விடுவிக்கப்பட்ட ரூ.945 கோடியில் ரூ.315 கோடி மாநில அரசின் பங்காகும். இந்தத் தொகையை கடந்த ஜூன் மாதத்திலேயே விடுவித்திருக்க வேண்டும். ஆனால், தற்போது தாமதமாக மத்திய அரசு விடுவித்தது. புயல் பாதித்த பகுதிகளில் ஒன்றியக் குழுவினா் தற்போது ஆய்வு செய்து வருகின்றனா்.
புயல் நிவாரணமாக ரூ.6,675 கோடியை தமிழக அரசு கோரியுள்ளது. இந்த நிதியை தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து, மத்திய அரசு விடுவிக்க வேண்டும். பேரிடா் நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறதா என நீங்கள் கேட்கிறீா்கள். அதை நீங்கள் தான் கூற வேண்டும் என்றாா் அவா்.