முகப்பு
தினமணி கதிர்

பிரச்னை: விழி பிதுங்கப் போகும் சென்னை!

ஒவ்வொரு நாளும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை போன்ற தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ரயிலில் மட்டுமே எவ்வளவு பேர் வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்? ஒரு ரயிலில் 2 ஆயிரம் பேர் என்று வைத்துக் கொண

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:16 PM
பகிர்:

ஒவ்வொரு நாளும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை போன்ற தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ரயிலில் மட்டுமே எவ்வளவு பேர் வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்? ஒரு ரயிலில் 2 ஆயிரம் பேர் என்று வைத்துக் கொண்டாலும் கூட சுமார் 40 ஆயிரம் பேர் வருகிறார்கள். இவர்கள் எல்லாரும் சென்னை தாம்பரத்திலிருந்து எழும்பூர் வரையில் உள்ள ரயில் நிலையங்களில் இறங்கி சென்னை நகருக்குள் கரைந்து செல்கிறார்கள். ஆனால் இப்போது ரயில்வே துறையினர் சென்னை எழும்பூர் ரயில்நிலையம் போல தாம்பரம் ரயில் நிலையத்தையும் மாற்றப் போகிறார்கள். அப்படியானால்... சென்னை எழும்பூர் வரை தென்மாவட்ட ரயில்கள் வராதோ? என்ற ஐயம் எழுந்துள்ளது.

""தென் மாவட்டங்களில் இருந்து ரயிலில் சென்னைக்கு வருபவர்கள் இனிமேல் சென்னையின் தென்பகுதியில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில்தான் இறங்க வேண்டும். அங்கிருந்துதான் நகரின் பிறபகுதிகளுக்குச் செல்ல வேண்டும். அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பது ரொம்பவும் கடினமாகிவிடும்'' என்கிறார் அபிரூபன்.

சிவகாசியில் உள்ள "வரி செலுத்துவோர் சங்கத்தின்' பொருளாளராக இருக்கிறார் அபிரூபன். அடிக்கடி சென்னைக்கும் சிவகாசிக்குமாக அலைந்து கொண்டிருப்பவர்.

""பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடிய பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கு எங்கள் வரி செலுத்துவோர் சங்கத்தின் மூலமாக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். தென்மாவட்டப் பயணிகள் தாம்பரம் ரயில்நிலையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றால் அது மிகவும் சிரமம். எழும்பூரில் வந்து ஒருவர் இறங்கினால் 15 அல்லது 20 நிமிடங்களுக்குள் நகரத்தின் பல பகுதிகளுக்குச் சென்றுவிட முடியும். தாம்பரத்தில் அவர்களை இறக்கிவிட்டுவிட்டால், அங்கிருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு வரவே 2 மணி நேரத்துக்கு மேலாகிவிடும். 300 ரூபாய் ரயில் டிக்கெட் எடுத்து சென்னை தாம்பரத்துக்கு வருகிற ஒருவர், இன்னும் 300 ரூபாய் ஆட்டோவுக்குச் செலவு செய்து சென்னையில் உள்ள இன்

னொரு இடத்துக்குச் செல்ல வேண்டும். இது எவ்வளவு சிரமம் பாருங்கள். மேலும் ரயிலில் வருகிறவர்களில் பெரும்பாலோர் நடுத்தர வர்க்கத்தினர். ஏழைகள். அவர்கள் ஆட்டோவுக்கு அதிகச் செலவு செய்ய முடியுமா? மின்சார ரயிலில் ஏறிச் செல்லலாம் என்றால் வயதானவர்கள், குழந்தைகள், லக்கேஜ்களுடன் படிகளில் ஏறி பிளாட்பாரம் மாறுவது நடக்கிற காரியமா? எதற்காக இப்படிச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்?

வடமாநிலங்களில் இருந்து வருகிற 7 ரயில்களை எழும்பூரில் நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தினால் எழும்பூரில் தென்மாவட்டங்களிலிருந்து வரும் ரயில்களை நிறுத்த இடமில்லாமற் போய்விடும். இதற்காகவே தென்மாவட்டங்களில் இருந்து வருகிற ரயில்களை தாம்பரத்தில் நிறுத்தச் சொல்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம். அப்படியானால் தென்மாவட்ட மக்களுக்கு என்ன மரியாதை உள்ளது?'' என்கிறார் ஆவேசத்துடன் அபிரூபன்.

விருதுநகரில் உள்ள இதயம் நல்லெண்ணெய் உரிமையாளர் வி.ஆர்.முத்துவிடம் பேசினோம். அவர் தொழில் வர்த்தக அமைப்பின் செயலாளராக இருக்கிறார்.

""ரயில்வே துறை இப்படி ஒரு நடவடிக்கை எடுக்குமானால் அது மிக மிகத் தவறான முடிவாக இருக்கும். இப்போதே தாம்பரத்திலிருந்து சென்னைக்கு வரக் குறைந்தது ஒன்றரை மணி நேரங்களுக்கும் மேலாகிறது. கூடுதலாக ஒவ்வொரு நாளும் 40 ஆயிரம் பேர் தாம்பரத்திலிருந்து வர வேண்டுமானால் எவ்வளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும்? நேரம் எவ்வளவு வீணாகும்? அதுமட்டுமல்ல, தேவையில்லாமல் எவ்வளவு பெட்ரோல் பஸ்ஸýக்கும், காருக்கும், டூ வீலருக்கும் செலவாகும்? இதற்குப் பதிலாக, சென்னையின் வடபகுதியில் ராயபுரம் ரயில் நிலையம் உள்ளது. இந்தியாவில் அமைக்கப்பட்ட மூன்றாவது ரயில்நிலையம் அது. அங்கே சுமார் 82 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. அங்கே ஒரு ரயில் முனையம் அமைத்தால் வடக்கே இருந்து வருகிற ரயில்களை மட்டுமல்ல, தெற்கே இருந்து வருகிற ரயில்களையும் நிறுத்தி வைக்க முடியும். அப்படிச் செய்தால், சென்னை சாலைகளில் ஏற்படப் போகிற மிக அதிகமான போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க முடியும். இன்று தாம்பரத்தில் தென்மாவட்ட ரயில்களை நிறுத்துவோம் என்பார்கள். நாளை செங்கல்பட்டில் நிறுத்துவோம் என்று சொல்லமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? எனவே தென்மாவட்ட ரயில்களைத் தாம்பரத்தில் நிறுத்தி வைப்பதைக் கண்டிக்கிறோம். எதிர்க்கிறோம்'' என்கிறார் அவர்.

ஆனால் இந்தக் கருத்துகளில் இருந்து மாறுபடுகிறார் பாரதி நீதி. தற்போது சென்னையில் வாழ்ந்துவரும் பாரதி நீதி, முன்பு இருந்தது திருவனந்தபுரத்தில். ரயிலில் சென்னைக்கு வருவதும்போவதுமாக இருந்தவர். அவரிடம் கேட்டோம்.

""சென்னை நகரத்தின் வளர்ச்சியைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் ரயில்வே துறையினர் இந்த முடிவை எடுத்திருப்பார்கள். மும்பைக்கு ரயிலில் போனீர்கள் என்றால் தாதரில் இறங்கி பின்பு மின்சார ரயில்கள் மூலம் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். அதுபோல சென்னையிலும் கொண்டு வர முடிவெடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது என்றால் மக்கள் கார்கள், இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டு பஸ் போன்ற பொதுப் போக்குவரத்துச் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசல் பெரும் அளவுக்குக் குறையும். அதுவுமில்லாமல் மெட்ரோ ரயில், மோனோ ரயில் திட்டங்களை அரசு கொண்டு வர இருப்பதால் இந்தப் போக்குவரத்து நெரிசலும் குறைந்து போவதற்கான வாய்ப்புகளே அதிகம்'' என்கிறார் பாரதி நீதி. ஆனால் அவரே, ""தற்சமயம் உள்ள போக்குவரத்து நெரிசலில் தாம்பரத்தில் எல்லா ரயில்களையும் நிறுத்தினால் பல மடங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை மறுக்க முடியாது'' என்கிறார்.

கே.பூபதிக்குச் சொந்த ஊர் ராஜபாளையம். சென்னையில் சவுண்ட் என்ஜீனியராக வேலை செய்கிறார். அவரிடம் இதுபற்றிக் கேட்டோம்.

""தாம்பரத்தில் தென்மாவட்டப் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டால் அவர்கள் நகரின் பிற பகுதிகளுக்குச் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படும். அதுவும் லக்கேஜ்களுடன், குழந்தை குட்டிகளுடன், வயதானவர்களுடன் பஸ்ஸில் எப்படி ஏறி இறங்குவது? தென்காசி, ராஜபாளையம் பகுதியில் இருந்து வரும் பொதிகை எக்ஸ்பிரஸில் நீங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் முன் பதிவே செய்ய முடியும். அவ்வளவு கூட்டம் தினமும் அந்த ரயிலில் செல்கிறது. வந்து இறங்குகிறது. எண்ணூரிலோ, ஆவடியிலோ இருக்கும் ஒருவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கும் தனது உறவினரை அழைத்துவர அதிகாலை 3 மணிக்கு எழுந்து செல்ல வேண்டும். இப்படிப் பல சிரமங்கள் உள்ளன. அதனால் எப்போதும் போல் சென்னை எழும்பூரில் ரயில் நிலையத்திலேயே எல்லாத் தென்மாவட்ட ரயில்களையும் நிறுத்துவதே சரி. நல்லது'' என்கிறார்.

இதுபற்றித் தெரிந்து கொள்ள டிவிஷனல் ரயில்வே மேனேஜர் எஸ்.அனந்தராமனை அணுகினோம்.

""சென்னையில் ஏற்கெனவே இரண்டு டெர்மினல்கள் இப்போது உள்ளன. ஒன்று சென்னை சென்ட்ரல். இன்னொன்று எழும்பூர். பயணிகள் அதிகமாக ஆகும்போது ரயில்களை அதிகமாக விட வேண்டும். ரயில்கள் அதிகமாகும்போது புதிய டெர்மினல்களை ஏற்படுத்த வேண்டும். அப்படி ஏற்படுத்தப்பட உள்ள டெர்மினல்தான் தாம்பரம்.

தாம்பரம் டெர்மினல் செயல்பட ஆரம்பிக்கும்போதுதான் எந்த ரயில்களை எங்கே நிறுத்துவது என்பதை முடிவு செய்வோம். இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது.

ராயபுரம் ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை, அருகே துறைமுகம் இருப்பதால், அதைச் சரக்கு ஏற்ற, இறக்கப் பயன்படுத்துகிறோம். பயணிகள் ரயிலை நிறுத்தும் அளவுக்கு அங்கே இட வசதியில்லை'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →