முகப்பு
தினமணி கதிர்

எம்.ஜி.ஆரின் முதலாளி

ஒவ்வொரு நெடிய பயணத்துக்கு இடையிலும் இளைப்பாறுதல் என்பது தவிர்க்க முடியாதது தவிர்க்கக் கூடாதது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:00 AM
பகிர்:

22. விஜயாவில் விதியின் விளையாட்டு

ஒவ்வொரு நெடிய பயணத்துக்கு இடையிலும் இளைப்பாறுதல் என்பது தவிர்க்க முடியாதது தவிர்க்கக் கூடாதது. அப்போதுதான் பயணம் சுகமாகும்; சுவையாகும்.
 "ராம் அவுர் ஷ்யாம்', "நன்ஹா ஃபரிஷ்தா', "கர் கர் கி கஹானி' ஆகிய இந்தி வெற்றிப் படங்களைத் தயாரித்த பின் என் தந்தையார் விஜயா மருத்துவமனையை நிர்மாணிப்பதில் தமது முழு கவனத்தையும் செலுத்தினார்.
 அப்போது பம்பாய் படவுலகில் பிரபல விநியோகஸ்தரும், எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவருமான ராம் சாப்ரா, இந்திப்படம் எடுக்க என் தந்தையாரை வற்புறுத்தினார். தவிர, மீண்டும் இந்திப் படம் எடுத்தால் அதில் வரும் வருமானத்தையும் மருத்துவமனை விரிவாக்கத்துக்கு பயன்படுத்தலாமே என்று கருதிய என் தந்தையார் மீண்டும் இந்திப்படம் எடுக்க முனைந்தார்.
 குறைந்த பட்ஜெட்டில் விக்ரம், லட்சுமி இணைந்து நடித்த கே.எஸ். சேதுமாதவன் இயக்கத்தில், ராஜேஷ் ரோஷன் இசையமைக்க "சட்டைக்காரி' (மலையாளம்) படம் இந்தியில் "ஜூலி' எனப் பெயரிடப்பட்டு தயாரிக்கப்பட்டது. மாறுபட்ட சூழல், கதை, அதை படைத்த விதம், பிரபலமில்லாத நட்சத்திரங்கள் இவை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கி, அது பெரிய வெற்றிப் படமாகியது (1975).
 விஜயா மருத்துவமனையின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, என் தந்தையார் பணியாற்றி வந்த சமயத்தில், சென்னையில் ஆசியஆப்பிரிக்க கண் மருத்துவர்கள் மாநாடு பெரிய அளவில் சென்னை விஜயா கார்டனில் நடந்தது. நம் நாட்டின் பிரபல கண் மருத்துவர்கள் பத்ரிநாத் அகர்வால் உட்பட உலகின் பிரபல கண் மருத்துவர்களும் பங்கேற்றனர். அதில் விஜயா மருத்துவமனை சார்பில் என் தந்தையாருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. மாநாட்டு சம்பந்தமான அச்சகத்துறையையும், வி.ஐ.பி.க்களை வரவேற்கும் பணியையும் ஏற்றுக் கொண்டேன்.
 டாக்டர் பத்ரிநாத்தின் சீனியர், அமெரிக்க டாக்டர் அசின்ஸன், என் தந்தையாரின் கண்களைப் பரிசோதித்து பார்த்துவிட்டு அவரது க்ளுகோமா நோய்க்கு அமெரிக்க பாஸ்டன் மாஸ் பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய சிபாரிசு செய்தார்.
 அதன்படி 1975ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு என் அம்மாவுடன் புறப்பட்டார் என் தந்தையார். அங்கே கண் மருத்துவத்தைச் செய்துகொண்டு இந்தியா திரும்பும் வழியில் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டார். அது என் தந்தையாருக்கும் வேலைப் பளுவைக் குறைக்க உதவியாக இருந்தது. அப்போதுதான் "ஜூலி' படம் வெளியாகி பெரும்வெற்றியைப் பெற்றிருந்தது.
 அமெரிக்காவில் என் தந்தையாரின் கண் சிகிச்சை நல்லபடியாக நடந்தது. அங்கே வடஅமெரிக்க தெலுங்கு அசோசியேஷனில் கெüரவிக்கப்பட்டார். டிஸ்னிலேண்ட் போய் பார்த்தபோது இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், இப்படியொரு உலகத்தை நிர்மாணித்தால் குழந்தைகளுடன் குடும்பத்தினரும் சேர்ந்து கண்டுகளித்து மகிழ்வார்கள் என விரும்பினார்.
 ஆனால் அப்போது டிஸ்னி உலகம் அமெரிக்கா தவிர வேறு நாடுகளில் நிறுவப்படவில்லை. வால்ட் டிஸ்னி மறைவுக்குப் பின்னரே அது வேறு நாடுகளில் நிறுவப்பட்டது. எனவே சென்னையில் டிஸ்னி உலகம் என்பது என் தந்தையாரின் கனவாகவே ஆனது.
 விஜயா மருத்துவமனை 46 படுக்கை வசதிகளுடன் துவக்கப்பட்டு, 3 ஆண்டுகளில் நல்ல பெயரை ஈட்டியது. அதை மேலும் விரிவுபடுத்தி, மருத்துவ சேவையைத் தர நிதியுதவி தேவைப்பட்டது. எனவே "ஜூலி' படத்திற்குப் பிறகு, பிரசாத் அண்ணாவும் நானும் இந்திப் படத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டோம். அப்போது எடுக்கப்பட்ட படம் "யெஹி ஹை ஜிந்தகி' (1977). "கலியுகக் கண்ணன்' படத்தின் இந்திப் பதிப்பு. என் தந்தையாரின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பிரதிபலித்த அப்படம், அவரையும் கவர்ந்ததில் வியப்பில்லை.
 "யஹி ஹை ஜிந்தகி' கதையில் கீதையின் சாரம் இருந்தது. இதில் சஞ்சீவ் குமார் கிருஷ்ணபகவானிடம் சொல்வார்: ""நான் உன்னை என் பணத்தால் வாங்க முடியும்'' என்று.
 கிருஷ்ணர் சிரிப்பார்.
 இறுதியில் சஞ்சீவ் குமார் அவருக்கு பிடித்த அனைத்தையும் இழந்துவிடுவார். இந்தப்படம் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது. மனிதன் கர்வம் கொள்ளாமல், மூர்க்கத்தனத்தை விட்டுவிட்டு, கடவுள் பக்தியுடன் இருக்கச் சொன்ன படம்...
 "யஹி ஹை ஜிந்தகி' திரையிடப்பட்டபோது என் தந்தையார் பதற்றமாக இருந்தார். சக்கரபாணியார் அவருடன் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
 படம் திரையிடப்பட்ட நாளன்று, வட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்குச் சென்று, ரசிகர்களின் கருத்துக்களை நேரில் அறியும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது.
 பம்பாயிலிருந்து என் தந்தையாரிடம் படம் சரியில்லை என்ற தகவலைத் தந்துவிட்டார்கள். அவர் என்னைக் கேட்டபோது, ""நன்றாக ரசிக்கிறார்கள்'' என்று சொன்னேன். இதனால் அவருக்குள் சிறிது சஞ்சலம் ஏற்பட்டது. இதை உணர்ந்த நான் விளம்பரத்தில் வேறு சில யுக்திகளைச் செய்துவிட்டு இன்னும் மூன்று நாள்கள் கழித்து சென்னைக்கு வருகிறேன் என்று சொல்லி, ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த பட விளம்பர பேனர்களை நீக்கிவிட்டு, புதிதாக கிருஷ்ணர் - சஞ்சீவ் குமார் இருவரின் க்ளோஸ் -அப் படங்களை வைத்து ஒரே நாளில் பேனர் தயாரித்து வைத்துவிட்டோம். அடுத்த நாளிலிருந்து படத்திற்கு கூட்டம் அலைமோதியது. ஏற்கெனவே தகவல் கொடுத்தவரே படம் நல்ல பாராட்டைப் பெற்று வருகிறது என்ற தகவலைத் தந்தார். என் தந்தையாருக்கு மிக்க மகிழ்ச்சி. அதன் பின்னர் சஞ்சீவ் குமார், விஜயா பேனரில் தொடர்ந்து நடிக்கும் நடிகராகிவிட்டார்.
 சஞ்சீவ் குமார், அடுத்து "ஸ்வர்க் நரக்' (சொர்க்கம் நரகம்), "ஸ்வயம்வர்' (மனிதன் மாறவில்லை) படங்களில் நடித்தார்.
 மனிதன் மாறவில்லை என்று சொல்ல முடியுமா? முடியாது. காரணம், மனிதன் மாற்றப்படுவான். விதி செயல்படும்போது மனிதன் மட்டுமல்ல, ஒரு பெரிய நிறுவனத்தின் பாதையும் மாறித்தான் ஆகவேண்டும். அதுதான் விதியின் விளையாட்டு.
 விஜயாவில் விதி எப்படி விளையாடியது தெரியுமா?
 என் தந்தையாரின் அனுபவத்தைக் கேட்போம்:
 ""ஸ்வயம்வர் படம் 1980 இல் வெளியானது. அதன் வெற்றியைக் கண்டு மகிழ்ந்து போனார் என் மூத்த புதல்வர் பிரசாத். ஆனால் அந்த மகிழ்ச்சி அவருக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் நீடிக்கவில்லை. மகிழ்ச்சியில் திளைத்திருந்த எங்களைச் சோகக் கடலில் ஆழ்த்தினார் பிரசாத். யாரும் எதிர்பாராத சூழலில் கொடைக்கானலில் மாரடைப்பால் அகால மரணமடைந்து எனக்கும் சேஷம்மாவுக்கும் தாளாத புத்திர சோகத்தை ஏற்படுத்தினார் பிரசாத்.
 விஜயாவின் இளைய தலைமுறை தூண்களில் முக்கிய தூண் சாய்ந்தது. அதில் நாங்கள் மட்டுமல்ல, அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த எம்.ஜி.ஆர். உட்பட பிரசாத்தை அறிந்தவர்களும் தெரிந்தவர்களும் திக்குமுக்காடி, பேச நாயெழாமல் திகைத்து நின்றனர்.
 ஆறு மாதங்களில் எனக்கு மாரடைப்பு வந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து மீண்டு, உடல்நிலை தேறி வரும்போது, ஆந்திர மாநிலத்தின் அன்றைய முதல்வர் சென்னாரெட்டி என்னைப் பார்க்க வந்தார்.
 ""உங்களுக்கு மன ஆறுதல் வேண்டும். அதற்கு இடமாறுதல் அவசியம்'' என்று சொல்லி திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையின் தலைவராக என்னை நியமித்து ஆலயப் பணிகளில் ஈடுபடுத்தி எங்கள் துயரத்தைத் துடைக்க முனைந்தார்.
 ஒருநாள் எனக்கு ஆறுதல் சொல்ல இந்தி நடிகர் சஞ்சீவ் குமார் வந்திருந்தார். அப்போது அவர் என்னிடம், ""பிரசாத் இருந்த இடத்தில் நானே உங்கள் மகனாக இருந்து இந்திப்படத் தயாரிப்பு பொறுப்பை ஏற்கிறேன்'' என்றார் கோடை வெயிலில் நிழல் தரும் மரம்போல. அவரது நேரடி நிர்வாகத்தில் உருவான படம் "ஸ்ரீமான் ஸ்ரீமதி' (1982).
 ஆயினும் விதி விடவில்லை. துரத்தியது. சஞ்சீவ் குமார்மீது வைத்திருந்த அளவுகடந்த அன்பின் காரணத்தாலோ என்னவோ, பிரசாத், சஞ்சீவ் குமாரையும் தம்முடன் அழைத்துக் கொண்டார்.
 விஜயாவின் சகாப்தத்தில் இடைவெளி ஏற்பட்டது. விஜயாவின் படத்தயாரிப்பு நிறுவனக் கதவுகள் தற்காலிகமாக மூடப்பட்டன. ஒரு கதவு மூடப்பட்டால் இறைவன் இன்னொரு கதவைத் திறப்பான் என்பார்கள்.
 ஆனால், என்னைப் பொறுத்தவரையில் இறைவன் விஜயா மருத்துவமனை, திருமலை திருப்பதி தேவஸ்தான பணி என்ற இரு கதவுகளைத் திறந்து என்னை அரவணைத்துக் கொண்டான்.
 அடியவர்களுக்குச் செய்யும் பணிகள் ஆண்டவனுக்கே செய்யும் திருப்பணிகள் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து திருமலைக்கு பயணித்து அறப்பணிகளை மேற்கொண்டேன்.
 "ஏழுமலையானைத் தரிசிக்க தொலைதூரத்தில் இருந்து வரும் பக்தர்களே நமது விஐபிக்கள். அவர்களுக்கான அடிப்படை வசதிகள் உட்பட அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவது நமது கடமை... பொறுப்பு... கடவுள் நமக்கு அந்த வாய்ப்பை இப்பிறவியில் கொடுத்திருக்கிறார்' எனக் கருதினேன்.
 சென்னையிலிருந்து நான் திருமலைக்குச் செல்லும் போதெல்லாம் என் உதவியாளருடன் சமையற்காரர் ஒருவரும் உடன் வருவார். நான் அங்கே தங்கியிருக்கும்போது, என்னைக் காண வருபவர்களுக்கு தேநீர், சிற்றுண்டி உணவு அங்கேயே தயாரித்து வழங்கப்படும்.
 ""திருமலையில் ஏழுமலையானை அடிக்கடி தரிசிக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிட்டியிருக்குமே'' என்று என்னிடம் கேட்பார்கள்.
 திருமலைக்குப் போனவுடன் பக்தர்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யவே நேரம் போதாது. இறைத் தொண்டிலேயே இறைவனைக் காண்பேன். ஆலயத்தினுள் ஓரிரு முறை அதுவும் யாராவது முக்கிய பிரமுகர்கள் வரும்போது தவிர்க்க முடியாத நிலையில் உடன் சென்று தரிசிப்பதுடன் சரி என்பேன் அவர்களிடம்.
 அடியேன் திருமலை திருப்பதி அறங்காவலர் குழுத் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த கடைக்காரர்களிடம் தன்மையாகப் பேசி, அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து, சுற்றிலும் இருந்த அந்த இடத்தில், சுற்றுப் பிராகாரத்தில் பக்தர்கள் சுலபமாக நடந்து, கடந்து ஏழுமலையானைத் தரிசிக்க வசதியாக சகல அடிப்படை வசதிகளுடன் கூடிய க்யூ காம்ப்ளெக்ஸ் அமைத்தது, மலையடிவாரம் அலிபிரியில் இருந்து திருமலைக்கு நடந்து படியேறிச் சென்று ஏழுமலையானைத் தரிசிக்க செல்பவர்களுக்கு, வழி முழுவதும் நிழல் கூரை அமைத்தது, வழியில் பக்தர்கள் அமர்ந்து இளைப்பாறி புனித நடைப் பயணத்தைத் தொடர திண்ணைகள் அமைத்தது, குடிநீர் வசதி, பக்தர்கள் தங்கும் விடுதிகளின் விரிவாக்கம், திருமலையில் உள்ளூர் இலவசப் பேருந்து பயணம் ஏற்பாடு செய்தது இப்படி பல திட்டங்கள், பணிகள் செய்யக் கிடைத்த வாய்ப்பை பெரும் பேறாகக் கருதுகிறேன்.
 ஏழுமலையானின் அனுக்கிரகமும், அறங்காவலர் குழுவினரின் ஆத்மார்த்தமான முழு ஒத்துழைப்புமே இந்த நல்ல பணிகளைச் செவ்வனே செய்யக் காரணமாக அமைந்தன. நான் வெறும் கருவி மட்டுமே. மக்கள் பணியே மகேசன் பணி அல்லவா?''
 (தொடரும்)

தொகுப்பு: வைரஜாதன்

*நாகிரெட்டி நினைவுகள்

*மகன் விஸ்வம்
 எழுதுகிறார்

முழு கட்டுரையைப் படிக்க →