முகப்பு
தினமணி கதிர்

இவர் கேமராவில் சிக்காத விளையாட்டு நட்சத்திரமே இல்லை!

விளையாட்டு என்றல் ஒலிம்பிக்ஸ் (Olympics), ஏசியன் கேம்ஸ் (Asian Games), பிபா (FIFA), யு. எஸ். ஓபன் (US OPEN), டென்னிஸ், விம்பிள்டன் (Wimbledon), கிரிக்கெட்டில் உலககோப்பை, ஐசிசி (ICC), மற்றும் ஐபில் (IPL) என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:02 PM
பகிர்:

விளையாட்டு என்றல் ஒலிம்பிக்ஸ் (Olympics), ஏசியன் கேம்ஸ் (Asian Games), பிபா (FIFA), யு. எஸ். ஓபன் (US OPEN), டென்னிஸ், விம்பிள்டன் (Wimbledon), கிரிக்கெட்டில் உலககோப்பை, ஐசிசி (ICC), மற்றும் ஐபில் (IPL) என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவை எல்லாவற்றையும், இவரும் பார்த்து, நம்மையும் பார்க்க வைத்தவர். இது மட்டுமல்லாமல் இவருக்கு தெரியாத, அல்லது இவர் கேமராவில் படமெடுக்கப்படாத விளையாட்டு நட்சத்திரமே இல்லை என்றே கூறலாம். இந்திய விளையாட்டு வீரர்களும் சரி, வீராங்கனைகளும் சரி, உலகப்புகழ் பெற்ற வீரர்களும், வீராங்கனைகளும் சரி, இதற்கு விதிவிலக்கல்ல.

டென்னிசில் ரோஜர் பெடரர் (Roger Federer), செரீனா வில்லியம்ஸ் (Serena Williams), சானியா மிர்சா (Sania Mirza), சாய்னா நேவல் (Saina Nehwa), கிரிக்கெட்டில் சச்சின் டெடுல்கர் (SachinTendulkar), தோனி (M.S.Dhoni), கால்பந்தாட்டத்தில் லியோனெல் மெசி (Lionel Messi), மேரடோன (Maradona) என புகழ் முகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவர் தான் சுகுமார்.

கேமராவும் கையுமாக அலையும் இவரை நிறுத்தி விசாரித்தோம் :

""சிறு வயது முதலே புகைப் படங்களை பார்ப்பதில் ஒரு ஆர்வம் இருந்தது. சென்னை மாம்பலத்தில் புகைப்படக் கடை வைத்துள்ள ஒருவரிடம் எனக்கு கேமரா வேண்டும் என்று சொல்லி இருந்தேன். அவர் தன் நண்பர் சிங்காரத்திடம் சொல்ல, ஒரு நிக்கான் கேமராவை என்னிடம் கொடுத்து, ""வாங்கிக் கொள்கிறாயா?'' என்று கேட்க, நானும் அவர்கள் சொன்ன விலையில் பாதி கேட்க, ""சரி'' என்றார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் நான் நிற்க, என் தந்தையார் தான், ""சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும்'' என்று கூறி வாங்கிக் கொடுத்தார்.

அந்த நிக்கான் (Nikon) கேமரா என்னிடம் பல வருடங்கள் இருந்தது. பின்னர் மோனோலிச ரமாமணியிடம் சிறிது காலம் இருந்தேன். அப்பொழுது கமல் சார் அளித்த ஒரு விலை உயர்ந்த கேமராவை எனக்கு அளித்தார். அந்த கேமராவினால் பல படங்கள் எடுத்தேன். பின்னர் கேனன்(இஹய்ர்ய்) கேமிராவை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்தேன். இன்று என் கேமராவில் பதிவாகாத விளையாட்டு நட்சத்திரமே இல்லை என்று தைரியமாகக் கூறலாம். உலகப் புகழ் பெற்ற விளையாட்டு நட்சத்திரங்கள் எல்லாருக்கும் என்னைத் தெரியும்.

சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி ஆட்டத்தை ஆடப்போகிறார் என்று தெரிந்தவுடன், நான் அங்கு ஆஜரானேன். அவர் ஆடி முடித்து விட்டு வரும் பொழுது ஒரு படமெடுத்தேன். நான் அவரை பல ஆயிரம் முறை படம் எடுத்திருந்தாலும், இந்தப் படம் முக்கியமாக எனக்குப் பட்டது. எனக்கு மட்டுமல்ல, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கூட.

புகழ் பெற்றவர்கள் என்றால் ஓர் ஆல்பமாகத் தயாரித்து அவர்களுக்கு நான் அளிப்பது வழக்கம். இதே முறையில் சச்சினுக்கும் நான் தர, சில மாதங்களுக்குப் பின் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சச்சினுக்கு நான் எடுத்த, அவரது படம் தான், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பிடித்திருக்கிறது என்றும், அதை தான் எழுதும் சுயசரிதை புத்தகத்தின் முகப்பு படமாக வைத்துக் கொள்ள விரும்புகிறார் என்றும் கூறினார்கள். எனக்கு என்ன சொல்வது? என்று தெரியவில்லை. தாமதிக்காமல் என் சம்மதத்தை நான் சொல்ல, என் பெயருடன் அவரது புத்தகம் இன்றும் கடைகளில் கிடைக்கிறது. என்னை மும்பைக்கு வரவழைத்து, எனக்கு அவர் கையாலேயே புத்தகமும், ஒரு வாழ்த்து பத்திரமும் அளித்து மகிழ்வித்தார்கள்.

இன்று இவ்வளவு விளையாட்டுத் திருவிழாக்களையும் (ஒலிம்பிக் முதல் ஐபிஎல் வரை) எந்த ஒரு பத்திரிகையின் பலமும் இல்லாமல் சென்று வரும் ஒரே புகைப்பட நிபுணர் நானாகத்தான் இருப்பேன். ஒரு முறை ஒலிம்பிக்ஸ் குழு என் பெயரைப் பரிந்துரை செய்யவில்லை. இதை தெரிந்து கொண்ட நான், ஓர் இ-மெயிலை அதன் தலைவருக்கு தட்டி விட்டேன். உண்மை நிலையைப் புரிந்து கொண்ட, அவர் தனது சிபாரிசுடன் எனக்குத் தனியாக சர்வதேசப் புகைப்பட நிபுணர் என்ற தனி அந்தஸ்தை அளித்தார். விளைவு, கும்பலோடு இருந்த நான் தனியாக ஒன்பதாவது இடத்துக்கு உயர்ந்தேன். இந்த வருடமும் நான் ஒலிம்பிக் செல்ல அழைப்பு வந்து விட்டது. பணம் தான் இல்லை. ஆனால் நான் எப்படியாவது செல்வேன் என்று நிச்சயமாக நம்புகிறேன். இவை எல்லாவற்றிற்கும் நான் தினமும் வணங்கும் என் முப்பாத்தம்மனே காரணம்'' என்று கூறுகிறார் புகைப்பட நிபுணர் சுகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.