தினமணி கதிர்

 மணிக்கொடி சீனிவாசன்

தினமணி

எனது முதல் சந்திப்பு - டி.எஸ்.சொக்கலிங்கம் 14

பத்திரிகையின் ஆசிரியரே சொந்தக்காரராய் இருந்த காலம் ஒன்று இருந்தது. அக்காலத்தில் ஆசிரியருக்கும் சொந்தக்காரருக்கும் கொள்கையில் முரண்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. இருவரும் ஒரே நபராய் இருந்ததுதான் அதற்குக் காரணம். காலம் மாறிவிட்டது. சொந்தக்காரர் வேறு, ஆசிரியர் வேறு என்ற காலம் வந்தது. அதன் கூடவே பத்திரிகையின் கொள்கை ஆசிரியருடையதா, சொந்தக்காரருடையதா என்ற கேள்வியும் தொடர்ந்தது. இவற்றிற்கான காரணகாரியங்களையோ, நியாய அநியாயங்களையோ பற்றி இங்கே விவாதிப்பது என்னுடைய நோக்கமல்ல. ஆசிரியரின் கொள்கையே பத்திரிகையின் கொள்கை என்ற காலம் அநேகமாய் மாறி மறைந்து போயிற்று என்பதை மட்டும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
 அந்த மறைந்த காலத்தில் நடந்த பத்திரிகைகள் பல மிகுந்த செல்வாக்கோடு விளங்கின; மிகச்சிறந்த தேச சேவை செய்தன. அக்காலத்தில் திகழ்ந்த ஆசிரியர்கள் பலர் சிங்கங்களாய் விளங்கினார்கள். அவர்களில் ஒருவர்தான் மணிக்கொடி சீனிவாசன். ஒரு காலத்தில் இந்தியாவில் ஆங்கிலப் பத்திரிகைத் தொழிலில் தலைசிறந்து விளங்கினார். இன்று பத்திரிகைத் தொழிலையே விட்டுவிட்டார். ஆசிரியர்களின் சுயேச்சை குறைந்து நிர்வாகிகளின் ஆதிக்கம் அதிகமாய் வளர்ந்து வருவது அவர் அந்தத் தொழிலை விட்டதற்கான காரணங்களில் ஒன்று.

இந்தியாவில் காந்தி சகாப்தத்தில் பத்திரிகைத் தொழிலில் சிங்கங்களாக மதிப்பிடக் கூடியவர்கள் இரண்டே பேர். ஒருவர், ஸ்ரீராமநாத் கோயங்கா, மற்றொருவர், காலம் சென்ற ஸ்ரீ சதானந்தம். கோயங்கா வடநாட்டிலிருந்து சென்னை வந்து பத்திரிகைக் கொடியை நாட்டினார். சதானந்தம் சென்னையிலிருந்து பம்பாய்க்குப் போய்ப் பத்திரிகைக் கொடியை ஊன்றினார்.
 அந்தச் சதானந்தத்தின் கலாசாலைத் தோழர்தான் "மணிக்கொடி' சீனிவாசன்.
 சீனிவாசனுக்கு இலக்கியத்தில் எவ்வளவு ஆர்வம் உண்டோ அவ்வளவு சங்கீதத்திலும் உண்டு. ஜோசியத்தில் அவருக்கு நம்பிக்கையே கிடையாது, என்றாலும் பழங்காலப் பழக்க வழக்கங்களில் அவருக்கு நம்பிக்கை உண்டு. அசல் புரட்சிக்காரர் என்பதிலும் சந்தேகமில்லை என்றாலும் அவர் ஒரு லட்சியவாதி. ஆங்கிலத்திலும் சரி, தமிழிலும் சரி, அவர் பேனாப் பிடித்து எழுதினால் அந்த எழுத்துகளை யாராலும் அசைக்க முடியாது.
 1930-ஆம் வருஷம் மகாத்மா ஆரம்பித்த உப்புச் சத்தியாக்கிரகத்தில் பம்பாய்தான் இந்தியாவில் தலைசிறந்து விளங்கியது. அச்சமயம் இவர் சதானந்தரின் "பிரீ பிரஸ் ஜர்னல்' பத்திரிகையின் ஆசிரியராய் இருந்து எழுதிய தலையங்கங்கள் அபாரமானவை. பம்பாயில் இருந்து உற்சாகத்தை அவருடைய தலையங்கங்கள் பன்மடங்காய்ப் பெருக்கி நாட்டிற்கே பெருமையளித்து வந்தன. அச்சமயம் ஆயிரக்கணக்காய் "பிரீ பிரஸ் ஜர்னலிடம் ஜாமீன் கேட்டு சர்க்கார் பறிமுதல் செய்து வந்தார்கள். எதற்கும் அஞ்சாமல் சதானந்த் பணத்திற்கு ஏற்பாடு செய்தார். சீனிவாசன் தமது வேகத்தைக் குறைக்காமல் எழுதி வந்தார்.

 முதலில் சதானந்தர் "பிரீ பிரஸ்' என்ற செய்தி ஸ்தாபனத்தை ஆரம்பித்தார். அச்சமயம் சீனிவாசன் அவருக்கு உதவியாய் இருந்தார். சென்னையில் "பிரீ பிரஸ்' காரியாலயத்தை வைப்பதற்கு, "தமிழ்நாடு' காரியாலயத்தில் 1925-இல் டாக்டர் நாயுடு இலவசமாக இடம் கொடுத்தார். அங்கேதான் முதலில் சீனிவாசனைச் சந்தித்தேன். அவர், நான், வ.ரா. ஆகிய மூவரும் அடிக்கடி சந்தித்துப் பேசுவது உண்டு. "தமிழ்நாடு' காரியாலயத்திற்குப் பக்கத்தில்தான் "சுயராஜ்யா' காரியாலயம் இருந்தது. அச்சமயம் "தமிழ் சுயராஜ்யா'வில் வ.ரா. வேலை பார்த்து வந்தார். ஆங்கில "சுயராஜ்யா'வில் சீனிவாசன் வேலை பார்த்த பின்புதான் அதைவிட்டு, பிரீ பிரஸில் சேர்ந்தார். பின்னால் சென்னையிலிருந்து பம்பாய்க்குப் போனார். அதன் பின்னால் "பிரீ பிரஸ்' நிருபராக லண்டனில் சில வருஷங்கள் இருந்தார்.
 சீனிவாசன் ஒரு லட்சியவாதி. சதானந்தர் காரியவாதி. அதனால் இருவருக்கும் அடிக்கடி அபிப்பிராய பேதங்கள் ஏற்படுவது உண்டு. எத்தனை தடவை அவர்கள் பிரிந்து மீண்டும் சேர்ந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அம்மாதிரி அவர் பிரிந்திருந்த ஒரு சமயத்தில் தான் 1927 -இல் " தமிழ்நாடு' தினசரி வெளிவந்தது. தினப் பத்திரிகையில் இருந்து அனுபவம் அடைந்த யாரும் அச்சமயம் "தமிழ்நாடு' காரியாலயத்தில் இல்லை. சீனிவாசன் உடனிருந்து உதவிசெய்து "தமிழ்நாடு' ஒழுங்காய் வெளிவர ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். அதேமாதிரி அவர் பிரிந்திருந்த ஒரு சமயத்தில்தான் "மணிக்கொடி'யை அவர் சென்னையில் ஆரம்பித்தார்.
 பத்திரிகைத் தொழிலில் மட்டுமல்ல, சட்ட சபை வேலைகளிலும் அவருக்கு நல்ல அனுபவம் உண்டு. 1937-இல் ஏற்பட்ட பம்பாய் சட்டசபை காங்கிரஸ் கட்சிக்கு அவர் காரியதரிசியாய்ப் பல வருஷங்கள் இருந்தார். பின்னால் அகில இந்திய பத்திரிகாசிரியர் மகாநாட்டுக்கு அவர் பல வருஷங்கள் காரியதரிசியாய் இருந்தார். அச்சமயம் அந்த மகாநாட்டில் பல சீனிவாசன்கள் இருந்தபடியால் இவரை அடையாளம் சொல்ல ஸ்டாலின் சீனிவாசன் என்று பெயர் வைத்தார்கள். அவர் மீசைதான் அந்தப் பெயருக்குக் காரணம். அதைத் தவிர கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அவருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சியைக் கிண்டலாகவும் பலமாகவும் தாக்கி எழுதியது அவரைப்போல வேறு யாரும் கிடையாது.
 பம்பாயில் "பிரீ பிரஸ் ஜர்னல்', "டெய்லி சன்', "நாஷனல் ஸ்டாண்டர்ட்', "பார்லிமென்ட்' ஆகிய பத்திரிகைகளுக்கும், டெல்லியில் "நாஷனல் கால்' என்ற பத்திரிகைக்கும் ஆசிரியராய் இருந்து திறம்பட நடத்திப் பெயரும் புகழும் பெற்றார். பின்னால் சென்னையில் சினிமாப் படத் தணிக்கையாளராக மூன்று வருஷம் வேலை பார்த்தார். அதன் பலனாக சினிமா உற்பத்தியாளர் சங்கத்தின் காரியதரிசியானார். சினிமாவுக்கும் சீனிவாசனுக்கும் சம்பந்தம் என்ன என்று கேட்கலாம். புத்திசாலிகள் எந்த வேலையையும் திறம்படச் செய்ய முடியும் என்பது உண்மையே.
 ஆனால், யாருக்கு எந்த வேலையில் ஆர்வமும் திறமையும் உண்டோ, அவர்களுக்கு அந்த வேலை கிடைப்பதில்லை. அதுதான் உலக வழக்கம். எழுதத் தெரியாதவர்களுக்குப் பத்திரிகாசிரியர் வேலை கிடைக்கும். எழுதத் தெரிந்தவர்களுக்கு அந்த வேலை கிடைக்காது. ஏனெனில் அவர்களை வைத்துச் சமாளிக்க முடியாது என்று பத்திரிகைத் தொழிலில் பணம் போடுகிறவர்கள் நினைக்கிறார்கள். இதனால்தான் எழுத்துத் திறமையுள்ள சீனிவாசன் பத்திரிகாசிரியராய் இல்லாமல், சினிமா சங்கக் காரியதரிசியானார். அவர் பத்திரிகாசிரியராய் இல்லாமல் இருப்பது தமிழ்நாட்டுக்கு நஷ்டம்.
 1934- ஆம் வருஷம் டெல்லி சட்டசபைத் தேர்தல் நடந்தது. வில்லிங்டனின் அடக்குமுறைக் கொடுமையைக் கண்டு நாடு கொதிப்புற்றிருந்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் போட்டி போடுவதாகத் தீர்மானித்தது. ஆனால், காங்கிரசுக்கு எதிராகப் பலர் வேலை செய்யத் தமிழ் நாட்டில் திட்டம் போட்டார்கள். நான் "காந்தி' பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன். காங்கிரசுக்கு ஆதரவாக ஒரு தினப் பத்திரிகையை எப்படியாவது ஆரம்பித்து எதிர்ப்பை அடக்கிவிட வேண்டும் என்று என் மனம் துடித்தது. அதற்காக அச்சடிப்பதற்கு ஒரு யந்திரம் பார்த்துக் கொடுக்கும்படி சீனிவாசனுக்குக் கடிதம் எழுதினேன். அதன் பலனாக சதானந்தே ஒரு தமிழ்ப் பத்திரிகை ஆரம்பிப்பது என்றும், அதற்கு நான் ஆசிரியராய் வருவது என்றும் சீனிவாசன் ஏற்பாடு செய்தார். அந்த ஏற்பாட்டின்படி, "தினமணி' உதயமாயிற்று. அச்சமயம் "தினமணி'யின் பிரசாரம் காங்கிரசின் வெற்றிக்கு எவ்வளவு தூரம் உதவியாய் இருந்தது என்பது தமிழ்நாடு அறிந்த விஷயம்.
 (தொடரும்)
 வெளியீடு: ஜெனரல் பப்ளிஷர்ஸ்,
 244/64, ராமகிருஷ்ணா மடம் சாலை,
 மயிலாப்பூர், சென்னை-600 004.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை பயங்கரவாதியை போல் நடத்துகிறார்கள்: பகவந்த் மான்

'ஜிஎஸ்டி' வரி அல்ல… வழிப்பறி! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

கள்ளழகர் திருவிழா: ஏப் 23-ல் மதுரைக்கு உள்ளூர் விடுமுறை

மக்களவைத் தேர்தல்: வரலாறு காணாத அளவில் பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT