தினமணி கதிர்

மாணவிக்கு உதவிய  நாய்க்கு கெளரவப் பட்டம்...!

சேரன்

கல்லூரிக்கு  மாணவியுடன் சென்று வந்த  நாய்க்கு   கெளரவ  டிப்ளமோ வழங்கப்பட்டுள்ளது.   இந்தியாவில் அல்ல. அமெரிக்காவில்!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வாழ்பவர்   பிரிட்னி  ஹவுல். இவர்  ஏறக்குறைய ஒரு மாற்றுத்திறனாளி. கல்லூரி மாணவி. இடுப்பு வலி காரணமாக  எப்போதும்  சக்கர நாற்காலியில்தான்  முழு நேரமும்  இருப்பார். 

பிரிட்னி தனது   அன்றாட  பணிகளுக்கு மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். தனக்கு உதவியாக  ஒரு நாயை வளர்க்கலாம் என்று  முடிவு  செய்தார். நாய்களுக்கு பயிற்சி தரும் நிலையத்திற்குச் சென்றார்.

"நாய்கள்  சக்கர நாற்காலியைப் பார்த்தால் பயப்படும். அதனால் எந்த நாய் உங்களிடம் வருகிறதோ அந்த நாயை தேர்ந்தெடுங்கள்'' என்றார்கள். ஒரு நாய் மட்டும் ஓடி வந்து பிரிட்னியின்  மடியில் உட்கார்ந்து கொண்டது. அது,  கோல்டன் ரெட்ரிவர் இனத்தைச் சேர்ந்தது.  நாய்க்கு  "கிரிஃபின்'  என்ற பெயரையும் வைத்தார்.  தனக்கு தேவையான உதவிகளைச் செய்ய  நாயைப் பழக்கினார்.

கிரிஃபின் எப்போதும் நிழலாக  பிரிட்னியைத் தொடரும்.  பிரிட்னி  சக்கர நாற்காலியில்  நகரும் போது வழியில் மூடியிருக்கும் கதவைத்  திறந்து மூடவும், விளக்கு சுவிட்ச்களை போடவும் ஆஃப் செய்யவும், செல் போன் வேண்டுமென்றால் எடுத்துத் தரவும், புத்தகங்களை கொண்டு வரவும்  திரும்பக் கொண்டு போய் வைக்கவும்   கிரிஃபின் பழகிக் கொண்டது. 

நியூயார்க்கில் உள்ள போஸ்ட்டாம் என்ற கல்லூரியில்  பிரிட்னி  பட்டம் படிக்க சென்றார். கல்லூரிக்கு  பிரிட்னி செல்லத் தொடங்கியது முதல், தினமும் கிரிஃபின் கல்லூரிக்கு போகத் தவறவில்லை. கல்லூரி  வளாகத்திலும் பிரிட்னிக்கு  கிரிஃபின் உதவுவதை அனைத்து மாணவர்களும்  ஆசிரியர்களும் ஆச்சரியமாகப்   பார்ப்பார்கள்.   கிரிஃபின் திறமையை  கல்லூரி நிர்வாகமும் கவனித்து வந்தது. கிரிஃபின்  அநாயச திறமைகள் .. கடமையைச் செவ்வனே செய்வது,  பிரிட்னியை விட்டு அகலாமல் எப்போதும் உடன் இருப்பது, புத்திசாலித்தனம்  இவற்றை   கணக்கில் எடுத்து  பட்டமளிப்பு விழாவில் கிரிஃபின்னையும்  கெளரவிக்க வேண்டும் என்று முடிவு செய்தது.       பிரிட்னி பட்டம் பெற்ற போது, அதே பட்டமளிப்பு விழாவில் கிரிஃபினுக்கும் பட்டமளிப்பு விழாவில் அணியப்படும் தொப்பி,  கவுன் அணிவித்து கௌரவ டிப்ளமோ பட்டம் வழங்கியது. 

அடுத்த மாதம்  இன்னொரு பட்டமளிப்பு  விழாவில் பிரிட்னி கலந்து கொள்கிறார். அப்போதும், கிரிஃபின்னுக்கு  கெளரவப் பட்டம் காத்திருக்கிறது. 

""வேலைக்குப் போனாலும் கிரிஃபின்னை  உடன் அழைத்துச் செல்ல  அனுமதி  கேட்டு வாங்குவேன்'' என்கிறார் இருபத்தைந்து வயதாகும் பிரிட்னி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT