முகப்பு
தினமணி கதிர்

கவிஞர் விவேக்!

திரைத்துறையில் கோலோச்சுவதற்கு முன்பாக, தலைமைச் செயலக ஊழியராக இருந்த காலத்தில் கவிஞராகவும் அறியப்பட்டிருக்கிறார் நடிகர்விவேக்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:


திரைத்துறையில் கோலோச்சுவதற்கு முன்பாக, தலைமைச் செயலக ஊழியராக இருந்த காலத்தில் கவிஞராகவும் அறியப்பட்டிருக்கிறார் நடிகர் விவேக். தலைமைச் செயலகத்தில் நடந்த கலை-இலக்கியப் போட்டிகளில் இரண்டு முறை கவிதைகளை எழுதி பரிசுகளையும் அவர் பெற்றுள்ளார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக அரசுப் பணிக்காக விவேக் சென்னைக்கு வந்தார். கடந்த 1985-ஆம் ஆண்டில் தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலராகச் சேர்ந்து, நிதித் துறையில் பட்டியல் பிரிவில் உதவிப் பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்தார்.

நிதித்துறையில் பணியாற்றுவோர், அரசின் 34 துறைகளுக்கும் சென்று பணியைத் தொடரலாம். அந்த வகையில், முதலில் வேளாண்மைத் துறையிலும் பிறகு கல்வித்துறையிலும் நிதித்துறை தொடர்பான பட்டியல் தயாரிக்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

அரசுப் பணி மட்டுமல்லாது, கலை-இலக்கியத்தில் அவர் பங்கேற்று சிறந்து விளங்கினார். நகைச்சுவை கவிஞராக உலகுக்கு தெரிவதற்கு முன்பாக, அவர் தலைமைச் செயலகத்தில் கவிஞராகவே வலம் வந்திருக்கிறார்.

அவரது கவித்துவம் தொடர்பாக, தலைமைச் செயலக சங்கத்தின் முன்னாள் தலைவர் மு.சுந்தரராஜன் கூறியது:-

""தலைமைச் செயலகத்தில் தமிழ்ப் பண்பாட்டு மன்றம் என்ற பாரம்பரியமிக்க மன்றம் இருந்தது. இப்போது அதன் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அந்த மன்றத்தின் சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படும். இந்த விழாவில் கவிதைப் போட்டியில் பங்கெடுத்து முதல் பரிசு பெற்றார் விவேக். ஈழத் தமிழர் பிரச்னை தொடர்பான கவிதை அது. இதற்கடுத்த ஆண்டுகளில் அவர் திரைத்துறையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார். 1987-ஆம் ஆண்டு "மனதில் உறுதி வேண்டும்' படப்பிடிப்பில் பங்கேற்றார். திரைத்துறையின் ஆர்வம் அவரது கவிதையிலும் எதிரொலித்தது.

தமிழ்ப் பண்பாட்டு மன்றத்தின் மற்றொரு முப்பெரும் விழாவில், திரையரங்குகளில் விற்கப்படும் கள்ள டிக்கெட் தொடர்பாக கவிதை எழுதினார். அதற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.

தலைமைச் செயலக பணியில் இருக்கும் போது, திரைப்படப் படப்பிடிப்பு காரணமாக, ஆறு மாதங்கள் வரை விடுப்பில் செல்வார் விவேக். ஒரு கட்டத்தில் அவருக்கான விடுப்புகள் அனைத்தும் தீர்ந்து போனதால் வேறு வழியின்றி பணியில் இருந்தே விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போது மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். அரசுப்பணிக்கு வருவதையே பெரும்பாலோர் விரும்புவார்கள். அவரது பெற்றோரும் அப்படியே விரும்பினர். அரசுப்பணியா? திரைத்துறையா? என்ற கேள்விக்கு திரைத்துறையைப் பதிலாகப் பெற்றதால், அரசு அதிகாரி விவேகாநந்தன் என்ற நிலையில் இருந்து விலகினார். உலகம் போற்றும் மாபெரும் நகைச்சுவை கலைஞராக விவேக் திகழ்ந்தார். ஆனாலும், தலைமைச் செயலகத்தில் உடன் பழகியவர்களுடன் நட்பும் பாசமும் கொண்டிருந்தார்'' என்கிறார் மு.சுந்தரராஜன்.

முதல் பரிசு பெற்ற கவிஞர் விவேக்கின், "ஆயிரம் பூக்கள் மலரட்டுமே' என்ற கவிதையில் இருந்து சில வரிகள்:

ஆயிரம் பூக்கள் மலரட்டுமே
இது மாசேதுங் சொன்னது
அரசு ஊழியரைக் கேட்டால்

மாலை 5.45 மணிக்குள் மலரட்டுமே என்பார்கள் என்று தொடங்குகிறது அந்தக் கவிதை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.