முகப்பு
தினமணி கதிர்

சேவை: பசியோடு இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது!

பண உதவி என்று ஒருவரிடம் இன்னொருவர் கேட்காதவரை அவர்களிடையே கட்டுக் கடங்காமல் அன்பு பெருக்கெடுத்தோடும் காலம் இது.பண உதவி கேட்க ஒருவர் வரலாம் என்று நினைத்தாலே போதும், நட்பும் உறவும் காணாமற் போய்விடும். வ

Updated On : 28 டிசம்பர், 2023 at 5:53 PM
பகிர்:

பண உதவி என்று ஒருவரிடம் இன்னொருவர் கேட்காதவரை அவர்களிடையே கட்டுக் கடங்காமல் அன்பு பெருக்கெடுத்தோடும் காலம் இது. பண உதவி கேட்க ஒருவர் வரலாம் என்று நினைத்தாலே போதும், நட்பும் உறவும் காணாமற் போய்விடும். வாழ்க்கைத் தேவைகள் பெருகிவிட்ட இக்காலத்தில், ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கைக்கே போதுமான பணம் இல்லாமல் தவிக்கிறார்கள். இந்நிலையில் பிறருக்கு எப்படி உதவ முடியும்? மனிதர்களுக்கிடையிலான உறவில் இப்படித்தான் ஈரமில்லாமற் போய்விட்டது.

 ஆனால் இதற்கு நேர்மாறாக, ""பிறருக்கு உதவுவதே வாழ்க்கை'' என்கிறார் நெல்லை மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த மா.காளிமுத்து.

 முக்கூடலில் அன்பாலயம் தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார் 89 வயதான கல்யாணி அம்மாள். அந்தப் பகுதியில் உள்ள ஆதரவற்ற முதிய பெண்களுக்கு உணவளித்து வந்த அவர், ஒன்பது மாதங்களுக்கு முன்பு மறைந்துவிட்டார்.

 அவரையே நம்பியிருந்த முதியவர்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை.

 அப்போது தனது உதவிக் கரத்தை நீட்டி அவர்களுக்கு உணவளித்துக் காப்பாற்றி வருகிறார் காளிமுத்து.

 காளிமுத்து ரொம்பவும் வசதியானவர் அல்ல. முக்கூடலில் ஒரு சிறிய ஸ்வீட் ஸ்டால் வைத்திருக்கிறார். அதில் வருகிற வருமானத்தில் பெரும் பகுதியை பிறருக்கு உதவுவதற்காகவே செலவு செய்கிறார்.

 ""நான் சின்னப் பையனாக இருந்தபோதே பிறருக்கு உதவும் பழக்கம் எனக்கிருந்தது. என் கூடப் படிக்கும் பையன்களுக்கு நோட்டு, புத்தகங்கள், பேனா போன்றவற்றை வாங்கிக் கொடுப்பேன். இந்த உதவும் மனப்பான்மைக்கு என் அம்மாதான் காரணம். அம்மா மிகவும் பக்தியுடையவர். தெருவில் யாராவது சாமியாரைப் பார்த்தால்போதும், அவரை வீட்டுக்கு அழைத்து வந்து சாப்பாடு போடுவார். அதைப் பார்த்துப் பார்த்து எனக்கும் பிறருக்கு உதவுவதற்கு ஆர்வம் வந்துவிட்டது. அன்பாலயா தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த கல்யாணி அம்மாள் தனது தள்ளாத வயதிலும் தன் வயதுள்ள முதிய பெண்களுக்கு இலவசமாக உணவு அளித்து வந்தார். அது என்னைக் கவர்ந்தது. அப்போதே நானும் என்னால் முடிந்த உதவிகளை அவருக்குச் செய்து வந்தேன். அவர் இறந்த பிறகு ஆதரவில்லாமல் நின்ற அந்த முதியவர்களுக்குத் தொடர்ந்து உணவளித்து வருகிறேன். ஏனென்றால் பிறர் பசியோடு இருப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவர்களுக்கு மட்டுமின்றி, தெருவில் செல்லும் மனநிலை சரியில்லாதவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் தினம்தோறும் உணவைப் பொட்டலங்களாகக் கட்டி வழங்குகிறோம். ஆனால் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் தர முடிகிறது'' என்கிறார் வருத்தத்துடன்.

 ஆதரவற்ற முதிய பெண்கள் மற்ற இருவேளைகளுக்கு என்ன செய்வார்கள்?

 ஆதரவற்ற அவர்கள் இந்த ஒரு வேளை உணவு கிடைப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள். அவர்கள் முதியவர்கள் என்பதால் அதிகமாகச் சாப்பிடமாட்டார்கள். அதனால் நாங்கள் ஒரு வேளைக்கு தருகிற உணவை வாங்கி, இரண்டு வேளைக்கு வைத்துக் கொள்கிறார்கள். ஒரு நாளைக்கு சாம்பார், ரசம், கூட்டு வைத்து சாப்பாடு, மற்றொருநாள் எலுமிச்சை சாதம், புளியோதரை என்று ஒவ்வொருநாளும் வேறு வேறு உணவு வகைகளைச் சமைத்துப் பரிமாறுகிறோம். இங்கு ஓர் உணவகம் நடத்தும் நண்பரிடம் சமையலுக்கு வேண்டிய பொருட்களைக் கொடுத்துவிடுவோம். அவர் சமைத்துக் கொடுத்துவிடுகிறார். மேலும் சில நண்பர்கள் உணவளிப்பதற்கு உதவுகிறார்கள். ஜெயராஜ் என்ற நண்பர் உணவுக்குத் தேவையான அரிசியைத் தருகிறார். நான் பிற செலவுகளைப் பார்த்துக் கொள்கிறேன்.

 நீங்கள் இப்படி பிறருக்கு உதவி செய்வதைப் பற்றி உங்கள் வீட்டில் எதுவும் சொல்வதில்லையா?

 ஆரம்பத்தில் எனது உதவும் குணத்தைப் புரிந்து கொள்ளாத என் மனைவி என்னைக் கடிந்து கொண்டார். என்னால் பிறருக்கு உதவாமல் இருக்க முடியவில்லை. எனக்குப் பக்தி அதிகம். வீட்டில் பிரச்னைகள் அதிகமானதும் வீட்டைத் துறந்து கோயிலிலேயே தங்கிவிட்டேன். அப்புறம் மனைவி வந்து நான் பிறருக்கு உதவுவதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்ததும்தான் மீண்டும் வீட்டுக்கு வந்தேன். எனக்கு ஒரு மகள். ஒரு மகன். மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. மகன் ஸ்வீட் கடையைப் பார்த்துக் கொள்கிறான். எனக்குப் பணம் சேமிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. பங்களா கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. இதைக் குடும்பத்தில் உள்ளவர்கள் புரிந்து கொண்டுவிட்டதால் இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை.

 முதியவர்களுக்கு உணவளிப்பதைத் தவிர வேறு என்ன உதவிகள் செய்கிறீர்கள்?

 என்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்து வருகிறேன். நான்கு கல்லூரி மாணவர்களுக்குப் படிப்புக்கான உதவிகளைச் செய்கிறேன். அதுபோல இங்குள்ள பள்ளியில் நோட்டு, புத்தகம் வாங்க முடியாத மாணவர்களுக்கு உதவுகிறேன். பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அப்படிப்பட்ட மாணவர்களுக்குப் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துகிறேன். இவையெல்லாம் நான் நேரில் சென்று கொடுக்க நினைப்பதில்லை. எனது கடைக்கு வருகிற ஆசிரியர்கள், எந்த மாணவருக்கு என்ன உதவி தேவைப்படுகிறது என்று சொன்னால் போதும். அவர்களிடம் பணம் கொடுத்துவிடுவேன்.

 இங்கு ஒருவருக்கு கையில் ஆறாத புண் வந்துவிட்டது. அவரிடம் மருந்து வாங்கப் பணமில்லை. அவர் கேட்கும் மருந்துகளைக் கொடுத்துவிட்டு என்னிடம் பணம் வாங்கிக் கொள்ள இங்குள்ள மருந்துக் கடை ஒன்றில் சொல்லி வைத்தேன். இப்படி என்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறேன். ஆலயங்களின் திருப்பணிக்கு உதவுவதிலும் எனக்கு ஆர்வம். இங்குள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்கு தியான மண்டபம் கட்டிக் கொடுத்திருக்கிறேன். கோயில் விழாக்களின் போது அன்னதானம் வழங்குகிறேன்.

 மற்றவர்கள் உங்களைப் போல உதவுவதில்லையே... நீங்கள் மட்டும்?

 எல்லாரும் போல நாமும் வாழ்ந்தால் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை.

 அடுத்து என்ன திட்டம்?

 அன்பாலயா தொண்டு நிறுவனம் சார்பில் கட்டிடம் ஒன்றைக் கட்டி இந்த முதியவர்களை அங்கே தங்க வைக்க வேண்டும். அவர்களுக்கு மூன்று நேரமும் உணவளிக்க வேண்டும். ஆனால் அதற்கான முழுச் செலவையும் என்னால் ஏற்க முடியாத நிலை உள்ளது. அதனால் உதவக் கூடியவர்களிடம் நன்கொடை பெற்று இந்தப் பணியை முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

 நீங்கள் நினைப்பதுபோல் எளிதாக உதவி கிடைக்குமா?

 முக்கூடல் முன்பைப் போல இல்லை. தாமிரபரணி ஆறு ஓடி செழிப்பாக விளையும் விவசாயம் ஒருபுறம். இன்னொருபுறம் சிறிய தொழிற்சாலைகள் வந்துவிட்டன. பேப்பர் மில் வந்துவிட்டது. இங்கே வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இங்குள்ள ஒரு பையன் கூட ஏதாவது சிறு வியாபாரம் செய்து சம்பாதிக்கிறான். மக்களிடம் காசு புழங்குவதால் தாராளமாக உதவுகிறார்கள். அதனால் நிச்சயம் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நல்ல மனதோடு நல்ல காரியம் பண்ணும்போது தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →