சேவை: இருள் வெளியில் ஓர் ஒளி விளக்கு!
சம்பர் 26, 2004 - தமிழ்நாடு கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத பாதிப்பைச் சந்தித்த நாள். சுனாமிப் பேரலைகள் பல உயிர்களைப் பறித்துச் சென்ற நாள். பலரை அனாதைகளாக்கிய நாள். இருக்க இடமின்றி, பிழைக்க வழியின
சம்பர் 26, 2004 - தமிழ்நாடு கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத பாதிப்பைச் சந்தித்த நாள். சுனாமிப் பேரலைகள் பல உயிர்களைப் பறித்துச் சென்ற நாள். பலரை அனாதைகளாக்கிய நாள். இருக்க இடமின்றி, பிழைக்க வழியின்றி பலரைத் திண்டாட விட்ட நாள். அதற்குப் பின்பு உலகத்தின் கவனம் தமிழ்நாட்டின் மீது திரும்பியது. எதிர்பாராத இடங்களில் இருந்து எல்லாம் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி உதவிக்கரங்கள் விரைந்தன. அவரவருக்கு இயன்ற வகையில் எல்லாம் உதவினார்கள்.
அப்போது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 2005-இல் நாகப்பட்டினத்தில் ஆரம்பிக்கப்பட்ட தூய வளனார் சமுதாயக் கல்லூரி, இன்றுவரை தனது பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது.
""சுனாமித் தாக்குதல் இந்தப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகள் மிகக் கொடுமையானவை. உடலளவிலும், மனதளவிலும் நிறைய பாதிக்கப்பட்டார்கள். வாழ்க்கையில் நம்பிக்கையிழந்து போனார்கள். படிப்பு, வேலை, எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறிகளாகி நின்றன. உற்றார், உறவினர், செல்வம், வீடு வாசல் எல்லாவற்றையும் இழந்த மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை எப்படி இருக்க முடியும்? அப்படிப்பட்ட நேரத்தில்தான் இந்த மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கத்துடன் தமிழக இயேசு சபையைச் சேர்ந்த நாங்கள்,இந்தப் பகுதியில் உள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்கான பணிகளில் இறங்கினோம்.
மிகச்சிறந்த வாழ்க்கைப் பின்னணியுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுத்து அவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்குவதை யார் வேண்டுமானாலும் செய்துவிடலாம். மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள மாணவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்குவதுதான் கடினம்.
எங்கள் சமுதாயக் கல்லூரியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களையும் சேர்த்துக் கொள்கிறோம். சுனாமித் தாக்குதலினாலோ,வேறு காரணங்களினாலோ படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களைச் சேர்த்துக் கொள்கிறோம். தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலைக்கு முயன்ற மாணவர்களை - தாய் அல்லது தந்தை இல்லாத மாணவர்களைச் சேர்த்துக் கொள்கிறோம். எந்தவிதத் திறமையும் இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டு இருப்பவர்கள், எதற்குமே லாயக்கில்லாதவர்கள் என்று ஊரில் உள்ள எல்லாராலும் ஒதுக்கப்பட்டவர்கள் போன்றவர்களையும் எங்களுடைய சமுதாயக் கல்லூரியில் சேர்த்துக் கொள்கிறோம்'' என்கிறார் பெருமையாக அ.இருதயராஜ். தூய வளனார் சமுதாயக் கல்லூரியின் இயக்குநர் அவர்.
""கல்லூரி ஆரம்பிப்பதற்கு முன்பு இங்கு உள்ள மாணவர்களை நாகப்பட்டினத்துக்கு வெளியே மதுரை, விழுப்புரம், சென்னை, ராணிப்பேட்டை, திருச்சி ஆகிய ஊர்களில் உள்ள எங்களுடைய சமுதாயக் கல்லூரிகளில் படிக்க வைத்தோம்'' என்கிறார் இருதயராஜ்.
""எங்கள் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களை முதலில் நம்பிக்கை நிறைந்தவர்களாக மாற்றுகிறோம். நம்மால் எல்லாம் படிக்க முடியாது, எனக்குப் படிப்பு வராது என்று சிலர் நினைத்துக் கொண்டிருப்பார்கள். படித்து முடித்தால் வேலை கிடைக்கவா போகிறது? என்று நினைப்பவர்கள் அதிகம். இப்படிப்பட்டவர்களைக் கல்லூரியில் சேர்த்தவுடன் அவர்களுக்கு 15 நாட்கள் "திசைவழியாக்கப் பயிற்சி' அளிக்கிறோம். அந்தப் பயிற்சியில் வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய வேண்டும்? உலகத்தின் அரசியல், பொருளாதாரச் சூழல்கள் எவ்வாறு இருக்கின்றன? உலகம் எந்த அளவு வேகத்தில் முன்னேறிக் கொண்டு இருக்கிறது? நாம் உலகத்தின் வேகத்துக்கு ஈடு கொடுத்து முன்னேறுவது எப்படி? என்பதைச் சொல்லிக் கொடுக்கிறோம். எங்கள் கல்லூரியில் பயின்று இப்போது நல்ல நிலையில் உள்ள பழைய மாணவர்களை அழைத்து அவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்கிறோம். இதனால் புதிதாகக் கல்வி கற்க வந்த மாணவர்கள் மன ஊக்கம் பெறுவார்கள். பல மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச வராது. அப்படிப்பட்டவர்களுக்கு ஆடியோ, விஷுவல் முறையில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறோம்'' என்ற அவரிடம், உங்கள் கல்லூரியில் என்ன பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறீர்கள்? என்று கேட்டோம்.
""இது மிகவும் பாதிப்புக்குள்ளான, பின்தங்கிய பகுதி என்பதால், இங்குள்ள மாணவர்கள் படித்து முடித்ததும் உடனே வேலைக்குப் போக வேண்டிய கட்டாயமான சூழ்நிலையில் இருப்பார்கள். குடும்பத்தை அப்போதுதான் அவர்களால் காப்பாற்ற முடியும். எனவே வேலைவாய்ப்புத் தரும் தொழிற்கல்விக்கே நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். பிளஸ் டூ முடித்துவிட்டு ரெகுலர் காலேஜ்களில் சேர்ந்து பயில முடியாதவர்களுக்குக் கல்வி அளிக்கும் நோக்கத்துடன்தான் எங்கள் சமுதாயக் கல்லூரியை உருவாக்கியிருக்கிறோம். எனவே ஓராண்டு பட்டயப் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம். எலக்ட்ரிஷியன், ஏஸி மெக்கானிக்,மொபைல் போன் சர்வீஸிங், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பயிற்சி, டிடிபி, கணக்குப் பதிவியல், டாலி போன்றவற்றில் மாணவர்களுக்குப் பட்டயப் பயிற்சி அளிக்கிறோம். எங்கள் கல்லூரியில் மாணவர்கள் மட்டுமல்ல, மாணவிகளும் படிக்கிறார்கள். பெரும்பாலும் டிடிபி கற்பது மாணவிகள்தாம். எங்கள் கல்லூரியில் படித்துத் தேர்ந்த மாணவர்களுக்குத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் சான்றிதழ்களை அளிக்கிறது. இந்தப் பட்டயப் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு உடனே வேலை கிடைத்துவிடுகிறது'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.
தொழிற் பயிற்சி என்றால் செயல்முறைப் பயிற்சி அவசியம் அல்லவா? என்று கேட்டோம்.
""ஆமாம். எங்கள் கல்லூரியில் 10 மாதங்கள் வகுப்பறை பயிற்சியும், 2 மாதங்கள் செயல்முறைப் பயிற்சியும் அளிக்கிறோம். எங்களிடம் பயின்ற மாணவர்களில் 80 சதவீதம் பேர் உடனே வேலைக்குப் போய்விடுகிறார்கள். 20 சதவீதம் பேர் உயர் கல்வி கற்கின்றனர். மிகக் குறைவான கல்விக் கட்டணம் வசூலிக்கிறோம்'' என்கிறார் இருதயராஜ்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி கட்டணம் செலுத்துவது சிரமமாக இருக்குமே? என்றோம்.
""எதையும் இலவசமாகத் தந்தால் அதன் அருமையை உணர முடியாமல் போய்விடும் என்பதால்தான் குறைந்த கல்விக் கட்டணம் வசூலிக்கிறோம். ஆனால் சுனாமி பாதித்த முதல் இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.2500 மட்டுமே கல்விக் கட்டணமாகப் பெற்றோம். அதையும் மாதம் ரூ.250 வீதம் கட்டினால் போதும் என்று சொன்னோம். உண்மையில் ஆண்டுக்கு ஒரு மாணவனுக்கு ரூ.15 ஆயிரம் வரை எங்களுக்குச் செலவாகிறது. நாங்கள் 6 மடங்குக் குறைவாகவே அப்போது கட்டணம் வசூலித்தோம். ஆனால் இப்போது பயிற்சியைப் பொறுத்து 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை கல்விக் கட்டணமாகப் பெறுகிறோம்'' என்ற அவரிடம், குறைந்த கல்விக் கட்டணத்தை வைத்துக் கொண்டு எப்படிச் சமாளிக்கிறீர்கள்? என்று கேட்டோம்.
""சுனாமி பாதிப்புக்குள்ளானவர்களின் மறுவாழ்வுக்காக வந்த நிதியிலிருந்தும், நன்கொடைகளின் மூலமாகவுமே செலவுகளைச் சமாளிக்கிறோம். இன்று வரை எங்கள் கல்லூரி சொந்த இடம் கூட இல்லாமல் வாடகைக் கட்டிடத்தில்தான் செயல்பட்டு வருகிறது'' என்கிறார் சற்று கவலையுடன்.
உங்களிடம் படித்த மாணவர்கள் ஏதாவது சாதனை செய்து இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு, ""என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள்? தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் நடத்தும் தேர்வுகளில் பல மாணவர்கள் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்கள். முதல் ஐந்து ரேங்கில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருக்கிறார்கள்'' என்கிறார் உற்சாகத்துடன் இருதயராஜ்.