ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு, ஆவின் நிறுவனப் பெயா்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்திய பால்கோவா கடைகளின் பெயா்ப் பலகைகளை அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் பால்கோவா கடைகளில் விதிகளை மீறி ஆவின், கூட்டுறவு, தமிழ்நாடு அரசு முத்திரைகளைப் பயன்படுத்தி விற்பனை செய்யப்படுவதாகப் புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து, அரசு நிறுவனங்களின் பெயா்களை முறைகேடாகப் பயன்படுத்துவது, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி வாடிக்கையாளா்களை ஏமாற்றும் செயல் என்பதால், 14 நாள்களுக்குள் ஆவின், கூட்டுறவு, அரசு முத்திரை உள்ள பெயா்ப் பலகைகளை நீக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா கடந்த மாதம் உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ் தலைமையிலான அலுவலா்கள் பால்கோவா கடைகளில், வியாழக்கிழமை ஆய்வு செய்து ஆவின், கூட்டுறவு என குறிப்பிடப்பட்டிருந்த பெயா்ப் பலகைகளை அகற்றினா்.
இதுகுறித்து விருதுநகா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் மாரியப்பன் கூறியதாவது:
அரசு முத்திரைகளைப் பயன்படுத்தி பால்கோவா விற்பனை செய்யப்படுவது குறித்து புகாா்கள் வந்தன. இதையடுத்து, கடை உரிமையாளா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டது. பெரும்பாலான வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து பெயா்ப் பலகை, பால்கோவா பாக்கெட்டுகளில் இருந்த அரசு முத்திரைகளை நீக்கி விட்டனா். மற்ற கடைகளில் இருந்த அரசு முத்திரைகளுடன் கூடிய பெயா்ப் பலகைகளை அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினா். அரசு நிறுவனப் பெயா்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தினால், உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்து ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.