மகன் விஸ்வம் எழுதும் நாகிரெட்டி நினைவுகள்: எம்.ஜி.ஆரின் முதலாளி
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அறுபது ஆண்டுகளைக் கடந்து, வளம் காண்பதென்பது மிகச்சிறந்த பேறு
21. காலத்தின் கட்டாயம்
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அறுபது ஆண்டுகளைக் கடந்து, வளம் காண்பதென்பது மிகச்சிறந்த பேறு எனக் கருதப்படுகிறது.
என் தந்தையார் அச்சக, பத்திரிகை, திரைத்துறைகளில் சாதனைகள் புரிந்து, தமது 61வது வயதில் மருத்துவ வசதி இல்லாத வடபழனியில் சக்கரபாணியாரின் ஒத்துழைப்புடனேயே விஜயா மருத்துவமனையை நிறுவினார். அப்போது வாகினி ஸ்டூடியோவில் பிரதான கட்டடத்தில் என் தந்தையாரும் சக்கரபாணியாரும் அமர்ந்து பணியாற்றிய இடம் உட்பட எதையும் மாற்றாமல் அதன் அருகிலேயே, விஜயா புரொடக்ஷன்ஸ் நிர்வாகத்தின் கீழ், நவீன வசதிகளுடன் கூடிய விஜயா மருத்துவமனை 1972ல் துவங்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் விஜயா மெடிக்கல்ஸ் அண்டு எஜுகேஷனல் டிரஸ்ட் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
திரைஉலகில் தமக்கு பேரும் புகழும் உச்ச கட்டத்தில் இருந்தபோது விஜயா மருத்துவமனையை என் தந்தையார் நிறுவினார். அதற்கு படவுலகின் பாதை மாறிக் கொண்டிருந்ததும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.
அந்தக் காலத்தில் வாழ்க்கையில் மட்டுமல்ல, படவுலகிலும் சில நெறிமுறைகள் அவர்களை வழிநடத்தின. அன்று பணம் மட்டுமே பிரதானமாக இல்லை. நல்ல படங்களை எடுப்பது மட்டுமே முக்கிய நோக்கமாக இருந்தது.
திரைப்படங்களின் அடிநாதமாக இருந்த நீதி, நியாயமான செயல்பாடு, மக்களின் நலன் ஆகியவை மறைந்து அவற்றிற்கு பதிலாக ஏமாற்றுதல், பழிக்குப்பழி, ஆபாசம், வன்முறை, கொலை போன்ற மனித இனத்துக்கு ஒவ்வாத இயல்புகள் திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. அதுமட்டுமல்ல, அவற்றை மக்கள் அதிக அளவில் பார்க்க விரும்பியதோடு, அந்த நடவடிக்கைகளை வாழ்க்கையிலும் செய்து பார்த்தனர்.
அன்று, மக்கள் தாம் பார்த்த படத்தைப் பற்றி பேசினார்கள் விவாதம்கூட பண்ணினார்கள். நாளடைவில் அந்த நிலைமை மாறி படங்கள் பார்ப்பது பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டன. இது விஜயா புரொடக்ஷன்ûஸயும் பாதித்தது. ஒரு மொழியில் வெற்றி பெற்ற விஜயாவின் படம், இன்னொரு மொழியில் வெற்றி பெறுவது நிச்சயமில்லாமல் இருந்தது. இந்த நிலை விஜயாவின் படத்தயாரிப்பு குழுவினரிடையே நம்பிக்கையைக் குறைக்க... படங்களின் வெற்றியும் குறைய ஆரம்பித்தது. ஒரே சமயத்தில் இரு மொழிப்படங்களின் தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுவிட்டது.
இதனால் ஒரு மொழிப்படத்தைத் தயாரிக்கும்போது படக் கம்பெனியின் பேனரும் (விஜயா இண்டர்நேஷனல்) மாற்றப்பட்டது. சக்கரபாணியார் தலைமையில் தெலுங்குப் படங்களை மட்டுமே தயாரிக்க ஒரு யூனிட் ஏற்பட்டது.
கருத்து வேறுபாடு, விவாதம் என்பது அனைத்துத் துறைகளிலும் அவசியமானது. அது என் தந்தையாருக்கும் சக்கரபாணியாருக்கும் தொழில் ரீதியாக ஏற்படுவதுண்டு.
ஒரு சமயம் என் தந்தையாருக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று "கர் கர் கி கஹானி' (நம்ம குழந்தைகள்) இந்திப்படம். காரணம் அதில் குழந்தைகளை அலட்சியம் பண்ணக்கூடாது அவர்களுக்கு உரிய பொறுப்பை பெரியவர்கள் தரவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டிருந்ததுதான்.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த சக்கரபாணியார் என்னிடம், ""உன் பெரியப்பா (பி.என். ரெட்டி)வின் காற்று உன் அப்பா மீதும் வீசிவிட்டது போலும் இந்தக் கருத்தைச் சொல்ல ஒரு படம் எடுக்க வேண்டியதில்லை. ஒரு தந்தி போதும், அது படத்தயாரிப்பு செலவைவிட குறைவாகவே ஆகியிருக்கும்'' என்றார்.
இந்த மாதிரி அவ்வப்போது தமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லுபவர் சக்கரபாணியார்.
இன்னும் சொல்லப் போனால் சக்கரபாணியாரை ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லலாம்.
அன்று வாகினியில் "ஸ்ரீராஜ ராஜேஸ்வரி விலாஸ் காபி கிளப்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த நண்பர் ஒருவரிடம், ""இந்த புதுமுக நடிகையிடம் தென்னிந்திய பெண்மையின் பிரதிபலிப்பைக் காண்கிறேன். எதிர்காலத்தில் இவர் சிறந்த நடிகையாக வருவார்'' என்றார் சக்கரபாணியார். அவரது அந்தக் கூற்று நிஜமானது. பின்னாளில் இந்தியாவின் சிறந்த நடிகை என்ற பெயரைப் பெற்ற அந்த நடிகை ஜெயப்பிரதா.
ஆந்திர மாநில மேலவை உறுப்பினராக சக்கரபாணியார் நியமிக்கப்பட்டிருந்தார். அதன் பணி நிமித்தமாக அடிக்கடி அவர் ஹைதராபாத்துக்கு பயணிப்பார்.
அந்த சமயத்தில் சக்கரபாணியார் ஹைதராபாத்தில் "யுவா பப்ளிகேஷன்ஸ்' நிறுவனத்தை மீண்டும் துவக்கி, ஓர் அச்சகத்தையும் நிறுவினார். சக்கரபாணியாரின் இரண்டாவது மகன் சுதாகர் நிர்வாகப் பொறுப்பேற்றார்.
ஆந்திர மாநிலத்தில் கம்மா - ரெட்டி சமூகத்தினரிடையே உள்ள பூசல் அப்போது இவர்களுக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது. திரையுலகில் பலர், கம்மா இனத்தவருடன் தொடர்ந்து பணிபுரிவதை நாகிரெட்டி விரும்பவில்லை. அதனால்தான் தனியாகவே படப்பிடிப்பு கம்பெனியை ஏற்படுத்திவிட்டார் என்ற தவறான செய்தியை பரப்பிவிட்டனர்.
ஹைதராபாத்தில் சக்கரபாணியார் துவக்கிய அச்சகத்தில் தொழிலாளர் பிரச்னைகள் அடுக்கடுக்காக வர, என் தந்தையாரும் இங்கிருந்து அச்சக பணியாளர், நிர்வாகிகளை தம்முடன் அழைத்து ஹைதராபாத் சென்று, அந்த நிலைமையை சமாளித்து, "டால்டன் பிரஸ்' என்ற பெயரையும் சூட்டினார். இதன் மூலம் என் தந்தையாரையும் சக்கரபாணியாரையும் நிரந்தரமாக பிரித்துவைக்க செய்யப்பட்ட சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது.
"எங்க வீட்டுப் பிள்ளை' கதாசிரியர் டி.வி. நரசராஜு ஒரு கதையை என் தந்தையாரிடம் சொல்ல, அது அவருக்கு மிகவும் பிடித்தது. அதன் உரிமையை வாங்கிவிட்டார். அப்போது சக்கரபாணியார் ஹைதராபாத்தில் இருந்தார். அவர் சென்னை வந்தபின் அவரிடம் "காலம் மாறிந்தி மனிஷிலு மாராலி' என்ற அந்தக் கதையைப் பற்றி என் தந்தையார் சொன்னபோது, அவரோ ""இதில் என்ன புதுமை இருக்கிறது... இப்படியெல்லாம் நடப்பது சகஜம்தானே'' என்று அந்த கதை ஃபைலை மேஜையின் ஓரத்திலே வைத்துவிட்டார். இதனால் அதைப் படமெடுப்பதில் தாமதமேற்பட்டது.
இருந்தாலும் ஆந்திர மாநிலத்தில் பெரிய சமூகங்களான ரெட்டி - கம்மா இரு பிரிவுகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும் என விரும்பிய என் தந்தையாரும் சக்கரபாணியாரும் என்.டி. ராமாராவ் நடிக்க காலம் மாறிந்தி... மனிஷிலு மாராலி (காலம் மாறிவிட்டது மனிதனும் மாறணும்) என்ற படத்தை எடுக்க விரும்பினார்கள்.
ஆனால் அந்தப் படத்தை எடுப்பதற்கு முன்பே சக்கரபாணியார் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் ஒத்துழைப்பு இல்லாமல் அப்படத்தை எடுக்க என் தந்தையாரும் விரும்பவில்லை. இது இன்றும் அவர்களுடைய நிறைவேறாத விருப்பமாகவே தொடர்கிறது...
சில ஆண்டுகளுக்குப் பின் சக்கரபாணியார் பொறுப்பில் தயாரிக்கப்பட்ட "ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி விலாஸ் காபி கிளப்' படத்தை முடிக்கும் முன்னரே, சக்கரபாணியார் 1975ல் விஜயா மருத்துவமனையிலேயே இயற்கையெய்தினார். இதனால் என் தந்தையார் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார்...
இனி என் தந்தையார் சொல்லக் கேட்போம்:
""எனக்கு மட்டுமல்ல, எங்கள் குடும்பத்துக்கே சக்கரபாணி உறுதுணையாக இருந்தார். எங்கள் வீட்டில் பிரச்னை ஏற்படும்போதெல்லாம் என் மனைவி சேஷம்மா சொல்வாள்: ""சக்கண்ணாவின் ஆலோசனையைக் கேளுங்கள்... அதன்படி செய்யுங்கள்'' என்று.
வாகினி ஸ்டூடியோ நிர்வாகத்தை ஏற்கும்முன், 1949ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னைக்கு அடிக்கடி வந்துபோகும் சக்கரபாணி, அப்போது தெனாலியில் இருந்தார். மனைவி சேஷம்மா சொன்னபடி கடித வாயிலாகவே சக்கரபாணியுடன் பேசி, அவருடைய ஆலோசனை, பங்களிப்புடன் வாகினி ஸ்டூடியோ நிர்வாகத்தை மேற்கொண்டேன்.
அவரும் நானும் 30 வருடங்கள் நகமும் சதையுமாக இருந்தோம். ஜாதி பேதத்தை மறந்து நாங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியதைக் கண்டவர்கள் வியந்தனர், பாராட்டினர். ஒரு சிலர் நொந்துபோயினர்.
நானும் சக்கரபாணியும் திரையுலகில் அடியெடுத்து வைக்கும்போது நாங்கள் மேற்கொள்ள வேண்டிய இலக்கு ஒன்று இருந்தது. அது, சமுதாயத்தின் எண்ணங்களையும் மனப்பாங்கினையும் ஆக்கப்பூர்வமாக உருவாக்க நினைத்ததுதான். எங்களது ஒவ்வொரு திரைப்படம் வாயிலாக ஒரு நல்ல சேதியை கருத்தினை மக்களுக்குத் தர விரும்பினோம். அதிர்ஷ்டவசமாக எங்களுடன் திறமை வாய்ந்த கலைஞர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் பணியாற்றினர். எங்களது திரைப்படங்களில் கருத்து, தரம் இருந்ததால் அவை மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று இன்றளவும் பேசப்படுகின்றன.
நாங்கள், எங்களுக்கே போட்டுக்கொண்ட ஆரோக்கியமான வரையறைக்குள் செயல்பட்டோம். எங்கள் வெற்றிக்கு அதுதான் காரணம். ஆனால் காலம் மாறிவிட்டது. இப்போது வேகம்தான் முக்கியம். நான் வேகத்திற்கு எதிரானவன் அல்லன். ஆனால் என்னால் அதற்கு ஈடுகொடுத்து இயங்க முடியவில்லை.
கடந்த நூற்றாண்டில் 50களில் ஆரம்பித்து அடுத்து இருபதாண்டுகளை விஜயாவின் சகாப்தம் என்றே கூறலாம். இதன் படங்களில் வாழ்க்கையின் கொண்டாட்டம் பிரதிபலித்தது. இது "சி.ஐ.டி.' (தெலுங்கு) படத்திற்குப் பிறகு மங்கத் தொடங்கியது. 1975ல் சக்கரபாணி மறைந்தார். அவரால் உருவாக்கப்பட்ட கடைசி படமாக "ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விலாஸ் காபி கிளப்' (தெலுங்கு) வெளிவந்தது.
நாம் ஏதோ தவறு செய்துவிட்டோம். விஜயாவின் அனைத்து சிறப்பம்சங்கள் இருந்தும் அப்படம் ஏன் தோல்வி அடைந்தது எனத் தெரியவில்லை. இது சக்கரபாணியின் மறைவினாலா அல்லது அதற்கு முன் அவருக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பாலா?
இந்தச் சந்தேகம் எதனால் எழுகிறது என்றால், சக்கரபாணி எந்த அளவுக்கு என்னுடன் இணைந்திருந்தார் என்பதை உணர்த்தவே. எனக்கு இயலாமை வரும்போதெல்லாம் என்னுடன் தூண்போல நின்று என்னைத் தாங்கியவர் அவர்.
எங்கள் இருவரையும் அவருடைய மரணத்தினால் மட்டுமே பிரிக்க முடிந்தது. உடலளவில்தான் அவர் பிரிந்தார். அவருடைய மரணம், அவர் இல்லாத வாழ்க்கை எனக்கு தனிமையாகவே காட்சியளித்தது. அப்போது எனக்கு வாழ்க்கை என்பது வியாபாரம் அல்ல, அதையும் தாண்டிய மனிதநேயம் என்பதை உணர்த்தி என் பணியை திசை திருப்பியது. திரைஉலகில் இருந்த என்னை முழுமையாக மருத்துவப் பணியில் ஈடுபடுத்தியது. சக்கரபாணி மறைந்தபிறகு, நாங்கள் தயாரித்த படங்களின் நெகடிவ் உரிமையை விற்று, அந்தத் தொகையை விஜயா மருத்துவமனையின் வளர்ச்சிக்கு வழங்கி சக்கரபாணிக்கு என் நன்றிக்கடனைச் செலுத்தினேன்...
(தொடரும்)