முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மயக்கம் வந்தால் என்ன மருத்துவம்?

எனக்கு வயது 74. அடிக்கடி மயக்கம் வருகிறது. ஆங்கில மருந்து ஊசி போட்டால் 2 நாட்களுக்கு சுமாராக உள்ளது.

Updated On : 19 டிசம்பர், 2015 at 7:28 PM
பகிர்:

எனக்கு வயது 74. அடிக்கடி மயக்கம் வருகிறது. ஆங்கில மருந்து ஊசி போட்டால் 2 நாட்களுக்கு சுமாராக உள்ளது. அதன் பிறகு மறுபடியும் மயக்கம் ஏற்படுகிறது. இது எதனால்? எப்படிக் குணப்படுத்துவது?

-சி.வி.கிருஷ்ணன், பள்ளபட்டி.

வயிற்றைச் சார்ந்த பித்தமும், மனதைச் சார்ந்த ரஜஸ் எனும் தோஷமும், உடல் முழுவதும் சஞ்சரிக்கக் கூடிய வாதமும், ஒன்றோடு ஒன்று கைகோர்த்துக் கொண்டால், மயக்கம் ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இந்த மூன்றையும் கெடுக்கக் கூடிய காரமான சுவையை, நீங்கள் உணவில் பெருமளவு குறைப்பதும், காரமான விவாதங்களுக்கும், மனப் பொறுமலை ஏற்படுத்தும் சண்டை சச்சரவுகளுக்கும் இடம் தராமல் இருப்பது நலம். வயோதிகத்தில் மனஅமைதியோடு, சாத்வீகமான உணவு வகைகளான பால், நெய், மோர், வெண்ணெய், தயிர் போன்றவற்றை மிதமாக உணவில் சேர்க்கவும். புலால் உணவைத் தவிர்க்கவும்.

Advertisement

கழுத்தினுடைய முதுகெலும்புப் பகுதியில் அமைந்துள்ள வில்லைகளின் தேய்மானத்தாலும் மயக்கம் ஏற்படலாம். அதற்கு அப்பகுதியை ஸ்கேன் செய்து பார்ப்பதே நல்லது. அப்படி ஏதேனும் பிரச்னை தென்பட்டால், கார்ப்பாஸôஸ்த்யாதி எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலத்தை, மூக்கில் விடுவதும், தலையில் ஊறவிடுவதும், கழுத்தில் முதுகெலும்புப் பகுதியில் சூடாக சிறிது நேரம் பஞ்சில் முக்கி போட்டு வைத்திருப்பதும் அவசியமாகும். இதனுடைய பயன்பாட்டு முறையை, நீங்கள் ஆயுர்வேத மருத்துவரின் மூலமாக அறிந்து கொள்ளலாம். வில்லைகளை வலுப்படுத்தக்கூடிய க்ஷீரபலா தைலம், அஸ்வகந்தாரிஷ்டம், தசமூலரஸôயனம், பிரஸôரிண்யாதி கஷாயம் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடுவதும் நலமே.

காதின் உட்புறத்திலுள்ள கோக்லியா எனும் சிறிய குழாயின் உள்ளே இருக்கக்கூடிய எண்டோலிம்ப் எனும் நீரினுடைய அளவானது குறைந்தாலும் மயக்கம் ஏற்படக்கூடும். போஷகாம்சம் நிறைந்த இந்தப் பகுதியின் வறட்சியை, மேம்படுத்தக்கூடிய சத்தான உணவையும், பழங்களையும் சாப்பிட வேண்டும். ஆனால் அவற்றைச் செரித்து, சத்தாக மாற்றக்கூடிய அளவிற்கு பசித்தீ சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

நரம்புகளில் ஏற்படக்கூடிய பலஹீனம், மூளைச் சுருக்கம், ரத்தக்குழாய்களின் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டிய பிராண வாயு, ரத்த ஓட்டம், சத்தான உணவுப் பகுதி போன்றவை குறைதல் ஆகியவற்றின் காரணமாகவும் மயக்கம் ஏற்படலாம். தலைக்குச் செய்யப்படும் எண்ணெய் மசாஜ், சிரோவஸ்தி எனப்படும் தலையில் எண்ணெய் கட்டும் சிகிச்சை போன்றவை இதுபோன்ற நிலையில் பயன் தரலாம்.

மூலிகைத் தைலத் தேய்ப்பு, இலை ஒத்தடம், விளக்கெண்ணெய் கொடுத்து பேதி செய்தல், நவரக்கிழி எனும் உயர்ரக அரிசியை சித்தாமுட்டி வேர்க்கஷாயம் மற்றும் பாலுடன் வேக வைத்து, உடலெங்கும் தேய்த்து விடுதல், பசித் தீயை நன்றாகத் தூண்டிவிட்டு, உடல் போஷணையைத் தரும் உணவு மற்றும் ஆயுர்வேத மருந்துகள், மனநலம் தரும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், மனதை வலுப்படும் மூலிகை நெய் மருந்துகள் ஆகியவற்றின் மூலம், நீங்கள் உடல் மற்றும் மனதை வலுப்படுத்தி, மயக்கம் ஏற்படாதவாறு உடலைத் தேற்றலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.