ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் மெலிவது ஏன்?
இரவில் சாப்பிடும் உணவானது அதிகசூட்டைக் கிளப்பும் அளவில் காரம், புளி, உப்புச்சுவை நிறைந்தவையாக இருந்தால் காலையில் உறக்கம் கலைந்து
என் வயது 23. எனக்கு உடற்சூடு உள்ளது. காலையில் உறக்கத்திற்கு பின் சூடு அதிகமாக இருப்பதை உணர்கிறேன். மேலும், உயரத்திற்கேற்ற உடலின்றி மெலிந்து காணப்படுகிறேன். எதைச் சாப்பிட்டாலும், உடலில் ஒட்டாத நிலை இருக்கிறது. இப்பிரச்னைகள் தீர ஆயுர்வேதத்தில் ஏதேனும் வழி இருக்கிறதா?
- ஜி.சுகுணா, தாராசுரம்.
உங்களுக்கு உடற்சூடு இயற்கையாகவே அதிகம் இருப்பதாகத் தென்படுகிறது. இதற்குப் பித்ததேகவாகு எனப்பெயர். இதுபோன்ற உடல்நிலை உள்ளவர்கள் காரம், புளி, உப்பு போன்ற சுவைகளை உணவில் அதிகம் சேர்க்காதிருப்பதே நலம். துவர்ப்பும் கசப்பும் இனிப்பும் மிக்க உணவு மிகவும் நல்லது. நெல்லிக்காய், சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்த பழச்சாறுகள், கசப்பும் துவர்ப்பும் புளிப்பும் மிக்க நார்த்தை, மாதுளை முதலிய கனிகள், வெயிலில் உலர்த்தி நன்கு பழுத்த பழம்புளி, கரும்புச்சாறு, சர்க்கரை கலந்த இனிக்கும் கடைந்த மோர் இவை ஏற்றவை. நெய், வெண்ணெய், இனிக்கும் தயிர், புளிக்காத இனிக்கும் பழங்கள் ஆகியவை நல்லவை.
Advertisement
சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளி, தூதுவளை, முருங்கைக்கீரை, வல்லாரை, புளியாரைக்கீரை, கோவை, பண்ணைக்கீரை, பூசணிக்காய், பரங்கிக்காய், முருங்கைக்காய், மெதுபாகல், கொம்புபாகல், கத்தரிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், அவரைக்காய், வெள்ளிரிபிஞ்சு, வாழைக்கச்சல், வாழைத்தண்டு, வாழைப்பூ, சர்க்கரைவள்ளிகிழங்கு, வெங்காயம், களாக்காய்,
சுண்டை, மணத்தக்காளி முதலிய வற்றல்கள் எலுமிச்சை, நார்த்தை, மிளகு, இஞ்சி, மாவடு முதலியவற்றாலான ஊறுகாய்கள் நீங்கள் சாப்பிட நல்ல உணவுப்பொருள்கள்.
இரவில் சாப்பிடும் உணவானது அதிகசூட்டைக் கிளப்பும் அளவில் காரம், புளி, உப்புச்சுவை நிறைந்தவையாக இருந்தால் காலையில் உறக்கம் கலைந்து எழும்பொழுது உடற்சூடு அதிகமாக இருக்கும். அதனால் நீங்கள் இரவில் அவரைப்பிஞ்சு, அத்திக்காய், பசுவின் பால் கடைந்த மோர், முருங்கைபிஞ்சு, துவரம்பருப்பு, மணத்தக்காளி வற்றல் முதலியவற்றை உணவாகச் சேர்ப்பது நல்லது.
புழுங்கலரிசியை சாதமாக வடித்து இரவில் சாப்பிடுவதால் நன்றாகத் தூங்கி காலையில் எழுந்ததும் களைப்பின்றி உற்சாகம் தருமளவிற்கு இந்த உணவு அமைப்பானது உங்களுக்கு ஏற்படுத்தித் தரும். மேலும், உடற்சூடும், எதுக்களிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பைத் தரும். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை குளிர்ச்சியும், இனிப்பும் நிறைந்த மருந்துப் பொருள்களைச் சாப்பிட்டு பேதி செய்து கொள்வது நலம்.
பேதி மூலம் பித்தத்தை வெளியேற்றிவிடுவது நல்லது. உலர்திராட்சை, பிஞ்சு கடுக்காய், ரோஜா மொக்கு, சூரத்தாவாரை விதை போன்றவை இந்த பேதிமுறைக்கு பயன்படக்கூடியவை. இரவு முழுவதும் இவற்றை வகைக்கு 5 கிராம் வீதம் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை கசக்கிப் பிழிந்து நீரை மட்டும் குடித்து பித்தத்தை வெளியேற்றிக்கொள்ளவும்.
தூய கட்டை சந்தனத்தை இழைத்து நெற்றியில் இட்டுக்கொள்ளுதல், 27 முத்துக்கள் கோர்த்த மணிமாலையை கழுத்தில் அணிந்து கொள்வதும், கற்பூரம், சந்தனம்,
விளாமிச்சை வேர், வெட்டிவேர் ஆகியவற்றை குளிர்ந்த நீரில் அரைத்து, சிறிது நேரம் நெற்றியில் பூசி வைத்திருத்தலும், குளிர்ந்த நீரில் குளிப்பதும் உடற்சூட்டைக் குறைக்கக் கூடிய சில உபாயங்களாகும்.
இரவு நேரங்களில் குளிர்ச்சியான நிலவைப் பார்த்து அமர்ந்திருப்பதும், மனதிற்கு இன்பம் தரும் இசை, பாட்டு ஆகியவற்றைக் கேட்பதும், குளிர்ந்த நறுமணம் வீசக்
கூடிய காற்றை அனுபவிப்பதும், கட்டுப்பாடுகளை ஏதும் விதிக்காத மனதிற்குப் பிடித்த நல்ல நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தலும், சிறு குழந்தையின் மழலைப்பேச்சை கேட்டிருத்தலும் உடற்சூட்டை மனதின் மூலமாக உடலில் பரவியுள்ள பித்தத்தை குறைக்கக் கூடியவை என அஷ்டாங்கஹ்ருதயம் எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது.
சந்தனாதிதைலம், சந்தனபலாலாக்ஷôதிதைலம், ஹிமஸôகரதைலம், அம்ருதாதி தைலம் போன்ற தைலங்களில் ஒன்றை தலையில் சுமார் அரை, முக்கால் மணிநேரம் ஊறவைத்து காலையில் குளித்து வரலாம். உடற்சூட்டைத் தணிக்கக்கூடிய சிறந்த ஆயுர்வேத தைலங்கள் இவை.
உடற்சூட்டைக் குறைப்பதற்கான தைலதாரா எனப்படும் தலையில் மூலிகை தைலத்தை தாரையாக ஊற்றும் சிகிச்சை முறை, நஸ்யம் எனப்படும் மூக்கில் விடப்படும் மூலிகைத் தைலங்கள் போன்ற சிகிச்சை முறைகளால் உங்களுடைய உயரத்திற்கேற்ற உடலைப் பெறலாம். உண்ணும் உணவானது நன்றாக உடலில் சேர்ந்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இவை அனைத்தும் ஆயுர்வேத ஆஸ்பத்திரிகளில் இன்று நன்றாக செய்யப்படுகின்றன.
(தொடரும்)