முகப்பு
தினமணி கதிர்

பொறியியல் கல்வியின் எதிர்காலம் ?

வருடத்துக்கு வருடம் பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, இந்த ஆண்டு, 2 லட்சத்து 430 இடங்களுக்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:49 AM
பகிர்:

வருடத்துக்கு வருடம் பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, இந்த ஆண்டு, 2 லட்சத்து 430 இடங்களுக்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் சுமார் 47 ஆயிரம் பேர் கலந்தாய்வுக்கே வரவில்லை. சில மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டு, தங்களுக்கு ஏற்ற பாடம், கல்லூரி கிடைக்காமல் வெளியேறினர். இறுதியில் 1 லட்சம் இடத்தைத் தட்டுத் தடுமாறி நிரப்பிக்கொண்டுள்ளது பொறியியல் கல்வி.

ஆக, இன்னும் 1 லட்சம் இடங்களுக்கும் மேல் காலியாக இருக்கிறது!

தமிழ்நாட்டில் இருக்கும் 538 பொறியியல் கல்லூரிகளில் சராசரியாகப் பார்த்தால் பாதிக்கு பாதி கல்லூரிகளின் இடங்கள் காலியாக இருக்கின்றன.

பல கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில்தான் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இன்னும் சில கல்லூரிகளில் ஒரு மாணவர்கள் கூட சேரவில்லை. தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இந்த நிலைதான் இன்றைக்கு. கடந்த ஆண்டே 7 கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 6 கல்லூரிகள் மூடுவதற்கு ஏ.ஐ.சி.டிக்கு விண்ணப்பித்துள்ளன.

பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் குறைத்திருப்பதும், வேலை வாய்ப்பு இன்மையுமே இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஏராளமான பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேராமல் போனதற்குக் காரணம். இந்தக் கல்லூரிகளை "விற்பனைக்கு' என்று விளம்பரப் பலகை மாட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால், யார் வாங்குவது?

எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள், கலை - அறிவியல் கல்லூரிகளின் பக்கம் போய்விடுகிறார்கள். குறைந்த கட்டணம், ஒரு டிகிரியை முடித்தவுடன் ஏதாவது வேலைக்குச் சென்றுவிடலாம். ஏதாவது அரசுத் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம்.

2010க்கு முன்பு வரைகூட சாஃப்ட்வேர், மெக்கானிக்கல் உள்ளிட்ட பொறியியல் பிரிவுகள் படித்த மாணவர்களுக்கு உடனுக்குடன் வேலை கிடைக்கும் நிலை இருந்தது. ஆனால், இன்றைக்கு பிரபலமான கல்லூரிகளில்கூட "கேம்பஸ் இன்டர்வியூ' என்று சொல்லப்படும் வளாகத் தேர்வுகளை நடத்துவதே இல்லை. ஆனால், பல கல்லூரிகள், பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் கல்லூரிகளில் வளாகத் தேர்வை நடத்துவதாக விளம்பரம் செய்கின்றன.

இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் ஒரு மாணவன் பல லட்சங்களைச் செலவு செய்து பொறியியல் படிப்பான்? அதனால், சில ஆயிரம் செலவில் கலை - அறிவியல் படிக்கப் போய்விடுகிறார்கள்.

பொறியியல் படிப்பில் ஆர்வம் குறைந்து வருகிறது என்பதற்கு இந்த வருடம் கலை அறிவியல் படிப்புக்கு இருந்த கடும்போட்டியே சாட்சி.

உண்மையிலேயே பொறியியல் படிப்பின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்துவிட்டதா?

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் கூறுகிறார் :

""ஒரு போதும் அப்படிச் சொல்ல முடியாது. வி.கே.ஆர்.வி.ராவ் என்ற பொருளாதார மேதை, இந்தியாவின் கல்வி மந்திரியாக இருந்தவர். என்ன சொல்கிறார் என்றால், "தேவைக்கு ஏற்பத்தான் கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும். தேவைக்கு மீறி கல்வி நிறுவனங்கள் இருந்தால் அதில் படித்துவிட்டு வெளியேறுபவர்களுக்கு வேலை இல்லாத சூழல்தான் ஏற்படும்' என்கிறார்.

இன்றைக்குப் பொறியியல் படிப்பிலும் அதுதான் நிலைமை. நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்று வேலை வாய்ப்புக்கான சூழல் இல்லாமலேயே தேவைக்கு மீறி பொறியியல் கல்லூரிகளைத் திறந்துவிட்டார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு "ஐடி' துறையில் இருந்த சாதகமான பலனைக் காரணம் காட்டி, அதை மட்டுமே மையமாக வைத்து பல பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால், உண்மையில் நடந்தது என்ன...? உலகப் பொருளாதாரம் வீழ்ந்தபோது, ஐடி துறை ஆட்டம் கண்டது. அங்கு லட்சங்களில் சம்பளம் பெற்றவர்கள், ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். பலர் இதைத் தாங்கிக்கொள்ள முடியால் தற்கொலையும் செய்து கொண்டார்கள்.

எனவே ஒரு துறையை மையமாக வைத்து இவ்வாறு செய்தது தவறு. இதனால் கல்லூரிகள் கட்ட செலவு செய்த பணமும், மாணவர்கள் சொத்து பத்தையெல்லாம் விற்று படித்த பணமும்தான் விரயமானது.

அதோடு கல்லூரிகளுக்கு மாணவர்கள் தேவை என்பதால், கல்விக் கடன் என்ற பெயரில் மாணவர்களுக்குப் பொறியியல் ஆசை காட்டப்பட்டது. இதனால் லாபம் அடைந்தது கல்லூரிகள் மட்டுமே. மாணவர்களுக்கோ கடன்காரன் என்ற பட்டம்தான் மிச்சம். படித்து முடித்து வெளியேறும்போதே "கடன்காரன்' என்ற பட்டத்தோடு வெளியேறினார்கள் மாணவர்கள்!

வேலை வாய்ப்புகளை உருவாக்காமல், அது சார்ந்த படிப்புகளை மட்டும் உருவாக்கினால் எப்படி? இந்தியாவில் வருடத்துக்கு 8 லட்சம் பொறியியல் மாணவர்கள் படித்துவிட்டு வெளியேறுகிறார்கள். இதில் 80 ஆயிரம் பேர் மட்டுமே உரிய படிப்புக்கு ஏற்ற வேலை பெறுகிறார்கள். அதாவது 10 சதவிகிதம் மாணவர்களுக்கு மட்டுமே உரிய வேலை கிடைக்கிறது. மற்றவர்களின் நிலைமை சொல்லி மாளாத் துயரத்தில்தான் முடிகிறது.

இந்த நிலையில் பாஸ் மார்க் வாங்கினால் கூடப் போதும் பொறியியல் படிக்கலாம் என்று சொல்கிறார்கள். உண்மையில் அப்படிப்பட்ட மாணவனால் பொறியியல் பாடத்தை படிக்கவும் முடியாது; முடிக்கவும் முடியாது. அதனால்தான் பொறியியல் படிப்பவர்களில் 4 வருடத்தில் முடிப்பவர்கள், 5,6 வருடத்தில் முடிப்பவர்கள் பட்டியலை வெளியிடவே மாட்டர்கள். இது மாணவர்களை ஏமாற்றும் செயல்.

இதை ஓரளவு புரிந்து வைத்திருப்பதால்தான் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதில்லை. சென்ற ஆண்டும், இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்களைப் பார்த்தாலே இதை புரிந்துகொள்ள முடியும். சென்ற வருடம் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்களும், இந்த ஆண்டு 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட முதல் தலைமுறை மாணவர்களும்தான் பொறியியலை நிரப்பியுள்ளனர்.

இதனால் இன்றைக்குப் பொறியியல் கல்லூரிகளை மூடும் நிலைமை. அடுத்தடுத்த ஆண்டுகளில் இது இன்னும் வேகமாக நடைபெறும். இவற்றைச் சத்திரங்களாகவோ, பள்ளிகளாகவோ கூட மாற்ற முடியாது. 50 ஆயிரம் சதுர அடியில் கட்டடங்கள், தொழில்நுட்ப உபகரணங்கள் என்று இருப்பதால் அதற்கும் வழியில்லை'' என்கிறார் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்.

கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகிறார் :

""பொறியியல் கல்வியின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்துவிட்டது என்று சொல்வதைவிட, பொறியியல் கல்வியை அவர்கள் புரிந்துகொண்டு கற்பதில்லை என்பதுதான் உண்மை. கல்லூரியில் படிக்கும் பாடங்களைத் தாண்டி, இன்றைக்குத் தொழில்துறையின் தேவைகள் வேறுமாதிரி இருக்கின்றன. அதற்கு ஏற்றாற்போல் திறமையை வளர்த்துக் கொண்டால்தான் அத்துறையில் ஜெயிக்கமுடியும். வெறும் பட்டங்கள் பெறுவதால் மட்டும் எந்தப் பயனும் இல்லை'' என்கிறார்.

பொறியியல் கல்வியின் தரம் சரியில்லை. படிப்பவர்களுக்குச் செய்முறை தகுதியே வளர்வதில்லை. வெறும் எழுத்தெண்ணிப் படித்தவர்களால் இன்றைய தொழில்நுட்ப வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால், பொறியியல் படிப்புகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் மறு சீராய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் தற்போது வலுப்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.