முகப்பு
தினமணி கதிர்

விழிப்புணர்வு: வரகு பாத்; தினை கேசரி!

மிளகு சாதம், வரகு மசாலா பாத், தினை கேசரி, பானகம்... இப்படியொரு மெனு எந்த ஓட்டலில் கிடைக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? நமது பாரம்பரியமான சிறு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட "ஆர்கானிக் மேளாவில்'தா

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:58 PM
பகிர்:

மிளகு சாதம், வரகு மசாலா பாத், தினை கேசரி, பானகம்... இப்படியொரு மெனு எந்த ஓட்டலில் கிடைக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? நமது பாரம்பரியமான சிறு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட "ஆர்கானிக் மேளாவில்'தான், மேற்படி உணவுகள் நம் நாக்கில் சப்புக் கொட்டவைத்தன!

சென்னையில் இயங்கும் பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பு, செம்மொழிப் பூங்காவில் இந்த உணவு மேளாவை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. விதவிதமான உணவுகளோடு, பசுமைப் புரட்சியால் நம் மண்ணிலிருந்து மறைந்து போன பல சிறு தானிய வகைகளையும், அரிசி வகைகளையும் காட்சிக்கு வைத்திருந்தனர். புவி வெப்பமடைவது, சுற்றுப்புற சுகாதாரத்தின் அவசியம், மரபு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் ஏற்படும் பிரச்னைகள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளை அறிவுறுத்தும் வகையில் வீதி நாடகத்தை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகள் நடத்தியது, சிறுவர்களுக்கும் எளிய வகையில் புரியும் வகையில் இருந்தது. பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பில் டாக்டர் சுல்தான் இஸ்மாயில், டாக்டர் சிவராமன், அனந்து, செல்வகணபதி, சங்கீதா ஆகியோர் அமைப்பாளர்களாக உள்ளனர். அவர்களில் சிலர் நம்மிடம் உணவு மேளா குறித்துப் பேசியதிலிருந்து...

""மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் உயிர்ச் சூழல் அமைப்பு பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இருக்கின்றது. ரசாயனங்களைப் பயன்படுத்தினால்தான் பயிர்களுக்குப் பாதுகாப்பு என்பது வெறும் மாயை. இயற்கையான பஞ்சகவ்யத்தைப் பயன்படுத்தியே இதைச் செய்யலாம். தினை, ராகி, குதிரை வாலி போன்ற சிறுதானியங்கள் நிறைந்த ஊட்டச்சத்து மிகுந்தவை. இந்தப் பயிர்களை விளைவிப்பதற்கு அதிக நீர் தேவைப்படாது. சுற்றுச் சூழலையும் பல்லுயிர்களையும் பாதுகாக்கும் இவ்வகை உணவுகளை மக்கள் தங்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்த வேண்டும். நமது பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்வை படித்த இளைஞர்களிடமும் பாமரர்களிடமும் கொண்டு செல்லும் முயற்சியே இந்த உணவு மேளா'' என்றார் டாக்டர் சுல்தான் இஸ்மாயில்.

""இயற்கையான பருத்தியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளையும் கண்காட்சியில் வைத்திருந்தோம். இயற்கையான தாவரங்களிலிருந்தே சாயங்களைத் தயாரிக்கும் முறை, பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், மரபினி மாற்றம் செய்யப்பட்ட விதைகளினால் ஏற்படும் விளைவுகள், பசுமைப் புரட்சியால் மறைந்து, தற்போது மீட்டெடுக்கப்பட்டிருக்கும் கறுங் குறுவை, காடைக் கழுத்தான், சீரகச் சம்பா, நீலம் சம்பா, காலா நமக், வாடன் சம்பா, செம்பாளை, மாப்பிள்ளை சம்பா, சிவப்புக் குருவிகார், பிசினி போன்ற நெல் வகைகளை இந்த உணவு மேளாவில் கண்காட்சிக்கு வைத்திருக்கிறோம். அதேபோல் தினை, ராகி, கம்பு, குதிரை வாலி போன்ற சிறு தானிய வகைகளையும் அவற்றின் மூலம் செய்யப்பட்ட உணவு வகைகளையும் வைத்திருந்தோம். இவை ருசியும், சத்தும் நிறைந்த உணவுகளாகும். சிறுதானியங்களைக் கொண்டு உணவு தயாரிக்கும் முறைகளைக் கொண்ட சிறிய கையேட்டையும் கொடுத்தோம். தயாரிப்பதற்கு எளிமையான இந்த உணவுகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். பயனடைய வேண்டும் என்பதே இந்த உணவு மேளாவின் நோக்கம்...'' என்றனர் பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பின் அமைப்பாளர்களான சங்கீதாவும் அனந்துவும்.

""இந்த "ஆர்கானிக் மேளா' இயற்கை முறை விவசாயத்திற்கு அனைவரும் திரும்ப வேண்டியதின் அவசரத்தையும் அவசியத்தையும் உணர்த்துவதற்குத்தான் வைத்திருக்கிறோம். எதிர்பார்த்ததற்கும் மேலாக மக்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. எங்களோடு  இயற்கை முறை விவசாயத்தின் நல்ல அம்சங்களை நாடெங்கிலும் பிரசாரம் செய்து வரும் ரீஸ்டோர், பூவுலகின் நண்பர்கள், தணல் போன்ற தன்னார்வ அமைப்புகள் கைகோர்த்திருக்கின்றன'' என்றார் பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பின் அமைப்பாளர்களில் ஒருவரான செல்வகணபதி.

முழு கட்டுரையைப் படிக்க →