விழிப்புணர்வு: புள்ளிகள்! வெண்குஷ்டம்
"வெண்குஷ்டம் என்று அழைக்காதீர்கள்' என்ற தலைப்பில் ஓர் ஆவணப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. தயாரித்து வெளியிட்டவர்கள் சென்னை, மேற்கு தாம்பரத்திலிருக்கும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்-இந்தியா என்னு
"வெண்குஷ்டம் என்று அழைக்காதீர்கள்' என்ற தலைப்பில் ஓர் ஆவணப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. தயாரித்து வெளியிட்டவர்கள் சென்னை, மேற்கு தாம்பரத்திலிருக்கும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்-இந்தியா என்னும் தன்னார்வ அமைப்பினர்.
"வெண்குஷ்டம் என்று அழைக்காதீர்கள்... வெண்புள்ளிகள் என்று அழையுங்கள்' என்னும் விழிப்புணர்வு வரிகளை நீங்கள் பேசினால் இந்த நாடே கேட்கும்!'- என்று நாட்டின் பிரதமருக்கும், மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோள் வைக்கிறது இந்த ஆவணப்படம்.
சமூகத்தில் வெண்புள்ளிகள் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் குறித்தும், சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்களைக் குறித்தும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் உமாபதி நம்மிடம் பேசியதிலிருந்து...
""குஷ்டம் எனப்படும் தொழுநோய்க்கும், வெண்புள்ளிகள் எனப்படும் லூக்கோடெர்மாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தோலில் வெண்புள்ளிகள் தோன்றுவது நோயல்ல. நமது தோலுக்கு நிறத்தை அளிப்பது மெலனின் என்றழைக்கப்படும் நிறமி. இந்த மெலனினை உற்பத்தி செய்வது, தோலில் உள்ள "மெலனோûஸட்' என்ற பெயருடைய அணுக்களின் வேலை. இந்த அணுக்கள் கொல்லப்படும்போது, தோலில் வெள்ளை நிறப் புள்ளிகள் ஏற்படுகின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், நமது உடலில் இருக்கும் மெலனோûஸட்டை, நம் உடலிலேயே இருக்கும் இரத்த வெள்ளை அணுக்கள்தான் கொல்கின்றன! இப்படி உலகத்தில் இரண்டு சதவீதம் பேருக்கும், நமது நாட்டில் 3 சதவீதம் பேருக்கும், தமிழ்நாட்டில் 4 சதவீதத்தினருக்கும் நடக்கிறது.
அதனால் இந்த நிறமாறுபாட்டால் தாழ்வு மனப்பான்மை அடையவேண்டாம். கண்ட மாத்திரைகளை சாப்பிட வேண்டிய அவசியமில்லை. தவறான மருத்துவர்களை நாடவும் வேண்டியதில்லை. நாங்கள் அதற்கு ஆலோசனை தருகிறோம்.
வெண்புள்ளிகள் இருப்பவர்களால் சமூகத்தில், ஒரே குடும்பத்தில் இருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இது பரம்பரையாக தொடர்வது கிடையாது. தொற்றுவது கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதிலும் வெண்புள்ளிகள் தோன்றலாம். குடும்பத்தில் தாய், தந்தை யாருக்காவது வெண்புள்ளிகள் இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு 15 சதவீதம் மட்டுமே வெண்புள்ளிகள் தோன்றுவதற்கான சாத்தியம் இருக்கிறது. இதற்காக இதைப் பரம்பரையாக தோன்றும் நோய் என்று கூறுவது சரியாக இருக்காது.
நாங்கள் முதலில் வெண்புள்ளிகள் இருப்பவர்களுக்கு மன ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் விழிப்புணர்வு அளிக்கிறோம். அதன்பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு மனிதச் சங்கிலி, கட்டுரை, பேச்சுப் போட்டிகளின் வாயிலாகவும் வெண்புள்ளிகள் தொடர்பான உண்மை நிலவரங்களை மக்களிடம் கொண்டு செல்கிறோம்.
வெண்புள்ளிகளால் மருத்துவ ரீதியாக எந்தப் பாதிப்பும் இல்லை என்பது அறிவியல்பூர்வமான உண்மை. அதேநேரத்தில், சமூகத்தில் நிலவும் சில தவறான கருத்துக்கள், வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கையை வேதனைக்கு உள்ளாக்கிவிடுகிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.
ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அதிகாரி ஒருவருக்கு திருமண வயதில் இரண்டு மகள்கள். அவருக்கு வெண்புள்ளிகள் இருந்தன. ஆனால் அவர் குடும்பத்தில் யாருக்கும் இருக்கவில்லை. அவரின் மகள்கள் இருவரும் நல்ல அழகு. நல்ல படிப்பு. ஆனாலும் அவர்களைப் பெண் பார்த்துவிட்டுச் சென்ற மாப்பிள்ளை வீட்டினர், ஊருக்குப் போய் கடிதம் போடுகிறோம், ஃபோன் செய்கிறோம், ஈ-மெயில் அனுப்புகிறோம்... என்று தகுதிக்கு ஏற்ப சொல்லிவிட்டுச் சென்றார்களே தவிர, ஒருவரும் அந்தப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. மனம் வெறுத்துப் போன அந்தப் பெண்களின் தந்தை, "" உங்கள் திருமணம் தடைபடுவதற்கு இனியும் நான் காரணமாக இருக்கவிரும்பவில்லை. இனி யாராவது வரன்கள் வந்தால், எங்களின் தந்தை இறந்துவிட்டார் என்று சொல்லிவிடுங்கள்...' என்று மனம் நொந்து கூறியிருக்கிறார். "வெண்புள்ளிகள் ஒரு தொற்று நோய்' என்ற கருத்து இந்தச் சமூகத்தில் புரையோடிப்போயிருப்பதுதானே இதற்குக் காரணம்?
அதனால் இதுபோன்ற பொய்ப் பிரசாரங்களை மக்கள் கூடியிருக்கும் இடங்களில் வீதி நாடகங்கள் வழியாகவும், ஆவணப்படங்களின் வழியாக திரையிட்டும் முறியடிக்கிறோம். இலவச திருமண ஆலோசனை மையத்தின் மூலம் வெண்புள்ளிகள் உள்ளோருக்கு திருமணம் நடைபெற உதவுகிறோம்.
வெண்புள்ளிகள் இருப்பவர்களை வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அழைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்து அரசு ஆணையிட வேண்டும் என்பதுதான் எங்களின் இயக்கம் சார்பாக நாங்கள் வைக்கும் கோரிக்கை'' என்றார்.