பங்குச்சந்தை முதலீடு போலவே கிரிப்டோகரன்சி எனும் டிஜிட்டல் முதலீடு மோசடியும் தற்போது வேகமாக அதிகரித்து வருகின்றன.
எதிர்காலத்திற்காக பல வகைகளில் சேமிப்பை மேற்கொள்ளும் மக்கள், இதுபோன்ற மோசடிகள் மூலமாக பணத்தை இழந்துவருவது தொடர்ந்து வருகிறது.
கிரிப்டோகரன்சி என்பது என்ன?
கிரிப்டோகரன்சி என்பது ஒரு வகையான டிஜிட்டல் பணம். இதற்கு வடிவம் கிடையாது. டிஜிட்டல் வடிவத்தில் மட்டுமே இருக்கும். பிட்காயின் இதற்கு ஒரு உதாரணம் ஆகும். இந்த பரிவர்த்தனைகளைப் பாதுகாக்கவும் சரிபார்க்கவும் கணினி சார்ந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளோ அல்லது எந்தவொரு அரசு நிறுவனமோ இதைக் கட்டுப்படுத்தாது, உலகம் முழுவதும் பரவலாக தன்னிச்சையாக இயங்கக் கூடியது.
பிளாக் செயின் என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக இதுகுறித்த விவரங்கள் பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கண்ணுக்குத் தெரியாத இந்த டிஜிட்டல் சேமிப்பில் பலரும் முதலீடு செய்து வருகின்றனர்.
ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் போன்று தங்கள் பணத்தை பிட்காயின் அல்லது ஏதோவொரு டிஜிட்டல் வடிவில் மாற்றி சேமிப்பதே இந்த முதலீடு. பங்குச்சந்தை போன்று இதன் மதிப்பும் ஏறவும் இறங்கவும் வாய்ப்புள்ளது.
கிரிப்டோகரன்சி மோசடி
கிரிப்டோகரன்சியில் முதலீடு என்று கூறி தற்போது லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் மோசடி நடக்கிறது.
மோசடி கும்பல், பெரும்பாலும் டெலிகிராமில் போலி கிரிப்டோ வர்த்தக சேனல்களை உருவாக்குகின்றன. தங்கள் கிரிப்டோ வர்த்தகத்தில் செய்த சாதனைகள் என்று போலி சான்றிதழ்களை, ஆவணங்களை உருவாக்கி டெலிகிராம் மூலமாக பரப்புகின்றனர். அந்த ஆவணங்களை நம்பி பலரும் முதலீடு செய்து வருகின்றனர்.
முதலீடு செய்ய ஆர்வமுடன் இருப்பவர்களை குறிவைத்து 'குறைந்த முதலீடு, அதிக லாபம்' என்று கூறி அவர்களிடம் விளம்பரப்படுத்தி முதலீடு செய்ய வைக்கின்றனர்.
அதன்படி வங்கிக்கணக்கில் இருந்து பணம் பரிமாற்றப்பட்டவுடன் மோசடி கும்பல் காணாமல் போய்விடுகின்றது.
பங்குச்சந்தை மற்றும் கிரிப்டோகரன்சி முதலீட்டில் அதிகம் பேர் அதிக அளவில்நஞ் பணம் ஏமாற்றப்பட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசார் கூறுகின்றனர்.
செய்ய வேண்டியது என்ன?
1. டெலிகிராம் அல்லது சமூக ஊடகங்களில் வரும் கிரிப்டோ வர்த்தக இணையதளங்கள் அல்லது சேனல்களின் நம்பகத்தன்மையை கண்டிப்பாக சரிபார்க்கவும். அதைப்பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால் நிதி சார்ந்த துறைகளில் வேலை செய்வோரை அல்லது நிபுணர்களை அணுகி சரிபார்த்துவிட்டு பின்னர் முதலீடு செய்ய வேண்டும்.
2. 'குறைந்த முதலீடு, அதிக லாபம்' என்று உத்தரவாதம் அளிக்கும் திட்டங்களைத் தவிர்த்துவிடுங்கள்.
3. ஏற்கனவே கிரிப்டோ வர்த்தகத்தில் முதலீடு செய்தவர்களின் அனுபவங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அதன்மூலம் நம்பகமான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்.
3. கிரிப்டோ வர்த்தக வாலட் கீ போன்ற சுய/ தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம்.
4. முதலீடு செய்வதற்கு முன் நிறுவனத்தின் தற்போதைய நிலவரம், லாப அறிக்கைகள் ஆகியவற்றை சரிபார்ப்பது அவசியம்.
5. ஆன்லைன், சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களை ஒருபோதும் நம்ப வேண்டாம்.
6. உங்களுடைய தொலைபேசி எண்ணை தவறுதலாக தொடர்புகொண்டதாகவும் வேலைவாய்ப்பு தருகிறோம் என்று கூறியோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் 'நண்பர் அழைப்பு' மூலமாகவோ உங்களை முதலீடு செய்யத் தூண்டுகின்றனர்.
7. உங்களுடைய மனநிலையை புரிந்துகொண்ட உங்களிடம் நண்பராகப் பழகி நம்பிக்கை ஏற்பட்ட பின்னர் முதலீடு செய்யக்கூடி பலர் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
8. போலி கிரிப்டோ வர்த்தக மோசடி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.