தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆழ்ந்த உறக்கத்திற்கு..!

தினமணி

எனக்கு வயது 61. எனக்கு இரவில் உறக்கம் வருவதேயில்லை. இதன் காரணமாக சமீப காலமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். எனது இந்த பழக்கத்தை முற்றிலும் நிறுத்தவும், இரவு தூக்கம் நன்றாக வருவதற்கும் ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்து உள்ளதா?
 -ஊர், பெயர் வெளியிட 
விரும்பாத வாசகர்.
 
வரக்கூடிய கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் கெடுத்துக் கொள்ளும் வழியைத்தான் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். மதுபானம் அருந்துவதால் உடலில் ஏற்படும் முக்கியமான சில மாற்றங்களை பற்றி ஆயுர்வேதம் கூறும் கருத்து, தீபனம்- வயிற்றிலுள்ள அமிலச் சுரப்பைத் தூண்டி பசியை அதிகப்படுத்துகிறது.
ரோசனம் - நாக்கிலுள்ள ருசி கோளங்களை திறந்துவிட்டு, மேலும் சாப்பிட வேண்டும் என்ற ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துவதும்,
தீக்ஷ்ணோஷ்ணம் - உடல் உட்புறக்குழாய்களில் ஊடுருவிச் செல்லும் தன்மையும், உடலிலுள்ள சூட்டை அதிகப்படுத்துவதும்,
துஷ்டிபுஷ்டிதம் -  மனக்கிளர்ச்சி ஏற்படுத்துவதும், உடலை புஷ்டியாக்குவதும்,
சஸ்வாதுதிக்தகடுகம் -  சிறிது இனிப்பும், கசப்பும், காரமான சுவையுமுடையதும்,
அம்லபாகரஸம் - புளிப்புச்சுவையை நாக்கில் உணர்த்துவதும், சீரண இறுதியிலும் புளிப்புச்சுவை
யுடனேயே இருப்பதும், வயிற்றோட்டத்தை அதிகப்படுத்தி, மலத்தை உடைத்து வெளியேற்றுவதும்,
பித்தாஸ்ரதூஷ்ணம் -  பித்ததோஷத்தையும் ரத்தத்தையும் கெடுப்பதும்,
ரூக்ஷம்சூக்ஷ்மம் - வறட்சியை ஏற்படுத்துவது, உடலிலுள்ள சிறு ஓட்டைகளின் வழியே தன் வீர்யத்தினால் (ல்ர்ற்ங்ய்ஸ்ரீஹ்) உள் நுழையக் கூடியதும்,
வாதஷேலஷ்மஹரம் - வாத கபங்களை தம் சாதாரண நிலையிலிருந்து குறைப்பதுமாகிய குணங்களையும் செயல்பாடுகளையும் கொண்ட மதுபானம், தூக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய குணங்களுக்கு நேர்எதிராக இருப்பதால், இப்பழக்கத்தால் தங்களுக்கு நன்மையேதுமில்லை. இப்பழக்கத்தை நிறுத்த மிகுந்த மனவலிமை வேண்டும். திடமான மனதுடன், மதுபானம் அருந்தமாட்டேன் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, மதுபானம் அருந்தும் நண்பர்களை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும். மனதை வலுப்படுத்தும் ஆயுர்வேத மருந்துகளாகிய கல்யாணகிருதம், மஹாகல்யாணகிருதம் போன்ற நெய் மருந்துகளில் ஒன்றை சுமார் 15 மி.லி. உருக்கி, சிறிது கடுகு, சீரகம் தாளித்துக் குழம்பு, ரஸம் ஆகியவற்றில் சேர்த்துச் சாப்பிடுவது நலம்.
 உறக்கத்தை தரும் தமஸ் எனும் மனோ தோஷத்தை வலுப்படுத்த உதவும் எருமைப்பால், அதிரஸம், கசகசா, எருமைப் பாலால் தயாரிக்கப்பட்டத் தயிர், தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தல், காதினுள் எண்ணெய்விட்டு நிரப்புதல், கண்களில் எண்ணெய் அல்லது மூலிகை நெய்கட்டும் வைத்திய முறை, வாயினுள் எண்ணெய்விட்டுக் குலுக்கி துப்புதல் போன்றவை சிறந்தவை. மனைவியினுடைய அரவணைப்பு மன மகிழ்ச்சி, அன்றைய செயல்களை திருப்தியுடன் செய்து முடித்திருத்தல், மனதிற்கு இன்பம் தரும் இசை போன்றவை தூக்கம் நம்மை தழுவிக் கொள்ளச் செய்யும் சிறந்த வழிகளாகும்.
 ஆயுர்வேத மருந்துவமனைகளில் செய்யப்படும்  "சிரோவஸ்தி' எனும் தலையில் எண்ணெய் நிரப்பும் சிகிச்சை, தலையிலும் நெற்றியிலும் தாரையாக ஊற்றப்படும் "தைலதாரா' சிகிச்சை, உடலெங்கும் எண்ணெய் தடவி, பாதம் முதல் உச்சந்தலை வரை இதமாகப்பிடித்துவிடும் வைத்திய முறை போன்றவை உறக்கத்தை வரவழைப்பதில் தோல்வி அறியாதவை. வெளி நாட்டினர் பலரும் இந்த சிகிச்சை முறைகளில் அதிக நாட்டம் கொண்டு, நம் நாட்டில் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். 
 5 கிராம் அமுக்கராச் சூரணத்தை சிறிது பொடித்த கல்கண்டுடன் கலந்து இரவில் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன், பால் அல்லது தேனுடன் கலந்து சாப்பிட, தூக்கம் நன்றாக வரும் என்று "வங்கசேனன்' எனும் முனிவர் கூறுகிறார். பகலில் நன்றாக உழைப்பவர்கள், இரவில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. 
(தொடரும்) 
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT