தினமணி கதிர்

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: முகத்தில் ஏற்படும் கறுப்பு உருண்டை!

தோலிலுள்ள திசுக்களை அரித்து, கட்டி மற்றும் முகப்பருக்களை ஏற்படுத்தக் கூடிய அயோடின் கலந்த உணவு வகைகளை அதிக அளவில் பயன்படுத்தக் கூடாது என்று தோல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஒரு கருத்தை

எஸ். சுவாமிநாதன்

எனக்கு வயது 63. எனக்கு இந்த வயதிலும் முகத்தில் பரு போன்ற கட்டி வருகிறது. அதற்கு வைத்தியம் பார்க்காவிட்டால் அது பெரிய கறுப்பு உருண்டையாக மாறிவிடுகிறது. அயோடின் உப்பு இதற்குக் காரணமாகலாம், அதனால் அதைச் சாப்பிடக் கூடாது என்று தோல் மருத்துவர் கூறிவிட்டார். இதற்கு ஆயுர்வேதம் கூறும் காரணமென்ன? மருந்து என்ன சாப்பிடலாம்?

ஆர்.பாஸ்கரன், வேளச்சேரி.

தோலிலுள்ள திசுக்களை அரித்து, கட்டி மற்றும் முகப்பருக்களை ஏற்படுத்தக் கூடிய அயோடின் கலந்த உணவு வகைகளை அதிக அளவில் பயன்படுத்தக் கூடாது என்று தோல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஒரு கருத்தை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. ஆனால் பலரும் அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்தி நன்றாகத்தான் இருக்கிறார்கள். வேண்டுமானால்  உங்களைப் போன்ற ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அயோடின்  உப்பை நிறுத்திவிட்டால் உங்களுக்கு இந்த பிரச்னை சரியாகிவிடுகிறதா என்பதை நிதானமாக ஆராய்ந்து அறிந்து கொள்வது அவசியம்.

அதிக உடற்பயிற்சி - உடற்சூடு - ஒவ்வாமை உணவு - குடலில் சஞ்சரிக்கும் வாயு, இந்த நான்கு வகைக் காரணங்களால் உணவுப் பாதை நெடுக, உணவின் செரிமானத்துக்காக பயன்படும்  கப, பித்த தோஷங்கள் தமக்கே உரிய இடம் விட்டு, ரக்தம் - மாம்ஸம் - மேதஸ் - எலும்பு- மஜ்ஜை - விந்து மற்றும் தோல் பகுதிகளுக்கு வந்துவிட்டால் அவற்றின் சீற்றத்துக்கு ஏற்றவாறு நோய்களை ஏற்படுத்துகின்றன. தோலின் அடிப்பகுதியில் அமைந்துள்ள கொழுப்புக் கோளங்களில் அவை அடைபடும்போது, தோலின் மேற்பரப்பில் பரு போன்ற கட்டிகளாகவும், சிகிச்சை செய்யாமற் போனால், கறுப்பு உருண்டைகளாகவும் மாறி உபாதைகளை ஏற்படுத்தும்.

இதுபோன்று அடைந்து கிடக்கும் கெட்டுப் போன கப - பித்த தோஷங்களை அவ்விடத்திலிருந்து உருக்கி நீர்க்கச் செய்து, எந்த வழியாகச் சென்றதோ, அதே பாதை வழியாக குடலுக்குக் கொண்டு வந்து, வாந்தி செய்வித்தோ, பேதி செய்வித்தோ வஸ்தி எனும் எனிமா சிகிச்சை மூலமாகவோ, வெளியேற்றுவது ஒன்றே சிறந்த சிகிச்சையாக ஆயுர்வேதம் கருதுகிறது. உருகிய கப பித்த தோஷங்கள் தலைப்பகுதியில் தங்கினால், நஸ்யம் எனும் மூக்கில் மருந்துவிட்டு வெளியேற்றும் சிகிச்சை சிறந்ததெனக் கூறலாம். குடலுக்கு மறுபடியும் வந்து சேர்ந்த தோஷங்களை வெளியேற்றாமல், அவற்றை உடலின் உட்புறத்திலேயே அடக்கம் செய்துவிடலாம் என்று எண்ணி சிகிச்சை செய்தால், அவைதாம் மறுபடியும் சீற்றமடையச் செய்யும் காரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும். தகுந்த காரணம் கிடைத்துவிட்டால், மறுபடியும் கிளர்ச்சியுற்று உடலின் மிகவும் ஆழமான பகுதிகளாகிய நரம்பு மண்டலப் பகுதிக்குச் சென்றுவிட்டால், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். ஆகையால் ஒரு நோயை ஏற்படுத்தும் தோஷங்களை, உடலிலிருந்துப் பிரித்து வெளியேற்றும் சிகிச்சை முறைகளைக் கையாள்வது என்பதை ஆயுர்வேதம் பாராட்டுகிறது. இந்தச் சிகிச்சை முறைகளைத் தாங்கும் சக்தி இல்லாதவருக்கு அடக்கிவிடும் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

அதனால் நீங்கள் இந்த உபாதையை தோற்றுவிக்கக் காரணமாகிய கப - பித்த தோஷங்களை வளரவிடாமல் பார்த்துக் கொண்டால், அதிக பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்கலாம். உணவில்  அதிக இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை சேர்க்காமலும், பகல் வேளையில் படுத்து உறங்காமலிருப்பதும் மிகவும் நல்லது. புளிப்பான  கெட்டித் தயிர், மாமிச உணவு வகைகள், எண்ணெய்யில் பொரித்த அப்பளம், பஜ்ஜி, போண்டா, வடை, பிஸ்கட் வகையறாக்கள், ஐஸ்கிரீம், முட்டை சேர்த்த கேக், குளிர்பானங்கள், சமோசா, காபி போன்றவற்றைத் தவிர்ப்பது நலம்.

ஒரு வில்வாதி குளிகை எனும் மாத்திரையை துளசி சாறும் இடித்துக் கலந்து முகத்திலுள்ள பரு போன்ற கட்டிகளின் மீது காலை, இரவு உணவுக்கு முன் பற்று போட்டு, அரைமணி நேரம் வரை ஊற வைத்து துடைத்துவிடவும். தோலின் அடிப்புறத்திலுள்ள விஷ சத்து ஏதேனுமிருப்பின், அதைக் கரைத்து வெளியேற்றிவிடும். இதே குளிகை மருந்தை ஒன்றிரண்டு காலை, இரவு உணவுக்குப் பிறகு, வெந்நீருடன் சாப்பிடலாம். சததெüதகிருதம் எனும் ஆயின்ட்மென்டை கட்டிகளின் மீது பூசலாம். இரவில் படுக்கும் முன் சிறிது நேரம் பூசி வைத்திருந்து, துடைத்துவிட்டுப் பின் படுத்துறங்கலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT