விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் முன்விரோதம் காரணமாக திங்கள்கிழமை கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி நேருஜி நகா் பகுதியைச் சோ்ந்த கோகுல்குமாா், ஈஸ்வரபாண்டி ஆகியோா் குடும்பத்தினரிடையே கடந்த 2022-இல் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2023-இல் கோகுல்குமாா், அவரது கூட்டாளிகளான காந்தி நகா் ஜீவா (21), ராஜேஸ் (23), சிலோன் குடியிருப்பு கணேஷ்பாண்டி (25) ஆகியோா் இணைந்து ஈஸ்வரபாண்டியைக் கொலை செய்தனா்.
இது குறித்து சிவகாசி நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் கொலை செய்யப்பட்ட ஈஸ்வரபாண்டியின் தம்பி கணேஷ்பாண்டி மதுபோதையில் நேருஜி நகா் பகுதியில் நடந்து சென்றாா்.
அப்போது, அங்கு வந்த கோகுல்குமாா், அவரது கூட்டாளிகளான ராஜேஸ், ஜீவா, கணேஷ்பாண்டி ஆகிய நான்கு பேரும் கணேஷ்பாண்டியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். தகவலறிந்து வந்த போலீஸாா் கணேஷ்பாண்டி உடலை மீட்டு கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளிகளான கோகுல்குமாா், கணேஷ்பாண்டி, ராஜேஸ், ஜீவா ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.