தினமணி கதிர்

திரைக்கதிர்

கோவாவில் உள்ள தனது இல்லத்தில் மூன்று நாய்களையும் ஏழு பூனைகளையும் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகிறார் இலியானா. அந்தப் பிராணிகளின் மேல் அளவு கடந்த பாசம் வைத்துள்ளார் . அவற்றின் உணவுக்காக மட்டும் தனிய

மனோஜ் கிருஷ்ணா

கோவாவில் உள்ள தனது இல்லத்தில் மூன்று நாய்களையும் ஏழு பூனைகளையும் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகிறார் இலியானா. அந்தப் பிராணிகளின் மேல் அளவு கடந்த பாசம் வைத்துள்ளார் . அவற்றின் உணவுக்காக மட்டும் தனியே ஒரு சமையல்காரரை நியமித்துள்ளார் என்றால் எந்த அளவுக்கு அவற்றின் மீது பாசம் வைத்திருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் "இரண்டாம் உலகம்' படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. படத்தின் லொகேஷன்களைப் பார்ப்பதற்காகவும் படப்பிடிப்புக்காகவும் செல்வராகவனுக்கு ஒரு ஹெலிகாப்டரை வழங்கியுள்ளது ஜார்ஜியா அரசு. தங்கள் நாட்டு சுற்றுலாத்துறையை வளர்க்கவே இந்த ஏற்பாடாம்.

"ஈரம்' பட இயக்குநர் அறிவழகன் இயக்கி வரும் புதிய படம் "வல்லினம்'. நகுல், சித்தார்த் நடிக்கும் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம் பெறும் ஓர் உருக்கமான பாடலை தமன் இசையில் கமல்ஹாசன் பாடுகிறார்.

தனுஷ் நடித்த "படிக்காதவன்' படத்தில் "என்னை மாதிரி பையன்களை பார்த்தவுடன் பிடிக்காது; பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்' என தனுஷ் பேசுவதாக ஒரு வசனம் இருக்கும். அதற்கு பதிலடியாகவோ இல்லை தடாலடியோகவோ "வாலு' படத்தில் ஒரு வசனம்... "சில பேரை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்; ஆனால் உன்னைப் பார்த்தவுடன் பிடிச்சிருச்சு' என ஹன்சிகா நாயகனைப் பார்த்துப் பேசுவது போல் இடம்பெற்றிருக்கிறது. "வாலு' நாயகன் சிம்பு என்பதால் வசனத்தின் பின்னணியில் ஏதாவது வம்பு இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

வாய்ப்புகள் குறைந்ததோடு மட்டுமல்லாமல் சம்பளமும் குறைந்ததற்கு தனது மேனேஜர்தான் காரணம் என நினைத்த "கில்லி' நாயகி மேனேஜரை நீக்கிவிட்டு தனது தந்தையையே மேனேஜராக நியமித்திருக்கிறார். அரை கோடிக்கும் குறைவாகிவிட்ட மகளின் சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்திக் காட்டுவேன் என உறுதி பூண்டிருக்கிறார் தந்தை.

தனது படங்களின் கதை விவாதத்திற்கும் பிற இயக்குநர்களிடம் கதை கேட்பதற்கும் ஹைதராபாத்தில் ஓர் அலுவலகத்தை வைத்துள்ளார் பிரகாஷ்ராஜ். அந்த அலுவலகத்தில் நீண்ட காலமாக வேலை பார்த்து வரும் நான்கு ஊழியர்கள் வீட்டு வாடகை கொடுப்பதற்குச் சிரமப்படுவதை அறிந்த பிரகாஷ்ராஜ், அவர்கள் நான்கு பேருக்கும் நான்கு அபார்ட்மெண்டுகளை வாங்கிப் பரிசளித்துள்ளார்.

"நாடோடிகள்', "எங்கேயும் எப்போதும்' படங்களில் சிறப்பாக நடித்த அனன்யாவுக்கு திடீரென திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மணமகன் ஆஞ்சநேயனுக்கு ஏற்கெனவே திருமணமான விஷயம் தெரிய வந்தவுடன் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அனன்யாவுக்கு வாய்ப்புகளும் குறைந்துவிட்டன. இது பற்றி கேட்டால்... ""எங்கள் கேரளத்தில் கூட இந்தப் பிரச்னையை யாரும் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் கோலிவுட் மீடியாக்கள்தான் பிரச்னையைப் பெரிதாக்கிவிட்டன. ஒரு பெண்ணுடைய வாழ்க்கை எனப் பார்க்காமல் ஒரு நடிகை என்ற கோணத்தில்தான் பார்க்கிறார்கள். அதனால் சினிமா, எனக்கு சரிப்பட்டு வருமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்'' என்கிறார்.

விஜய் டி.வி.யின் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முதலிடம் வென்று விளம்பர மாடலாய், தொகுப்பாளராய் இருக்கும் சிறுவன் ஸ்ரீகாந்த் "சுட்டி பையனும் நான்கு திருடர்களும்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மெக்காலே கல்கின் நடித்த "ஹோம் அலோன்' ஹாலிவுட் பட பாணியில் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் மகாநதி சங்கர், ரோபோ சங்கர், சுருளி மனோகர், கிங்காங் ஆகியோர் காமெடி திருடர்களாக நடிக்கிறார்கள். "கலக்கப்போவது யாரு', "அசத்தப்போவது யாரு', "லொள்ளு சபா' உள்ளிட்ட டி.வி. காமெடி தொடர்களில் நடித்த பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். "தூங்கா நகரம்' படத்தை இயக்கிய கெüரவிடம் உதவியாளராகப் பணியாற்றிய சிவா.ஜி படத்தை இயக்குகிறார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் சுமா ரங்கநாத். "புதுப்பாட்டு', "மாநகர காவல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுமா, இந்தப் புதிய படத்தில் எப்போதும் கடுகடுப்பாக இருக்கும் கறார் பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்கிறார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் "பிரியாணி' படத்தில் கதாநாயகியாக நடிக்க இலியானாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவரும் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். ஆனால் நாயகன் கார்த்தியோ சமந்தாவை கதாநாயகி ஆக்கலாம் என்றிருக்கிறார். "என் கால்ஷீட் வேண்டுமானால் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்; அது வரை பிஸி' எனக் கூறியிருக்கிறார் சமந்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT