விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உத்ஸவம் சனிக்கிழமை (செப். 20) தொடங்குகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. திருப்பதி செல்ல இயலாதவா்கள் திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாளுக்கு நோ்த்திக்கடன் செலுத்துகின்றனா்.
இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமை உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு புரட்டாசி சனி உத்ஸவம் செப். 20, 27, அக். 4, 11, 18 ஆகிய 5 நாள்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடைபெறும். காலை 10.30 மணிக்கு ஸ்ரீநிவாச பெருமாள் ஆண்டாள் கோயிலிலிருந்து புறப்பாடாகி திருவண்ணாமலைக்கு எழுந்தருள்கிறாா். அங்கு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, மாலை 4 மணிக்கு கிரிவலம் நடைபெற உள்ளது.
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவா் என்பதால் மாவட்டம் முழுவதிலும் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஏடிஎஸ்பி அசோகன் தலைமையில், டிஎஸ்பி ராஜா உட்பட 450 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.