ஏராளமான விளம்பர படங்களை இயக்கிய பெஞ்சமின் பிரபு இயக்கும் படம் "படம் பார்த்து கதை சொல்.' பல படங்களில் வில்லனாக நடித்த தருண் சத்யா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஷிகா நடிக்கிறார். தர்ஷன், ஹாரீஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ""துப்பாக்கி பிடித்த கரங்களால் காதலுக்காக பூச்செண்டு பிடித்தவனின் கதைதான் இந்தப் படம். ரவுடியாக இருக்கும் நாயகன் திடீரென காதல் வயப்படுகிறான். ஒரு சமயத்தில் காவல்துறை நாயகனுக்குக் குறி வைக்க, தன் காதலை அடைந்தானா என்பதுதான் கதை. படம் முழுக்க கன்னியாகுமரியில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.
மலை சார்ந்த பகுதிகள், குளச்சல் துறைமுகம், காற்றாலைகள், காடுகள் என இயற்கை சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பெண்களின் சபரிமலை எனப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயத்தில் படப்பிடிப்பு நடந்தது. இங்கு திருவிழா நடப்பது போல் படமாக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்று கூடி பொங்கல் வைப்பது போல காட்சி படமானது. இக்காட்சி நிச்சயம் பார்ப்போரை பரவசமாக்கும்.
இந்த காட்சிக்காக ஐந்து கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. ரேணிகுண்டா படத்துக்கு இசையமைத்த கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். நா.முத்துக்குமார், சினேகன், விவேகா, அண்ணாமலை ஆகியோர் பாடல் எழுதுகிறார்கள்'' என்றார் பெஞ்சமின் பிரபு.
அர்ஜுன் பாணி!
ஜெயராம் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம் "மகாராஜா'. சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். நாசர், கருணாஸ் முக்கிய வேடம் ஏற்கிறார்கள். சாமுராய் உள்ளிட்ட படங்களில் நடித்த அனிதா, சரண்யா, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நடிகர் அர்ஜுனின் மாணவர் மனோஹரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். படம் குறித்து அவர் பேசியது, ""இரண்டு தலைமுறைகளுக்கிடையே உள்ள பிரச்னைகளை மையமாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறேன். நாசருக்கும், சத்யாவுக்கும் இடையே நடக்கும் போட்டிதான் கதை. ""இத்தனை வருட சினிமாவில் எனக்கு கிடைத்த வித்தியாசமான கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று'' என நாசர் என்னிடம் சொன்னார்.
அர்ஜுனிடம் பல படங்களில் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளேன். கமர்ஷியல் அம்சங்கள் அவரின் படங்களில் அதிகளவில் இருக்கும். அதே பாணியில் இந்தப் படத்தை இயக்கி முடித்திருக்கிறேன். அஞ்சலிக்கு இந்தப் படம் வித்தியாசமான கோணத்தைக் கொடுக்கும். இயல்பான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், முதன் முறையாக கிளாமரில் நடித்திருக்கிறார். இமான் இசையமைப்பில் பாடல்கள் கவனத்தை ஈர்க்கும். இரண்டு தலைமுறைகளுக்கிடையேயான புரிதல் அமைந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதுதான் நான் இந்தப் படத்தின் மூலம் சொல்லும் கருத்து'' என்றார் மனோஹரன்.
உறவுகளைச் சுமந்து வரும் படம்!
ராசுமதுரவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள "முத்துக்கு முத்தாக' படத்தில் நடித்துள்ளார் வீரசமர். கலை இயக்குநராக இருந்த இவர் நடிகரானது பற்றி கூறியது, ""கலை இயக்குநராக இருந்த எனக்கு "வீரசேகரன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தன. இப்போது "முத்துக்கு முத்தாக' வாய்ப்பு.
ராசுமதுரவன் படங்கள் என்றாலே உறவுகளைச் சுமந்து வரும். அது மாதிரியான ஒரு படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. "முத்துக்கு முத்தாக' படத்தில் பாண்டி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன். முக்கிய காட்சிகளின் நகர்வுகளுக்கு என் கேரக்டர்தான் பொறுப்பு. அடுத்து விஜய் நடிக்கும் "வேலாயுதம்' படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறேன். "ஜெயம்' ராஜா அழைத்து இந்த வாய்ப்பைத் தந்தார்.
இதுவரை நடித்த காட்சிகளில் அவரின் பாராட்டுதலைப் பெற்றுள்ளேன். விஜய் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. அடுத்து பெயரிடப்படாத படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறேன்.
காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து இந்தப் படம் உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது'' என்றார் வீரசமர்.
காவியமான மை!
இந்தப் படத்துக்கு முதல்வர் கருணாநிதியின் பேனா மை மேன்மை கொடுத்திருக்கிறது. "மருதநாயகம்' படத்தை எடுக்க கமல் ஆயத்தமான போது, நடிகர் திலகம் சிவாஜி, இதை படமாக்காதே, அப்படி இருந்தால் இதை ஜாக்கிரதையாக கையாள வேண்டும். மீறி மாட்டிக் கொள்ளாதே என்றார். அது அப்போதே தடைப்பட்டது வேறு விஷயம்.
இப்போது அது போன்ற ஒரு கதை படமாகி இருக்கிறது. தியாகராஜனும், பிரசாந்தும் இந்தப் படத்துக்கு தன்னை மீறிய உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்த உழைப்புக்கு நிச்சயம் மதிப்பு இருக்கும். இதன் மூலம் அவர்கள் ஒரு படி மேலே போய் நிற்பார்கள்.
மூங்கிலில் நுழைந்த காற்று முக்தி பெற்று இசையாக திரும்பி வருவதைப் போல், முதல்வரின் பேனாவில் இருந்து விழுகிற மை காவியமாகி இருக்கிறது. கலீல் ஜிப்ரான் 18 வயதான இளம் பெண்ணை பார்க்கிறார். அப்போது அவருக்கு வயது 21. அந்த அனுபவத்தை இப்படி கவிதையாக்குகிறார். 21 கோடைகளையும், 21 வசந்தங்களையும் கடந்து வந்தது பெண்ணே உன்னை பார்ப்பதற்காகத்தானா..! பிரசாந்த் நீயும் அப்படித்தான். இத்தனை வருடத்தைக் கடந்து வந்தது. முதல்வரின் கதை வசனத்தில் இப்படியொரு படத்தில் நடிப்பதற்காகத்தான்.''
சமீபத்தில் நடந்த "பொன்னர் சங்கர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவ்வாறு பேசினார் கவிஞர் வைரமுத்து.
சொல்லாத கோணம்!
ஈஸ்ட் கோஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "காதல் டூ கல்யாணம்.' ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திவ்யா நடிக்கிறார். படம் குறித்து இயக்குநர் மிலிந்த் கூறியது,
""காதல் என்பது இரண்டு பேர் சம்பந்தப்பட்டது. கல்யாணம் இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்டது. காதலுக்குப் பின் கல்யாண ஏற்பாடுகள் நடக்கும் போது என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது என்பதைச் சுவாரஸ்யமாக சொல்லுவதுதான் கதை. காதலையும், கல்யாணத்தையும் இதுவரை யாரும் சொல்லாத கோணத்தில் இணைத்திருக்கிறேன். திவ்யா கார்ப்பரேட் கலாசாரத்தில் வளர்கிற பெண்ணாக நடித்திருக்கிறார்.
சத்யாவும், திவ்யாவும் பங்கேற்கும் காதல் காட்சிகள் மக்களின் ரசனைக்குச் சுவை சேர்க்கும். சத்யா இப்படத்தில் மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார்.
இதற்காக மும்பையில் உள்ள அனுபம்கெர் நடிப்பு பயிற்சி பள்ளியில் இரண்டு மாதம் பயிற்சி எடுத்தார். சிறப்பாக காட்சிகள் வந்துள்ளன. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார் மிலிந்த்.
போர் அடிக்காத ரீமேக்!
களவாணி' படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார் ஓவியா.
இது குறித்து அவர் கூறியது,
""களவாணி' படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இரண்டு ரீமேக்கிலும் நான் நாயகியாக நடிக்கிறேன். தற்போது கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறேன். கன்னடத்தில் பெரும் மாற்றங்களுடன் கதையை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரதீப் ராஜா. மழைப் பாடல் ஒன்றும் படத்தில் வருகிறது. கன்னட ரசிகர்களுக்காக அந்தப் பாடல் சேர்க்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் நிகிலுடன் நடித்து வருகிறேன். "களவாணி'யைத் தொடர்ந்து இரண்டு ரீமேக்கில் நடிப்பது போர் அடிக்கவில்லையா என்கிறார்கள். அப்படி நான் உணரவில்லை. "களவாணி' நான் பிடித்து நடித்த படம். முதல் படத்திலேயே ராசியான நடிகை எனப் பெயர் வாங்கிய படம். அந்த வாய்ப்பு தந்த சற்குணத்துக்கு நன்றி. "களவாணி' படம் போல் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் பெயர் வாங்கி விட வேண்டும் என்பதுதான் என் ஆசை.
இப்போது தமிழில் வெளியாகி உள்ள "முத்துக்கு முத்தாக' படத்துக்கு நல்ல வரவேற்பு. முதன் முதலாக நகரத்து பெண்ணாக நடித்ததில் மகிழ்ச்சி'' என்றார் ஓவியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.