முகப்பு
தினமணி கதிர்

கட்டுப்படுத்தப்பட்ட கடற்கரை!

கரோனா தொற்று வந்தாலும் வந்தது, மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு மாறிப் போய்விட்டது.

Updated On : 14 ஆகஸ்ட், 2020 at 9:58 PM
பகிர்:

கரோனா தொற்று வந்தாலும் வந்தது, மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு மாறிப் போய்விட்டது.
கடைவீதிகள், கோயில், குளங்கள் என்று எங்கே போனாலும் கூட்டம் கூட்டமாகச் சென்று பழகிய மக்கள் தனித்திருக்க நேர்வதும், இடைவெளிவிட்டு விலகியிருக்க நேர்வதும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது.
தென்கொரியாவில் மக்கள் கூடும் கடற்கரைப் பகுதிகள் சிறிதும் பெரிதுமாக 270 உள்ளன. சற்று வெயில் அடித்தால் போதும்... மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரையில் குவியத் தொடங்கிவிடுவார்கள். கோடை விடுமுறைக் காலத்தில் கேட்கவே வேண்டாம்.
கரோனா தொற்றால் ஊரடங்கைச் சற்று தளர்த்தியுள்ள தென்கொரிய அரசாங்கம், கடற்கரைப் பகுதிகளைத்திறந்துவிட்டு இருக்கிறது.
கடற்கரைப் பகுதிகளுக்கு மக்கள் செல்லலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் பலத்த பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்துகிறது.
ஒருவர் கடற்கரைக்குச் செல்ல விரும்பினால், முதலில் தென்கொரியா அரசு உருவாக்கியுள்ள இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். "எந்த நேரத்தில் கடற்கரையின் எந்த இடத்தில்' அவர் இருக்க விரும்புகிறாரோ அதைக் குறிப்பிட்டு தனது வருகையைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த இணையதளத்தின் மூலம் கடற்கரையின் எந்தப் பகுதியில் எவ்வளவு கூட்டம் இருக்கும் என்பதையும் அவரால் தெரிந்து கொள்ள முடியும்.
அவ்வாறு பதிவு செய்து கொண்ட ஒருவர், அந்த குறிப்பிட்ட நேரத்தில் கடற்கரைப் பகுதிக்கு கையை வீசிக் கொண்டு நடந்து சென்று விட முடியாது.
மக்கள் அதிக அளவில் கூடும் கடற்கரைப் பகுதிகளின் எல்லைப் பகுதிகளில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட நுழைவு வாயில்களின் மூலம்தான் செல்ல முடியும்.
எனவே கடற்கரைப் பகுதிக்குள் நுழைவதற்கு முன்பு தன்னுடைய பெயர், செல்லிடப் பேசி எண், முகவரி உள்ளிட்ட தகவல்களைத் தந்து க்யூஆர் குறியீடைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த க்யூஆர் குறியீட்டின் மூலம் அவர் எங்கு செல்கிறார், எங்கு இருக்கிறார்
என்பன போன்ற தகவல்களை கடற்கரை நிர்வாகம் தெரிந்து கொள்ள முடியும்.
அதற்குப் பிறகு, நுழைவாயிலை நோக்கிச் சென்றால், முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே உள்ளே விடுவார்கள்.
"என்னிடம் முகக்கவசம் இல்லையே' என்று பரிதாபமாக விழித்தால், ஒரு முகக்கவசத்தை உடனே கொடுத்து அணியச் சொல்வார்கள். கடற்கரையில் முகக்கவசம் அணியாமல் எந்த உயிரினமும் திரியக் கூடாது.
அதுமட்டுமல்ல, கையில் ஒரு பேண்டை கட்டிவிடுவார்கள். அது ஒருவரின் உடல் வெப்பநிலையை அளந்து அவ்வப்போது தகவல் தெரிவிக்கும். அந்த கைப்பட்டையுடன்தான் கடற்கரைப் பகுதியில் இருக்க வேண்டும்.
உடல் வெப்பநிலை இயல்பை விட அதிகம் இருந்தால் கடற்கரைப் பகுதிக்குள் அனுமதிக்க மாட்டார்கள். கையில் சானிடைசரை எடுத்துச் செல்ல வேண்டும்.
கடற்கரைப் பகுதிக்குள் வந்துவிட்டோமோ நம்மை யார் பார்க்கப் போகிறார்கள் என்று முகக்கவசத்தையெல்லாம் கழற்றிவிட முடியாது.
கடற்கரைப் பகுதிக்குள் சென்றவர்களைக் கண்காணிக்க ட்ரோன்கள் உள்ளன. எந்த இடத்தில் அதிகக் கூட்டம் உள்ளது; எங்கே குறைவாக உள்ளது என்பதை அவ்வப்போது இந்த ட்ரோன்கள் சொல்லிக் கொண்டே இருக்கும். கூட்டம் அதிகம் உள்ள இடத்தை நோக்கி கடற்கரை நிர்வாகப் பணியாளர்கள் பறந்து வந்து, கூட்டத்தைக் கலைத்து சமூக இடைவெளியைக் காப்பார்கள்.
இந்த ட்ரோன்கள் அவ்வப்போது கரோனா தொற்று பற்றியும், முகக்கவசம் அணிய வேண்டிய தேவை பற்றியும், சமூக இடைவெளியின் முக்கியத்துவம் பற்றியும் சொல்லிக் கொண்டே இருக்கும்.
கடற்கரைப் பகுதியில் இரவு நேரங்களில் குடிப்பது, சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வளவு கட்டுப்பாடுகளுக்கு, விதிமுறைகளுக்கு உட்பட்டு கடற்கரையில் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? என்று நினைப்பவர்கள், கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லாமல் இருக்கிறார்கள்.
வழக்கமாக மக்கள் அதிகம் கூடும் கடற்கரைப் பகுதிகளில் 50 சதவீதம் பேர்தான் இப்போது வருகிறார்கள் என்றும் வழக்கமாகக் கூட்டம் குறைவாக இருக்கும் கடற்கரைப் பகுதிகளில் இப்போது 30 சதவீதம் பேர் அதிகமாக வருகிறார்கள் என்றும் தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.