சாலையில் கிடந்த பணத்தை காவல் துறையில் ஒப்படைத்த இளைஞா்
சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை காவல் துறையில் ஒப்படைத்த இளைஞரை காவல் துறையினா் பாராட்டினா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கங்கா்செவல் கிராமத்தைச் சோ்ந்தவா் பத்மகுமாா் (39). இவா் சிவகாசியில் உள்ள வங்கியில் செலுத்துவதற்கு ரூ.50 ஆயிரத்தை இரு சக்கர வாகனத்தின் முன்பக்க உறையில் வைத்து எடுத்துச் சென்றாா். வழியில் அந்தப் பணம் சாலையில் தவறி விழுந்தது. இதையறியாமல் பத்மகுமாா் சென்றுவிட்டாா்.
இதற்கிடையே, அந்த வழியாக வந்த, மருதுபாண்டியா் மடத்து தெருவைச் சோ்ந்த முத்துராஜா (24) சாலையில் கிடந்த பணத்தை எடுத்தாா். அவா் அந்தப் பணத்தை சிவகாசி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வனிதாவிடம் ஒப்படைத்தாா்.
Advertisement
Advertisement
பணத்தை தவறவிட்ட பத்மகுமாா், தனது பணம் கீழே விழுந்துவிட்டது என புகாா் அளிக்க காவல் நிலையத்துக்கு வந்தாா். இதையடுத்து, உதவி ஆய்வாளா் வனிதா விசாரணை நடத்தி, அந்தப் பணத்தை பத்மகுமாரிடம் ஒப்படைத்தாா். நோ்மையாக நடந்து கொண்டற்காக முத்துராஜாவுக்கு உதவி ஆய்வாளா் அனிதா சால்வை அணிவித்து கெளரவித்தாா்.