புதுமை: உன் குரலிலேயே வீணை இருக்கு!
இளைய தலைமுறைக்குக் கர்நாடக இசை மேதைகளைப் பற்றிய வாழ்க்கையை சுவாரஸ்யமான ஆங்கிலப் படக் கதைகளின் மூலமாகக் கொண்டுவந்திருக்கிறார் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த லஷ்மி தேவ்நாத். "தி பிக்சர்ஸ் ஆஃப் ம
இளைய தலைமுறைக்குக் கர்நாடக இசை மேதைகளைப் பற்றிய வாழ்க்கையை சுவாரஸ்யமான ஆங்கிலப் படக் கதைகளின் மூலமாகக் கொண்டுவந்திருக்கிறார் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த லஷ்மி தேவ்நாத். "தி பிக்சர்ஸ் ஆஃப் மெலடி' என்னும் தலைப்பில் முதற் புத்தகமாக "தி குயின் ஆஃப் சாங்' என்னும் பெயரில் எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பற்றிய புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படக் கதை வடிவில் வெளிவருவது இதுவே முதல்முறை.
குழந்தைகளுக்கான பல படைப்புகளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருப்பவர் இவர். பூர்வா என்னும் குழந்தை, ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்திற்குப் பயணப்பட்டு அவரின் பார்வையில் ஆழ்வார்களின் வாழ்வை அருகிலிருந்து தரிசிக்கும் ஆச்சரியத்தை இந்தக் கதைப் புத்தகம் அதைப் படிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். இவர் எழுதிய லால்குடி ஜெயராமனின் வாழ்க்கை வரலாற்று நூலை "ஹார்பர் காலின்ஸ்' பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
வால்ட் டிஸ்னி நிறுவனம் இந்தியா முழுவதும் சிறந்த குழந்தைகள் கதைக்கான போட்டியை சமீபத்தில் நடத்தியது. இதில் இந்தியா முழுவதுமிருந்து 500 கதைகள் அனுப்பப்பட்டதில், இவருடைய "பூர்வா வேத காலத்திற்குச் செல்லும் கதை', சிறந்த 20 கதைகளுள் ஒன்றாகத் தேர்வு பெற்றிருக்கிறது. சமீபத்தில் இவரை மும்பைக்கு அழைத்து இந்தப் புத்தகம் தொடர்பாக பேசவைத்திருக்கிறார்கள் வால்ட் டிஸ்னி நிறுவனத்தினர்.
லஷ்மி தேவ்நாத் எம்.எஸ். படக் கதை உருவாக்கம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...
""ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்கு முன்பே இளைய சமுதாயத்தினருக்கு நம்முடைய இசைப் பாரம்பரியத்தில் வந்த பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படக் கதையின் மூலமாகக் கொடுக்க வேண்டும் என்ற யோசனை தோன்றியது. பத்து வயதுள்ள குழந்தைகளும் படித்துத் தெரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக படக் கதையின் வடிவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசையுடன் கலந்த வாழ்க்கையைத் தர முடிவெடுத்தேன். இதற்காக அந்த மேதையைப் பற்றிய பல புத்தகங்கள், அவரோடு நெருங்கிப் பழகிய பலரிடமிருந்தும் பல தகவல்களைச் சேகரித்தேன்.
உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு ஒரு பெண்மணி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்கிறார். கோயிலின் உள் பிரகாரத்துக்குள் நுழைந்தபோது "நில்லுங்கள்' என்ற குரல் கேட்கிறது. அவர்கள் பார்த்த திசையில், பிரகாரத்தின் படிக்கட்டில் ஒரு சாமியார், கையில் மயில் தோகையுடன், பெண்மணியுடன் வந்த குழந்தையைச் சுட்டிக்காட்டி, ""இந்தக் குழந்தைக்கு தெய்வக் கடாட்சம் பரிபூரணமாக இருக்கின்றது. இந்த உலகத்தில் பேரும் புகழோடும் இவள் வாழ்வாள்...'' என்று ஆசீர்வதிக்கிறார். சிறுமியோடு வந்த பெண்மணிக்கு அந்தச் சாமியார் சொன்னது ஒன்றும் புரியவில்லை. அந்தச் சிறுமிக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்தச் சிறுமிதான், பின்னாளில் தன்னுடைய தெய்வமயமான இசையால் இந்த உலகத்தை வசப்படுத்திய எம்.எஸ்.சுப்புலட்சுமி!
இதுபோன்ற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் நடந்த பலருக்கும் தெரியாத சம்பவங்களை இந்தப் புத்தகத்தில் தேடித் தொகுத்து எழுதியிருக்கிறேன். எம்.எஸ். திரைப்படத்தில் நடித்த காட்சியின் படங்களை அப்படியே "ஸ்கேன்' செய்து பயன்படுத்தியிருக்கிறேன். படக் கதையில் இந்தப் பாணி புதிது. படக்கதையில் வரும் ஓவியங்களைச் சேகரும், அட்டைப் பட ஓவியத்தை அரஸýம் வரைந்திருக்கிறார்கள். படக் கதை என்பதால் நான் எதையும் மேலோட்டமாகச் செய்யவில்லை.
இசைத் தாரகையாக அறியப்பட்ட எம்.எஸ்.ஸýக்கு இயல்பிலேயே நாட்டியம் நன்றாகத் தெரியும். கல்கியின் மகள் ஆனந்தி மீது அவர் காட்டிய வாத்ஸல்யம், அவருடைய தாய்மைப் பண்பை விளக்கும் பல காட்சிகள், அவரின் மனித நேயம், கருணையை விளக்கும் சம்பவங்களை இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளேன்.
அன்றைய இசை மேதையாக விளங்கிய அரியக்குடி ராமானுஜய்யங்காரின் கச்சேரி, மியூஸிக் அகாதெமியில் நடத்துவதற்கு ஏற்பாடு ஆகிறது. திடீரென்று உடல் நலக் குறைவால் அரியக்குடியின் கச்சேரி நடக்காமல் போகிறது. அந்த மேடையில் பாடுவதற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வாய்ப்பு வருகின்றது. இந்தக் கச்சேரியைக் கேட்கும் அந்த நாள் வீணை மேதை காரைக்குடி சாம்பசிவய்யர், ""உன் குரலிலேயே வீணை இருக்கு!'' என்று எம்.எஸ்.சை வாழ்த்துகிறார். இதுபோன்ற பல சம்பவங்களை எழுதியுள்ளேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக எம்.எஸ்.அம்மாவின் மகளும் சீடருமான ராதா விஸ்வநாதன், ""என்னுடைய அம்மாவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய தருணங்கள் அனைத்துமே இதில் கொண்டுவந்திருப்பது மிகச் சிறப்பாக இருக்கிறது'' என்று பாராட்டியிருப்பது எனக்குப் பெருமையாக இருக்கின்றது.
எம்.எஸ். குழந்தைகள் படக்கதை புத்தகத்தைத் தொடர்ந்து அவரின் குருவான ஜி.என்.பி. வாழ்க்கை வரலாற்றையும் படக் கதை வடிவில் அளிக்க இருக்கிறேன். கர்நாடக இசைக்குக் காலத்தால் அழியாத சாகித்யங்களைக் கொடுத்திருக்கும் அன்னமாச்சார்யா, அருணகிரிநாதர் போன்றோரின் வரலாறுகளையும் இதுபோன்ற படக் கதைகளின் வாயிலாக குழந்தைகளுக்கு அளிக்க இருக்கிறேன். தகுந்த சந்தை வாய்ப்புகள் உருவாகும் பட்சத்தில் (ஒரு புத்தகத்தின் விலை ரூ.125) தமிழிலும் இந்தக் கதைகளை மொழி மாற்றம் செய்து தருவதற்குத் தயாராக இருக்கிறேன். இசை மேதைகளின் படக் கதைகளோடு அந்த மேதையின் கையொப்பத்துடன் கூடிய அரிதான பெரிய படத்தையும் இணைத்துத் தருகிறேன். இந்தப் புத்தகத்தைப் பற்றி மேலும் தகவல் அறிய என்னுடைய ப்ஹந்ள்ட்ம்ண்க்ங்ஸ்ய்ஹற்ட்.ஸ்ரீர்ம் என்னும் இணைய தளத்திற்கும் நீங்கள் வருகை தரலாம்'' என்றார் லஷ்மி தேவ்நாத்.