முகப்பு
தினமணி கதிர்

மேடை: ராமானுஜர் 1000

ராமானுஜர் பிறந்த ஆயிரமாவது ஆண்டு இது. சாதி, மதம் கடந்து மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வலியுறுத்திய ஆன்மிகப் பெரியவர். பெண்களைச் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வைத்துப் பா

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:39 PM
பகிர்:

ராமானுஜர் பிறந்த ஆயிரமாவது ஆண்டு இது. சாதி, மதம் கடந்து மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வலியுறுத்திய ஆன்மிகப் பெரியவர். பெண்களைச் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்த்த பெண் விடுதலை சிந்தனையாளர்.

ஜீவாத்மாவின் நோக்கமே பரமாத்மாவோடு ஐக்கியமாவதுதான் என்பதை உலகுக்கு உரைத்தவர். ஆன்மிக வழியில் சமூக சீர்திருத்தத்தை இந்த மண்ணில் உண்டாக்கியவர். ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாளையொட்டி "ஸ்ரீ ராமானுஜர்' என்னும் நாடகத்தை சமீபத்தில் சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள பெருமாள் கோயில் ஒன்றில் அரங்கேற்றினர், காஞ்சி காமகோடி திருப்புகழ் யோகமண்டலியைச் சேர்ந்த ரமணி குழுவினர்.

ராமானுஜரின் 120 ஆண்டுகால பெருவாழ்வை மூன்று மணிநேர நாடகமாக்கி இருக்கின்றார் ரமணி. கதை மாந்தர்களாக பெரும்பாலும் குழந்தைகளே நடித்திருப்பது மிகவும் சிறப்பாக இருந்தது. வயதான ராமானுஜரின் பாத்திரத்தில் மட்டுமே ரமணி நடித்திருக்கிறார். நாடகத்தில் ராமானுஜரைப் பற்றியும் அவரது வாழ்க்கையில் நடந்த பல சுவையான சம்பவங்களைப் பற்றியும், இன்றளவும் நடைமுறையில் இருக்கும் பல சான்றுகளைப் பற்றியும் நம்மிடம் ரமணி பகிர்ந்து கொண்டதிலிருந்து...

""ராமானுஜர் பெண் விடுதலைக்கும், சமூகத்தில் அவர்கள் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்பதற்கும் விரும்பிய புரட்சியாளர் என்றே சொல்லலாம். அவருடைய கருத்துகளும், பெண்களுக்கு அவர் அளித்த முக்கியத்துவமும்தான் ராமானுஜராக நான் நடிப்பதற்குரிய தைரியத்தை எனக்குக் கொடுத்தது.

அவரது இளமைப் பருவம் முதல் அவர் சமாதியாகும் வரை சாதி, மதங்களைக் கடந்து அனைவரையும் சமமாகப் பார்க்கும் கொள்கையைக் கொண்டிருந்தார்.

இந்தப் பக்குவம் அவர் குழந்தைப் பருவத்தில் இருக்கும் போதே அவருக்கு இருந்தது. சிறு வயதில் தன் வயதையொத்த வேற்று சாதிச் சிறுவர்கள் அவரின் வீட்டிற்கு வருவதை ராமானுஜரின் பெற்றோர்கள் தடுக்க, நான் அவர்களோடு வெளியே போய் விளையாடுகிறேன் என்று சொல்லுவார்.

ராமானுஜர் தன்னுடைய குருவாக தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த திருக்கச்சி நம்பிதான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் சாதிப் பாகுபாட்டைக் காரணம் காட்டி, ராமானுஜரின் விருப்பத்தை மறுக்கிறார் திருக்கச்சி நம்பி. ராமானுஜரின் சேவை மனப்பான்மையை உணர்ந்த ஸ்ரீரங்கத்திலிருக்கும் ஆளவந்தார் தன்னுடைய சீடர் பெரிய நம்பியின் மூலம் காஞ்சியிலிருக்கும் ராமானுஜருக்கு மூன்று கட்டளைகளை இடுகிறார்.

 பிரம்ம சூத்திரத்திற்கு எளிய விளக்கத்தை எழுத வேண்டும், வைணவ வேதங்களை மக்கள் மறக்காமல் இருக்கச் செய்ய வேண்டும், வியாசர், பராசரர் போன்றவர்களின் புகழை மக்கள் மறக்காமல் காப்பாற்ற வேண்டும். இந்த மூன்று கட்டளைகளை ராமானுஜரைச் செய்யச் சொல்லுகிறார் பெரிய நம்பி. பின்னாளில் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த பெரிய நம்பியையே தன்னுடைய குருவாக ஏற்றுக் கொள்கிறார் ராமானுஜர்.

அரசனையும், ஆண்டியையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் பக்குவம் ராமானுஜருக்கு உண்டு.

அதனால்தான் தன் சீடர்களிலேயே முதலியாண்டான் என்னும் பெருமையை கூரத்தாழ்வாருக்கு ராமானுஜர் கொடுத்தார். (கூரம் என்னும் ஊர் இன்றும் இருக்கிறது) கூரத்தாழ்வார் தன்னை மன்னர் என்னும் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டு தன் மனைவியோடு ராமானுஜரோடு சமூகப் பணிகளில் ஈடுபட்டவர்.

உறங்கா வில்லி என்னும் மல்யுத்த வீரன், தன் மனைவியின் கண்ணழகை விடச் சிறந்த அழகு வேறெதுவும் இல்லை என்னும் முடிவோடு இருப்பவன். அவனுக்கு பெருமாளின் கண்களைத் தரிசனப்படுத்துகிறார் ராமானுஜர். அந்த உண்மையான அழகின் தரிசனத்தில் தன்னைப் பறிகொடுத்த உறங்காவில்லி, ராமானுஜரின் குழுவில் வில்லி தாசனாகிறான்!

ஸ்ரீரங்கத்தில் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த பலரையும் ஆலயப் பிரவேசம் செய்யவைக்கிறார் ராமானுஜர். அதனால் அங்கிருந்த உயர்ந்த சாதியைச் சேர்ந்த பலரின் எதிர்ப்புக்கு ஆளாகிறார். ஒருகட்டத்தில், உணவில் விஷம் கலந்து அவரைக் கொல்ல சதி நடக்கிறது. இதை உணர்ந்து கொண்ட ராமானுஜர், "நான் எல்லாரையுமே நாராயணனாகத்தான் பார்க்கிறேன்...

அப்படியிருக்க ஒரு நாராயணனுக்கு நான் வாழ்வது பிடிக்கவில்லை என்றால், நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை... சாப்பிடாமல் என் உயிரை நானே போக்கிக் கொள்கிறேன்...' என்று உண்ணாவிரதம் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து அவரது சீடர்களும், பொது மக்களும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். நிலைமை தீவிரமாவதை உணர்ந்த சதிக்குக் காரணமானவர்கள், "எங்களை மன்னித்து விடுங்கள்...

உங்களின் பெருமையை உணராமல் செய்துவிட்டோம்' என்று தங்களின் தவறை உணர்ந்து திருந்துகிறார்கள்.

மேல்கோட்டை கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரகத்தை சுல்தானின் அரண்மனைக்குக் கொண்டு போய்விடுகின்றனர். சுல்தானிடம் விக்கிரகத்தை ராமானுஜர் கேட்கிறார். அந்தப்புரத்தில் தன்னுடைய பெண் அதை வைத்திருப்பதாகச் சொல்கிறார் சுல்தான்.

 அரசவையில் இருந்தபடி ராமானுஜர் "செல்வப் பிள்ளாய்...' என்ற பாடலைப் பாட, அந்தப்புரத்திலிருந்து அரசவைக்கு வருகிறது அந்த விக்கிரகம். அதை எடுத்துக் கொண்டு ராமானுஜர் ஊர் திரும்புகிறார். வரும் வழியில் அந்த விக்கிரகத்தை தன் உயிரினும் மேலாக நினைத்துக் கொண்டிருக்கும் சுல்தானின் மகள், "இதைப் பிரிந்து நான் இருக்கமாட்டேன்' என்று கூறியபடி, பல்லக்கில் இருக்கும் விக்கிரகத்தைத் தழுவ அங்கேயே அவளின் உயிர் பிரிகிறது. இன்றைக்கும் மேல்கோட்டை நாராயணபுரத்தில் பீவி நாச்சியாருக்குக் கோயில் உள்ளது.

வைணவ ரகசியத்தை அறிந்து வருவதற்காக 18 முறை திருக்கோஷ்டி நம்பியிடம் சென்று வருகிறார். இறுதியில், "இந்த மந்திரத்தை வெளியில் சொன்னால் நீ நரகத்திற்குப் போவாய்' என்ற எச்சரிக்கையுடன் திருக்கோஷ்டி நம்பி ராமானுஜருக்கு வைணவ ரகசியத்தைக் காதில் சொல்கிறார். உடனே ராமானுஜர் இந்த மந்திரத்தைக் கேட்கும் எல்லாரும் சொர்க்கத்திற்குப் போய் நான் நரகத்திற்குப் போனாலும் எனக்குச் சந்தோஷமே என்றபடி, திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தின் மீது ஏறி நின்று "ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தை ஊர் மக்கள் அனைவருக்கும் சொல்கிறார்.

இப்படி தன்னுடைய வாழ்க்கையை பிறருக்கெனவே வாழ்ந்த ராமானுஜரின் பெருமைகளை இந்தத் தலைமுறைக்குச் சொல்லுவதே எங்களின் நோக்கம். அவரின் தியாக வரலாற்றை எல்லாரும் தெரிந்து கொள்ளவேண்டும். ஸ்ரீ ராமானுஜர் நாடகத்தை அடுத்த சில மாதங்களில் மலேசியாவிலும் அரங்கேற்ற உள்ளோம்'' என்றார் மகிழ்ச்சியுடன் ரமணி.

முழு கட்டுரையைப் படிக்க →