மகன் தந்தைக்கு ஆற்றிய நன்றி!
வடிவரசு- எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர். இவர் போல படித்தவர்கள் ஏதேனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து நிறையச் சம்பளம் வாங்கிக் கொண்டு,
வடிவரசு- எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர். இவர் போல படித்தவர்கள் ஏதேனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து நிறையச் சம்பளம் வாங்கிக் கொண்டு, அடுத்து எந்த வெளிநாட்டுக்குப் போய் இன்னும் அதிகம் சம்பாதிக்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும்நிலையில், வடிவரசுவின் கனவு வேறாக இருந்தது.
வடிவரசுவுக்கு எழுதுவதில் ஆர்வம் அதிகம். பிரபல இதழ் ஒன்றில் மூன்றரை ஆண்டு காலம் வேலை. இருந்தும் ஆர்வம் கரை கடந்ததால், அந்த வேலையையும் விட்டுவிட்டு திரைப்படப் பாடலாசிரியராக ஓயாத அலைச்சல். அந்த வாய்ப்புகளும் அவருடைய கதவைத் தட்டின. "கைலா' என்ற திரைப்படத்தில் எல்லாப் பாடல்களும் இவர் எழுதியவை. "உணர்வு' என்ற படத்திலும் பாடல் எழுதியிருக்கிறார். இதுவரை எட்டுப் படங்களுக்குப் பாடல்கள் எழுதும் வாய்ப்புகள்.
ஆனால் வடிவரசுவுக்கு இதைவிட மகிழ்ச்சி தரும் நிகழ்வு ஒன்று அவருடைய வாழ்க்கையில் நடந்திருக்கிறது. அது அவர் ஒரு புத்தகம் எழுதியிருப்பது. பரவலான பாராட்டுகளைப் புத்தகம் பெற்றிருக்கிறது. பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. என்ன புத்தகம் அது?
அவருடைய தந்தையைப் பற்றி அவர் எழுதிய "ஐயா (எ) 95 வயது குழந்தை' என்ற புத்தகம்தான் அது. கஷ்டப்பட்டு தன்னை வளர்த்த தந்தைக்கு தன்னால் முடிந்த காணிக்கை செலுத்தியிருப்பதாக அவர் நினைக்கிறார். அதைப் பற்றி வடிவரசுவிடம் கேட்டோம்....
"எனது சொந்த ஊர் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள திருவடத்தனூர் என்ற கிராமம். அண்ணன்கள் நால்வர். அக்கா ஒருவர். கடைசியாகப் பிறந்தேன். என் வாழ்க்கை என் கிராமத்து மண்ணோடு இணைந்தது. பஸ் வசதி இல்லை. இருந்தும் படித்தேன்.
சென்னை லயோலா கல்லூரியில் எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தேன். வீட்டில் எல்லாருக்கும் என்னிடம் பெரிய அளவுக்கு எதிர்பார்ப்பு. நல்ல வேலைக்குப் போய் கைநிறையச் சம்பாதிப்பேன் என்று நினைத்தார்கள். நானோ பத்திரிகை வேலைக்குப் போனேன். என் ஐயாவைத் (அப்பாவை) தவிர வீட்டில் வேறு யாருக்கும் நான் பத்திரிகை வேலைக்குப் போனது பிடிக்கவில்லை. ஏனென்றால் அவ்வளவு வறுமையை எல்லாரும் அனுபவித்து இருக்கிறார்கள். என் மூலமாவது விடிவு பிறக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவர்களின் எதிர்பார்ப்பை நான் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டேன். அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இப்போது பாடலாசிரியராக இருக்கிறேன்.
என் ஐயாவுடன் சிறுவயதில் இருந்தே நான் நெருக்கமாக இருப்பேன். எங்கே அவர் போனாலும் அவருடனேயே போவேன். அவர் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பேன். அவருடைய அனுபவங்கள் என்னை நெகிழ வைத்திருக்கின்றன. அவை எனக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டன.
ஐயாவுக்கு 94 வயதாகும்போது அவர் மகிழும்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அவரை சென்னைக்கு அழைத்து வந்தேன். விமானத்தில் அவரை ஏற்றி கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றேன். அங்குள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி, திரும்பினோம்.
இதை முகநூலில் நான் பதிவு செய்தேன். அந்தப் பதிவு பலரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. என்னைப் போல பலரும் அவர்கள் பெற்றோரை அதன்பின் விமானத்தில் அழைத்துச் சென்றிருக்கின்றனர். முன்பின் தெரியாத யார் யாரோ அதற்காக என்னைப் பாராட்டினார்கள். "நீங்கள் ஏன் உங்கள் அப்பாவைப் பற்றி புத்தகம் எழுதக் கூடாது?' என்று கேட்டார்கள். நம்மால் எழுத முடியுமா? என்றுதான் முதலில் நினைத்தேன். ஓர் அத்தியாயம் எழுதினேன். முடியும் என்ற நம்பிக்கை வந்தது. மீண்டும் எழுதினேன். நூலை கோயம்புத்தூரில் உள்ள விஜயா பதிப்பகம் வெளியிட்டது. முதலில் பதிப்பித்த 250 பிரதிகள் உடனே விற்றுவிட்டன. அடுத்தடுத்து நிறைய பதிப்புகள். எல்லாரும் நான்கைந்து பிரதிகள் வாங்கி நண்பர்களுக்குப் பரிசளித்தனர்.
எழுத்தாளர் நாஞ்சில்நாடன் என்னை மிகவும் பாராட்டினார். "இந்தப் புத்தகத்தின் மூலம் நான் பிறந்த திருவடத்தனூர் தமிழிலக்கிய வரைபடத்தில் குறிப்பிடத்தக்கதாகிவிட்டது' என்றார்.
ஐயாவின் 95 -ஆவது பிறந்தநாளின்போது புத்தகத்தை ஐயாவிடம் வாசித்துக் காட்டினேன். வாசிக்க வாசிக்க அவர் முகத்தில் தோன்றிய உணர்வுகள் என்னை மெய்மறக்கச் செய்தன. "எப்படி இவ்வளவு விஷயத்தை ஞாபகம் வைச்சு எழுதினாய்?' என்ற அவருடைய கேள்வியில் நான் திக்குமுக்காடிப் போனேன்'' என்கிறார் வடிவரசு.
- ந.ஜீவா