முகப்பு
தினமணி கதிர்

இது புதுசு: பிரெய்லியில் "தமிழ் நெட் 99'!

கணிப்பொறி சார்ந்த பொறியியல் படிப்புகளில் ஆண்டுக்கு சராசரியாக ஒருலட்சம் பேர் படிக்கின்றனர் என்றால், இதில் 10 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே ஆங்கில மொழி வழியாக படிப்பவர்கள். கிராமப்புறங்களிலும், நகரங்களிலு

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:03 PM
பகிர்:

கணிப்பொறி சார்ந்த பொறியியல் படிப்புகளில் ஆண்டுக்கு சராசரியாக ஒருலட்சம் பேர் படிக்கின்றனர் என்றால், இதில் 10 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே ஆங்கில மொழி வழியாக படிப்பவர்கள். கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் கூட அதிகம் பேர் தமிழ் மொழி வழியில் பள்ளி இறுதியாண்டு வரை படித்தபின்பே, உயர்கல்விக்கு வருகின்றனர்.

இவர்களுக்கு கணிப்பொறி சார்ந்த ஆங்கில மொழிப் பாடங்கள் மிகப் பெரிய சவாலாக இருக்கும். இந்தச் சவாலை அவர்கள் எதிர்கொள்வதற்கு தமிழில் எழுதப்பட்ட கணிப்பொறி சார்ந்த நூல்கள் தேவை. இப்படி தமிழில் கணிப்பொறி சார்ந்து வெளிவந்திருக்கும் எந்தப் பதிப்பகத்தின் நூல்களையும் ஒரே இடத்தில் வாங்குவதற்கான வழியை சாஃப்ட் வியூ நிறுவனத்தின் கீழ் உண்டாக்கியிருக்கிறார் அதன் நிறுவனர் மா. ஆண்டோ பீட்டர். கணிப்பொறி சார்ந்த நிறுவனத்தின் இதர தயாரிப்புகளைப் பற்றி நம்மிடம் அவர் பேசியதிலிருந்து...

""ஆங்கில வழியில் கணிப்பொறி சார்ந்த உயர் கல்வியில் சேர்ந்தாலும் பாடங்களைப் படித்துப்புரிந்து கொள்வதற்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் தேவை. தமிழகம் முழுவதும் இருக்கும் மாணவர்கள் இத்தகைய தமிழ் வழி கணிப்பொறி சார்ந்த நூல்களால் பயனடைவதற்கான தேவை இருக்கிறது.

அதுவும் அவர்களுக்கு, ஒரே இடத்தில் கணிப்பொறி சார்ந்த நூல்களின் எந்த பதிப்பகத்தின் நூல்களும் கிடைக்கும் வழிசெய்ய வேண்டும் என்ற யோசனையை செயல்படுத்தத்தான் "சாஃப்டி வியூவின் புக்ஸ் அண்ட் சிடி' திட்டத்தை எங்களின் அலுவலகத்திலேயே தொடங்கினோம்.

எங்களிடம் கண்ணதாசன், நர்மதா, வளர்தமிழ், பெரிகாம் போன்ற பதிப்பகங்களின் லினக்ஸ், சி ஷார்ப் போன்ற கணிப்பொறி சார்ந்த பாடங்களுக்கான தமிழ் நூல்களை விற்பனைக்கு வைத்துள்ளோம். கோரல் டிரா, பேஜ் மேக்கிங், இன்டிசைன் போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்துவதற்கு உதவும் எங்களால் பதிக்கப்பட்ட புத்தகங்களையும் விற்பனைக்கு வைத்துள்ளோம்.

பார்வைத் திறன் குறைந்தவர்களுக்குப் பயன்படும் வகையில் முதன் முறையாக பிரெய்லி மூலம் தமிழ் தட்டச்சு செய்வதற்கான பயிற்சிப் புத்தகத்தைத் தயாரித்திருக்கிறோம்.

இதில் பயன்படுத்தியிருக்கும் முறை, தமிழக அரசின் ஆதாரப்பூர்வமான "தமிழ் நெட் 99' விசைப் பலகை முறைதான். இந்த பிரெய்லி புத்தகத்தை பல பிரெய்லி நிபுணர்களின் துணைகொண்டு உருவாக்கியிருக்கிறோம். பார்வைத் திறன் குறைந்தவர்கள், அரசுப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு தகுந்த வாய்ப்புகளை இந்த பிரெய்லி புத்தகம் உருவாக்கித் தரும்.

இந்த விஞ்ஞான யுகத்திலும் பேனாவைக் கொண்டு தமிழை இன்னும் எவ்வளவு நாட்களுக்கு எழுதிக் கொண்டிருப்பீர்கள்? கையால் எழுதுவதை விட, கணிப்பொறியில் தட்டச்சு செய்வதால் நேரம் மிச்சமாவதுடன், நேர்த்தியாகவும் படைப்புகள் உருவாகும். கணிப்பொறியில் தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்தும் எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியதுதான் எங்களின் அமுதம் சாஃப்ட்வேர்.

இதில் ட்யூடர், தமிழில் டைப் செய்வதற்கு உங்களை வழிநடத்தும் சாதனம் போன்றவற்றை இணைத்தே தருகிறோம். "தமிழில் இனி தட்டச்சு செய்வேன்' என்ற உறுதியை ஒருவர் எடுத்துவிட்டால், இரண்டே நாள்களில் அவரால் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். ஆனால் முயற்சி வேண்டும்.

ஏறக்குறைய 25000 கணிப்பொறி சார்ந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்களைச் சொல்லும் தமிழ் அகராதியையும் சி.டி. வடிவில் வெளியிட்டுள்ளோம்.

இதுதவிர, பன்னிரண்டாம் வகுப்புக்கான இயற்பியல் பாடங்களையும் அனிமேஷன் சி.டி.க்களாக விற்பனைக்கு வைத்துள்ளோம். எந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் என்பது முக்கியமில்லை, ஒரே குடையின் கீழ் மாணவர்களுக்குப் பயன்படும் பல விஷயங்களையும் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதே எங்களின் நோக்கம். மேலும் எங்களிடம் இருக்கும் மென் பொருள்கள், புத்தகங்கள் குறித்த தகவல்களுக்கு www.softview.in என்னும் இணைய தளத்தின் வழியாகவும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்'' என்றார் மென் சிரிப்புடன் ஆண்டோ பீட்டர்.

முழு கட்டுரையைப் படிக்க →