முகப்பு
தினமணி கதிர்

பயணம்: அலல் ஜ்வோரா ஐலசா!

நாடாளும் மன்னர்களின் காவியத்தில் நான் தலைவன்...  நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்...'' - இந்தப் பாடலைப் பாடி நடித்த எம்.ஜி.ஆரையும் மறக்கமுடியாது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற அந

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:22 PM
பகிர்:

நாடாளும் மன்னர்களின் காவியத்தில் நான் தலைவன்...

 நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்...''

- இந்தப் பாடலைப் பாடி நடித்த எம்.ஜி.ஆரையும் மறக்கமுடியாது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற அந்த பிரம்மாண்டமான கப்பலையும் மறக்கமுடியாது. கப்பல் கட்டும் தொழிலில் இன்றைக்கு எத்தனையோ நவீனங்கள் வந்திருந்தாலும், இரும்புப் பொருள்களை (ஒரு ஆணி கூட) பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க மரங்களையும், கயிறுகளைப் பயன்படுத்தி மட்டுமே ஒரு கப்பலைக் கட்டி இலங்கையின் "கால்' என்னும் கடல் பகுதியிலிருந்து பினாங் வரை சென்றிருக்கின்றனர் ஓமன் நாட்டின் கடல் பயணக் குழுவினர். இந்தக் கப்பலை சிங்கப்பூரில் சேர்ப்பதுதான் நோக்கம். ஓமன் நாட்டைச் சேர்ந்த கடற் பயணக் குழுவில் நெதர்லாந்து, நியூஸிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கடற் பயணம் செய்பவர்கள் சேர்த்து 19 பேர் இருந்தனர். இந்தக் குழுவில் மூன்று இந்தியர்களும் இடம்பெற்றிருந்தனர். அதில் ஒருவர் மயிலை பிரபாகர் என்னும் தமிழர்! இவர் வளைகுடை நாட்டில் "அண்டர்-வாட்டர் என்ஜினீயரிங்' என்னும் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரானிக் என்ஜினீயராக பணியிலிருப்பவர்.

பிரபாகரிடம் இந்தப் பயணத்திற்கான காரணம் என்ன? அந்தக் குழுவில் உங்களை தேர்ந்தெடுத்தது எப்படி? எதற்காக இந்தப் பயணம்? என்று நிறைய கேள்விகளைக் கேட்டோம்.

""நம் நாட்டில் கடல் சார்ந்த அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. சமீபத்தில் இந்தோனேசியா கடல் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஓமன் நாட்டினருக்கு, கடலில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் மூழ்கிப் போன கப்பலின் சிதைவுண்ட பகுதிகள் கிடைத்துள்ளன. அந்தக் கப்பல் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஓமன் நாட்டின் சார்பாக அந்தக் கப்பலை மாதிரியாகக் கொண்டு ஒரு கப்பலைக் கட்டி அதை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அன்பளிப்பாக அளிக்க முடிவெடுத்தனர். இதற்காக கப்பல் கட்டும் தொழிலில் சிறந்து விளங்கும் பல இந்தியர்கள் அழைக்கப்பட்டனர். ஏறக்குறைய ஓராண்டுக்கும் மேலாக நடந்த கப்பல் கட்டும் பணி இரண்டு மாதங்களுக்கு முன்தான் முடிவடைந்தது. 18 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலத்தில் தேக்கு மரத்தில் கட்டப்பட்ட இந்தக் கப்பலில் என்னையும் சேர்த்து 19 பேர் பயணம் (மே 15 முதல் ஜூன் 2 வரை) செய்தோம். இதில் பயணம் செய்வதற்கு தகுந்தவர்களை பல நாடுகளிலிருந்தும் தேர்ந்தெடுத்தனர். ஓமன் நாட்டிலிருக்கும் இந்திய தூதரகம் என்னைப் பரிந்துரை செய்தது. அதனால் அதில் பயணிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வரலாற்று அறிஞர், ஜோதிட அறிஞர் என்று பலதரப்பட்டவர்கள் எங்களோடு பயணம் செய்தனர்.

ராஜராஜ சோழன் கடல் கடந்து படையெடுத்து பல நாடுகளைக் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்துள்ளார். இதற்கான குறிப்பு, ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் ஜி.பி.எஸ். கருவிகளும், அறிவியல் முன்னேற்றங்களும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி இதைச் செய்ய முடிந்தது என்பதற்கு நம்மிடம் எந்தவிதமான பதிவுகளும் இல்லை. கடல் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம்.

இலங்கையின் "கால்' பகுதியிலிருந்து நாங்கள் புறப்பட்ட இரண்டு நாட்களில் லைலா புயல் வலுத்தது. ஏறக்குறைய 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. ஒருசமயம் பாய்மரத்தின் கொடி மரம் உடைந்துவிட்டது. அதைச் சரி செய்து இரண்டு நாட்கள் பயணித்திருப்போம், அதற்குள் கப்பலில் வெளிச்சத்திற்காக கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் ரிப்பேராகிவிட்டது. நான் அடிப்படையில் எலக்ட்ரானிக் என்ஜினீயர் என்பதால் அதைச் சரி செய்தேன். குழுவின் கேப்டன் முதற்கொண்டு எல்லோரும் பாராட்டினர். சணலில் தயாரிக்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தையும் அந்தக் கப்பலிலேயே வழங்கி என்னைக் கெüரவித்தனர்.

நிக்கோபாரில் மிகவும் குறைவாக காற்று வீசியது. ஏறக்குறைய மூன்று நாட்கள் நிக்கோபார் கடல் பகுதியிலேயே கழிந்தது. அதன் பிறகுதான் காற்று வேகமெடுத்தது. பதினெட்டாவது நாள் பினாங்குக்கு நாங்கள் போய்ச்சேர்ந்தோம்.

குழுவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமை உடையவர்களாக இருந்தனர். நட்சத்திரங்களைக் கொண்டும் துருவ நட்சத்திரத்தின் கோணங்களைக் கொண்டும் திசைகளை கணிப்பவர்களாக இருந்தனர். அரபு நாட்டு மாலுமிகள் "கமால்' என்னும் (மூன்று கைகளை இணைத்தது போல் இருக்கும்) மரச் சட்டத்தைக் கொண்டு தூரங்களை கணக்கிடுகின்றனர். அதேபோல் அரபில் "ஸôம்' என்னும் சொல் நம்முடைய ஜாமத்தைக் குறிப்பதாக உள்ளது. கயிறு இழுக்கும் போது நாம் "ஐலசா...' என்று கோஷமிடுவோம். அதுபோல் அரபு மொழியில் "அலல் ஜ்வோரா' என்கின்றனர் ஒரு குழுவினர். இன்னொரு குழுவினர் "தேரி ஹும்' என்கின்றனர். இதற்கு அர்த்தம்: "நமது கப்பலுக்கு மேல் ஒரு பறவை பறக்கின்றது', "ஆமாம்!'

இந்தப் பயணத்தின் மூலம் பாய்மரக் கப்பல் செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வை பரப்புவதில் சிறிய பங்காற்றியிருக்கிறேன் என்பதில், தமிழ்நாடு செய்லிங் அசோசியேஷனில் உறுப்பினர் என்ற முறையில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. என்னுடைய மகன்கள் இருவரும் செய்லிங் செய்கிறார்கள். பெரியவன், பிரவீன் செய்லிங்கில் தேசிய சாம்பியனாக இருக்கிறான். இளையவன், நவீன் தற்போதுதான் "ஆப்டிமிஸ்டிக்' வகை செய்லிங்கில் நுழைந்திருக்கிறான். என்னுடைய மகன்கள் சென்னை வீதியில் சைக்கிள் ஓட்டப் போகிறார்கள் என்றால்தான் நான் பயப்படுவேன். கடலில் செய்லிங் செய்யப் போகிறார்கள் என்றால் எனக்கு பயமே இல்லை. பாதுகாப்பு படை வீரர்கள் தொடர, லைஃப் ஜாக்கெட் அணிந்து கொண்டு செய்லிங் செய்வதில் பாதுகாப்புக்கு குறைவேது?

"செய்லிங் என்றாலே அது பணக்காரர்களுக்கான பொழுதுபோக்கு என்ற மாயையை' எங்களின் தமிழ்நாடு செய்லிங் அசோசியேஷன் முறியடித்துவருகிறது. ஸ்ரீனிவாசபுரம் போன்ற மீனவக் குப்பங்களிலிருக்கும் ஆர்வமுள்ள சிறுவர்களுக்கும் செய்லிங் பயிற்சி அளிக்கிறோம். பல பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு செய்லிங் செய்வதால் தன்னம்பிக்கையும், சுதந்திரமாக முடிவெடுக்கும் திறனும் அதிகரிப்பதை அறிவுறுத்தி வருகிறோம். ஆர்வமாக வருபவர்களுக்கு பயிற்சியும் அளிக்கிறோம். அரசின் உதவியுடனும், உறுப்பினர்களின் ஆதரவுடனும் 40 செய்லிங் படகுகளை நாங்கள் வாங்கியிருக்கிறோம். மற்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டும் அரசு, செய்லிங் வளர்ச்சிக்கும் உதவினால் இன்னும் அதிகமாக செய்லிங் படகுகளை வாங்கலாம். இன்னும் அதிகமான குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கலாம். "செய்லிங் செய்; சுதந்திரத்தை அனுபவி' என்பதுதான் பெரும்பான்மையான குழந்தைகளின் கோஷமாக நாளை இருக்கும். இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம்'' என்றார் மயிலை பிரபாகர்.

முழு கட்டுரையைப் படிக்க →