சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து மலையாளத்தில் உருவாகும் படம் "க்ளைமாக்ஸ்'. இதில் "சிலம்பாட்டம்', "பயணம்' படங்களில் நடித்த சனாகான், சில்க் வேடத்தில் நடிக்கிறார். "இணைய தேடி' மலையாளப் படத்தின் மூலம் சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்திய ஆண்டனி ஈஸ்ட்மேன்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். அனில் இயக்குகிறார். ""வித்யாபாலன் நடித்த "த டர்ட்டி பிக்சர்' படத்துக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பில்லை. "த டர்ட்டி பிக்சர்' காட்டாத சில்க் ஸ்மிதாவின் இன்னொரு பக்கத்தைக் காட்டும் படமாக இருக்கும்'' என்கிறார் சனாகான்.
கடனில் தத்தளித்த அமிதாப்பச்சனைக் கரையேற்றி மீண்டும் அவரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்குக் கொண்டுசென்ற டி.வி. நிகழ்ச்சி "கோன் பனேகா க்ரோர்பதி'. இப்போது இந்த நிகழ்ச்சியின் ஆறாவது பாகம் ஒளிபரப்பாகவுள்ளது. இதையும் அமிதாப் பச்சனே தொகுத்து வழங்குகிறார். இதற்காக அமிதாப்பை சோனி டி.வி. நிறுவனம் ரூ.140 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கியுள்ள இந்திய நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பிக் பி.
பொதுவாக ஆவி, பேய், திகில் படங்கள் என்றால் அவற்றைப் பார்க்கும் பெண்களின் எண்ணிக்கையே குறைவுதான். ஆனால் தான் இயக்கும் முதல் படத்திலேயே சஸ்பென்ஸ், திகில் கலந்து "பேய்' என்ற பெயரில் ஒன்றரை மணி நேரப் படத்தை இயக்கியிருக்கிறார் பெண் இயக்குநர் மகாலெட்சுமி. பேய் பயம் குறித்த மூடப்பழக்க வழக்கங்களைச் சாடும் இந்தப் படத்தில் ஸ்ரீரேவதி இரட்டை வேடங்களில் நடித்திருப்பது கூடுதல் ஆச்சரியம். "தேவதாசி' ஹிந்திப் படத்தில் மோனிகா பேடியின் மகளாகக் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான் ஸ்ரீரேவதி.
இதயம் நல்லெண்ணெய், சென்னை சில்க்ஸ் உள்பட 60-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்த ரம்யா "மந்திரப்புன்னகை' மூலம் சினிமாவில் அறிமுகமானார். "தடையறத் தாக்க' படத்தில் அருண் விஜய்யின் தோழியாக நடித்து ஓரளவு பிரபலமானார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் இயக்கி வரும் புதிய படத்துக்கான கதாநாயகி தேடலில் இருந்த இயக்குநர் பாலுமகேந்திரா, ரம்யா நடித்த விளம்பரப் படங்களையும் திரைப்படங்களையும் பார்த்து அவரையே தன்னுடைய படத்தின் கதாநாயகி ஆக்கிவிட்டார்.
சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்கேற்று பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்ற ஏராளமான மராட்டிய மொழிப் படங்களைத் தயாரித்த விவேக் தீக்ஷித், சுசாந்த் கர்டு ஆகியோர் முதல்முறையாக தமிழில் "மடிசார் மாமி மதன மாமா' என்ற நகைச்சுவைப் படத்தைத் தயாரிக்கிறார்கள். மிதுன், மான்ஸி, காயத்ரி நடிக்கும் இந்தப் படத்தை படத்தொகுப்பாளர் ரஞ்சித் போஸ் இயக்குகிறார். பெண் சிசுக் கொலையைக் கைவிட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி உருவாகும் இந்தப் படத்துக்கு மறைந்த இசை மேதை எல்.வைத்தியநாதனின் மகன் எல்.வி.கணேசன் இசையமைக்கிறார்.
வசந்தின் "மூன்று பேர் மூன்று காதல்' படத்தில் நடித்து வரும் சேரன், அடுத்ததாக "ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை' என்ற படத்தை இயக்குகிறார். "180' படத்தில் நடித்த நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநராக மட்டும் இருக்கலாமா இல்லை நடிக்கலாமா என நல விரும்பிகளுடன் ஆலோசனை செய்துவருகிறார் சேரன்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவுரைப்படி "க்ரீன் கலாம்' திட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார் நகைச்சுவை நடிகர் விவேக். ஆனால் "இது போதாது ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும்' என அன்புக் கட்டளையிட்டிருக்கிறார் அணு விஞ்ஞானி. இதையடுத்து ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து மதுரை, நெல்லை, தஞ்சை ஆகிய இடங்களில் தனது அடுத்த கட்ட மரக்கன்று நடும் சேவையைத் தொடங்குகிறார் விவேக்.
தான் இயக்கி, இசையமைத்து, நடிக்கும் "இசை' படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு நடனமாட பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூரை அழைத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ""ஒன்றரை கோடி சம்பளம், நான்கிலிருந்து ஐந்து நாள்களுக்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டும்; அதற்கு முன்பு பாடலைக் கேட்பேன்; மெட்டு பிடித்திருந்தால்தான் நடனமாடுவேன்'' என கண்டிஷன் போட்டுள்ளார் கரீனா கபூர்.
"காக்க காக்க', "வாரணம் ஆயிரம்' படங்களுக்குப் பிறகு சூர்யா-கெளதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைகிறது. படத்தின் பெயர் "துப்பறியும் ஆனந்தன்'. தான் இயக்கவுள்ள விஜய்யின் "யோஹன்' படமும் சூர்யா நடிக்கவுள்ள "சிங்கம் 2' படமும் முடிந்த பிறகு இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்தை கெளதம் மேனனின் ஃபோட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.