முகப்பு
தினமணி கதிர்

இது புதுசு!: வரப்பே இல்லாத விவசாயம்!

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்று எழுதினார் வள்ளுவர். இப்போது, "உழுதுண்டு வாழ்வோரே சாவார்' என்று மாற்றி எழுதலாம் போலிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் உழவர்கள் தற்கொலை செய்து கொள்வது நமது நாட்டில் அதிக

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:49 PM
பகிர்:

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்று எழுதினார் வள்ளுவர். இப்போது, "உழுதுண்டு வாழ்வோரே சாவார்' என்று மாற்றி எழுதலாம் போலிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் உழவர்கள் தற்கொலை செய்து கொள்வது நமது நாட்டில் அதிகரித்துள்ளது.

கிராமங்களில் விவசாயம் செய்ய முடியாமல் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வேலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வரும் விவசாயிகள் விவசாயத்தையே விட்டுவிடலாம் என்று நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறார்கள்.

இதற்கு என்னதான் தீர்வு என்று எல்லாரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், விவசாயிகள் எல்லாரும் சேர்ந்து கூட்டுப் பண்ணை அமைத்தால் என்ன? என்று தோன்றியிருக்கிறது கு.புகழேந்திக்கு. கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த அவர், இந்தியாவின் முதல் கூட்டுப் பண்ணை விவசாயத்தை சில நண்பர்களின் உதவியோடு ஆரம்பித்துச் செயல்படுத்தி வருகிறார். அவரிடம் பேசினோம்.

""1991 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் "காவிரி கலவரம்' ஏற்பட்டது. இதில் மைசூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவிலான தமிழ் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பலர் நிலத்தை விட்டுவிட்டு தமிழகத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். 650 கோடி ரூபாய்க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று மைசூர் தமிழ்ச் சங்கமும், பெங்களூர் தமிழ்ச் சங்கமும் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. 1992 இல் விசாரணைக்கு வந்தது.

1999 இல் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு 2 கோடியே 6 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பானது. நாங்கள் அந்த வழக்குக்கே அந்த அளவுக்குச் செலவு செய்திருப்போம். அதில் 1 கோடியே 60 லட்சம் ரூபாயைக் கொடுத்துவிட்டார்கள். இதில் தமிழகத்துக்குக் குடிபெயர்ந்த விவசாயிகள் 300 பேருக்கு மேல் நஷ்ட ஈடு இதுவரை கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்நாடகத் தமிழ் விவசாயிகளின் நிலை படுமோசமாகிவிட்டது.

ஏற்கனவே பசுமைப் புரட்சியின் விளைவாக நிலத்தில் போடப்பட்ட உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் பூமியைப் பாழாக்கியிருந்தன. எனவே விவசாயம் செய்ய ஒவ்வொரு  விவசாயியும் தயங்கிக் கொண்டிருந்தான். இந்த நேரத்தில்தான் விவசாயிகள் பலரைச் சேர்த்து கூட்டுப் பண்ணை தொடங்கினால் என்ன? என்று தோன்றியது. அதன் விளைவாக 11 கர்நாடகத் தமிழர்கள், 3 கன்னட விவசாயிகளைச் சேர்த்துக் கொண்டு 130 ஏக்கர் நிலத்தை மைசூர் மாவட்டம் குண்டல்பேட்டையில்  2005 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கூட்டுப் பண்ணையை ஆரம்பித்தோம்'' என்கிறார் புகழேந்தி பெருமையாக.

தமிழ்நாட்டில் கூட்டுப் பண்ணை எதுவும் ஆரம்பிக்கவில்லையா? என்று கேட்டோம்.

""தமிழ்நாட்டில் பழனிக்கு அருகேயுள்ள குதிரையாறு அணைக்கு அருகில் உள்ள ஆண்டிபட்டிக் கிராமத்தில் எங்களுடைய இரண்டாவது கூட்டுப் பண்ணையை ஆரம்பித்திருக்கிறோம். இதுவரை 300 ஏக்கர் நிலத்தை வாங்கிப் பதிவு செய்திருக்கிறோம். மொத்தம் 500  ஏக்கர் நிலத்தில் கூட்டுப் பண்ணை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறோம். குண்டல்பேட்டையில் உள்ள நிலத்தில் சிறிது உரம்போட்டு  விவசாயம் செய்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள விவசாயப் பண்ணை முற்றிலும் இயற்கைமுறை விவசாயமாக இருக்கும்'' என்கிறார்.

ஒரு விவசாயி தனிப்பட்ட முறையில் விவசாயம் செய்வதற்கும் நீங்கள் கூட்டுப் பண்ணை முறையில் விவசாயம் செய்வதற்கும் என்ன வேறுபாடு? அதனால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? என்று கேட்டதற்கு, "" இங்கே ஒரு விவசாயி நிலத்தை வாங்கும்போது அவர் பெயரில் நிலத்தை நாங்கள் பதிந்துவிடுகிறோம். ஆனால் அந்த நிலத்தைக் கூட்டுப் பண்ணையில் இணைத்துவிடுகிறோம். தனிப்பட்ட விவசாயி தான் நினைத்ததை அந்த நிலத்தில் பயிரிட முடியாது. கூட்டுப் பண்ணையில் என்னவெல்லாம் பயிரிட வேண்டும் என்று எல்லாரும் சேர்ந்து திட்டமிடுகிறோமோ அவற்றை மட்டுமே பயிரிடுவோம்.

கூட்டுப் பண்ணை நிலத்திற்கு வரப்பே கிடையாது. வரப்பே இல்லாமல் விவசாயம் என்பதால் நிறைய நன்மைகள் உண்டு. நவீன விவசாய இயந்திரக் கருவிகளை நன்கு பயன்படுத்த முடியும். விவசாயத்திற்கு ஆகும் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும். அதுபோல விளைவிக்கப்பட்ட பொருட்களை மொத்தமாகச் சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியும். பலரும் சேர்ந்து விவசாயம் செய்வதால் பலருடைய அறிவும், அனுபவமும், தொடர்புகளும் விவசாயத்திற்குப் பயன்படும்.

எனவே இழப்பே இல்லாமல் விவசாயம் செய்ய முடியும். எனக்கு என்ன கிடைக்கும் என்பது மறைந்து, நமக்கு என்ன கிடைக்கும் என்ற பொதுநலச் சிந்தனை ஏற்பட்டுவிடுகிறது'' என்கிறார் முகத்தில் மகிழ்ச்சி பொங்க.

உங்களுடைய  கூட்டுப் பண்ணைகளில் என்னவெல்லாம் விளைவிக்கிறீர்கள்? எப்படி அவற்றை விற்பனை செய்கிறீர்கள்? என்று கேட்டோம்.

""கர்நாடகாவில் உள்ள குண்டல்பேட்டை கூட்டுப் பண்ணையில் மஞ்சள், எலுமிச்சை, முருங்கைக்காய், கறிவேப்பிலை, மலை வேம்பு போன்றவற்றை விவசாயம் செய்கிறோம். ஆண்டிபட்டி கூட்டுப்பண்ணையில் இயற்கைமுறையிலான விவசாயம் செய்ய இருக்கிறோம். குண்டல்பேட்டையில் விளைவித்த பொருட்களை அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலமாக விற்பனை செய்கிறோம்.

 அங்கே பொருட்களை வைப்போம். பொருட்களை வாங்குவதற்குக் கேரள வியாபாரிகள் உட்பட பலர் வருவார்கள். பொருட்களை ஏலம் எடுத்துச் செல்வார்கள். பொருட்களை விற்பனை செய்து கொடுத்த தொகையில் பத்து சதவீதத்தை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ளவர்கள் கமிஷனாகப் பெற்றுக் கொள்வார்கள். இதனால் அன்றைய மார்க்கெட் நிலவரப்படி விளை பொருட்களுக்கு விலை கிடைத்துவிடுகிறது'' என்கிறார்.

காய்கறி விற்பனையில் இறங்கியுள்ள இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்கள் விவசாயிகளிடம் நேரடியாக விளை பொருட்களை வாங்கிக் கொள்கிறார்களே. அவர்களிடம் கூட்டுப் பண்ணை விளைபொருட்களை விற்பதில்லையா? என்றோம்.

"" எனக்குத் தெரிந்து எங்கள் பகுதியில் பெரிய நிறுவனங்கள் விவசாயிகளிடம் நேரடியாக விளை பொருட்களை வாங்குவதில்லை. அவர்கள் புரோக்கர்களிடம்தான் வாங்குகிறார்கள். பெரிய நிறுவனங்கள் விவசாயிகளிடம் நேரடியாக வாங்குவதால் விவசாயிகளுக்கு லாபம்,விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி,இடைத்தரகர்கள் இல்லாமற் போகிறார்கள் என்று ஆர்ப்பாட்டமாகச் சொல்வதெல்லாம் உண்மைக்குப் புறம்பானவை. மேலும் இந்தப் பகுதியில் காய்கறி, தக்காளி போன்றவை அதிகமாக விளைவிக்கப்படுவதில்லை'' என்கிறார் அவர்.

விவசாயிகளுக்குத் தண்ணீர் முக்கியம். தண்ணீரைப் பெற மின்சாரம் முக்கியம். உங்களுடைய கூட்டுப் பண்ணைக்கு மின்சார இணைப்பு எளிதில் கிடைத்ததா?

என்ற முக்கியமான கேள்வியைக் கேட்டோம்.

""தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு பெறுவதைப் போன்ற முறை கர்நாடகத்தில் இல்லை. அங்கே விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும் தாங்களாகவே கரண்ட் இழுத்துக் கொள்ளலாம். ஒரு 5எச்.பி. மோட்டாருக்கு 17 ஆயிரம் ரூபாய் அரசுக்குக் கட்ட வேண்டும். மின் இணைப்புகள் எல்லாம் சரியாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றனவா என்றுஅங்குள்ள அங்கீகரிக்கப்பட்ட மின்சார காண்ட்ராக்டர் வந்து சோதனை செய்வார்.

அவர் ஓகே சொல்ல வேண்டும். மின்சார இணைப்புப் பெறுவதற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் நாமே வாங்கிக் கொள்ள வேண்டும். நாமே இணைப்புக் கொடுப்பதற்கான எல்லாவற்றையும் செய்து கொள்ள வேண்டும். மின்சார காண்ட்ராக்டர் ஓகே சொன்னதும் டிரான்ஸ்ஃபார்மரிலிருந்து இணைப்புக் கொடுப்பார்கள். குண்டல்பேட்டை விவசாயப் பண்ணையில் 54 மின்கம்பங்களை நட்டு இணைப்புக் கொடுத்திருக்கிறோம்.

தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு விவசாயியும் மின் இணைப்புப் பெற வேண்டுமானால் இதைவிட அதிகச் செலவு ஆகும். விவசாயத்திற்குத் தேவையான உரம் போன்ற பொருட்களை மொத்தமாக வாங்குவதால் குறைவான விலைக்கு வாங்க முடியும். கூட்டுப் பண்ணை விவசாயத்தால் கிடைக்கும் நன்மைகள் இவை'' என்ற புகழேந்தியிடம், கூட்டுப் பண்ணையில் மூலம் கிடைக்கும் வருமானத்தை எப்படிப் பகிர்ந்து கொள்கிறீர்கள்? என்று கேட்டோம்.

""ஓராண்டு முழுவதும் செய்யும் எல்லாச் செலவும் போகக் கிடைக்கும் மொத்த வருமானத்தை எத்தனை பங்குதாரர்கள் கூட்டுப் பண்ணையில் உள்ளார்களோ, அவ்வளவு பேருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்துவிடுகிறோம்.

 பெரிய நிறுவனங்களில் போலவே கணக்கு வழக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்திருக்கிறோம். இதுதவிர, கூட்டுப் பண்ணையில் உள்ளவர்கள் எல்லாரும் வந்து தங்க விடுதி வசதி, உணவு வசதி போன்றவற்றைச் செய்து வைத்திருக்கிறோம். இந்தக் கூட்டுப் பண்ணைத் திட்டம், விவசாயம் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு  ஒருமாற்றாக இருக்கும் என்பது கடந்த 6 ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது'' என்கிறார் பெருமையுடன் புகழேந்தி.

முழு கட்டுரையைப் படிக்க →