பூவிதழின் மென்மையினும் மென்மையான
புனித உள்ளம் - அன்பு உள்ளம்
அரவணைக்கும் அன்னை உள்ளம்! - அவர்
மலர் இதழ்கள் தமிழ் பேசும்
மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும் !
விழிமலர்கள் வேலாகும் - வாளாகும்
தீங்கொன்று தமிழ்த் தாய்க்கு வருகுதென்றால்!
கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும் பயணம் நிற்காது....
முடுகிற் செறிந்த தமிழார்வம்
முதிரா இளைஞர் ஆருயிராய்ப்
பெருகச் செய்த செயல் மறவர்
சிறப்பைப் பாடக் கேண்மினோ!
தங்கு கண் வேல் செய்த புண்களை
அன்பெனும் வேது கொண்டொற்றியுஞ்
செங்கனி வாய் மருந்தூட்டுவார்
சீர்மையைப் பாடக் கேண்மினோ!
....தமிழகம் மறவாத் தலையங்கமன்றோ?
இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?
தம்பியுடையான் படைக்கஞ்சான்
ஒப்பில்லா வரிகள் உரைத்திடும் பனுவல்
மனோன்மணீயம் எனினும் - நம்
மனதில் பதித்தவர் அண்ணா வன்றோ!
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
அரசியல் பண்பினை போதிக்கும் அழகே!
மறப்போம் - மன்னிப்போம்
மாற்றார் ஏசல் தாங்கிடும் மாண்பே!
எவர் கற்றுத் தந்தார் இதனை?
சுவர் வைத்துச் சித்திரம் எழுதுதல்போல்
நயமிகு பண்புடன் அரசியல் நடாத்தல்
நன்றென்றார் அண்ணா...
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லையென்று
பொருள் குவித்து வளம் செழித்த நாட்டில்- இன்று
இருள் கவிந்து வாட்டம் கோடி போட்டதங்கே.
வாடினாள் தமிழன்னை- சோகப் பாட்டுப்
பாடினாள் தமிழன்னை -
இன்றென்ன ஆயிற் றென்றான்.
குன்றனைய மொழிக்கு ஆபத்தென்றாள்;
சென்றடையக் குடிலில்லை ஏழைக்கென்றாள்;
அழுதகண்ணைத் துடைத்தவாறு
அமுதமொழி வள்ளுவனும்
அம்மா நான் எங்கே பிறப்பதென்றான்?
தொழுத மகன் உச்சி மோந்து - ஆல
விழுதனைய கைகளாலே.. அணைத்துக்கொண்டு
உழுத வயல் நாற்றின்றிக் காயாது
இனிமேலே என மகிழும்
உழவன் போல் உள்ளமெல்லாம் பூரிப்புத் துள்ளி எழ
காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே
கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே!
நீ காஞ்சியிலே பிறந்திடுக! என்றாள்.
பிறந்திட்டான் நம் அண்ணனாக;
அறிவு மன்னனாக.
தலைவரென்பார், தத்துவ மேதை என்பார்,
நடிகரென்பார், நாடக வேந்தரென்பார்
சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல்
பெற்றார் என்பார்.
மனிதரென்பார் மாணிக்கமென்பார் மாநிலத்து
அமைச்சரென்பார்.
அன்னையென்பார், அருள் மொழிக் காவல் என்பார்
அரசியல் வாதி என்பார் - அத்தனையும்
தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் - நெஞ்சத்து அன்பாலே
"அண்ணா' என்ற ஒரு சொல்லால்
அழைக்கட்டும் என்றே - அவர் அன்னை
பெயரும் தந்தார்.
கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்... இன்று
மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை?
கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா...
எழுந்து வா எம் அண்ணா....
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா - நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா...
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.