எலியோடு குடித்தனம் செய்யும் நிலைக்கு கரோனா தள்ளிவிட்டது. என்னையும் என் மனைவியையும் எலியும் பூனையுமாய் ஓரியாடச் செய்துவிட்டன எங்கள் வீட்டுஎலிகள். அரசு ஊழியர்கள் ஊரோடிகள்;
மகனுக்கும், மருமகளுக்கும் புது ஊருக்கு இடப்பெயர்வு. நாங்கள் இருவரும் ஒய்வு பெற்றிந்தாலும் மகன் குடும்பம் எங்கோ அங்கே எம்மிருப்பும். இன்னும் ஒரு வருசத்துக்குள் மகனுக்கு பதவி உயர்வில் தலைநகருக்கு மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் இந்த புதுக்குடியிருப்பில் எனது புத்தக சாம்ராஜ்யத்தை விரிக்கவில்லை. மூட்டைக்குள்ளே அறிஞர்பெருமக்கள் மூச்சு முட்டி புழுங்கிக் கொண்டிருந்தனர்.
புத்தகப் புழுக்கம் எலிக்கு கொண்டாட்டமாகிவிட்டது. அறிவுப் பசியைத் தீர்க்கவேண்டிய அறிஞர் பெருமக்கள் எலிகளின் பசிக்கு விருந்து தந்தனர். எலிகளின் கொண்டாட்டமும், ஊடாட்டாமும் குதூகலக்குரல்களும் மனைவிக்கும் எனக்கும் இடையே கலகத்தைப் பற்ற வைத்தது. மனைவி அடைமழையாய் சிணுசிணுத்து சொல்லால் நனைத்தாள். எங்களுக்கு கல்யாணமான புதிதில் , "எனக்கு முதல் காதல் புத்தகமும், வாசிப்பும் தான்' என்று உண்மையை உளறிவிட்டேன். அது மனைவி மனத்துள் புகைந்து கொண்டே இருந்து, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வெடிக்கும். "புத்தகங்களை அடைச்சு வச்சிருப்பது தேசத்துரோகம்' என்ற தளத்துக்கு கூண்டிலேற்றிவிட்டாள். வாசிப்பினால் வந்த மகிமைகளை நான் சொன்னது மனைவி காதில் விழவேயில்லை. மகன் வந்து புத்தகத்தால் அவனடைந்த பலனையும் சொல்லி என்னையும் காப்பாற்றி, "" படித்து முடித்தவற்றை யாருக்காவது குடுக்கலாமில்லப்பா'' என்று அம்மாவுக்கும் ஓர் ஆறுதலைச் சொல்லி அவன் தன் பாசத்தை சமப்படுத்திக் கொண்டான்.
இந்தத் தருணத்தில் சமையல்காரர் மூலம் கரோனா என் மனைவிக்கும், மருமகளுக்கும், மனைவி மூச்சு வழி என்னையும் தொற்றியது தெரிய வந்தது. இரண்டுமுறை தடுப்பூசிகள் போட்ட பின் மூன்றாவது பூஸ்டர் ஊசி போடும் தறுவாயில் மூன்றாவது அலை வலையில் வீழ்த்திவிட்டது. இத்தனைக்கும் வீட்டுக்குள் முகக்கவசங்களோடுதான் உலவுகிறோம். தாக்கியது கரோனாவின் திரிபா, ஒமிக்ரானான்னு அறிந்துகொள்ள அனைத்துவகை சோதனைகளும் செய்தாகிவிட்டது. சோதனை ஊசிகளால் இரு கைகளிலும் ரணம்; நோயின் வலியினும் சிகிச்சை வலி தாள முடியவில்லை. வயதான பெற்றோரின் உயிர்காக்க மகனின் அன்பின் வலியை பெருமையோடு ஏற்கத்தானே வேண்டும் !
மகனுக்கோ, பேரன்களுக்கோ, தொற்று பரவுவதைத் தடுக்க எங்களது அறையில் மருமகளையும், முக்கிய சாமான்கள் வைக்கும் அறையை ஒதுக்கி அதில் நாங்களிருவரும் என வீட்டுச் சிறையில் புகுந்தோம். அறைக்குள் இருந்த அடைசல்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி கிருமிநாசினி தெளித்துதான் தனிமைச் சிறை புகுந்தோம். ஆள் நடமாட்டமில்லாது எலிகள் திரிந்த அறையில் நாங்கள் இருந்ததால் என்னவோ, எலிகள் ஏதும் தென்படவில்லை. கிருமிநாசினி வாசத்துக்கும் எலி வாசத்துக்கும் இடையே வித்தியாசமும் புலப்படவில்லை.
மருத்துவர் கொடுத்த மருந்தின் வேகத்தில் மனைவி உறங்கிவிட்டாள். நானும் அதே மருந்துகள் உட்கொண்டாலும் எனக்கு பத்துஇருபது பக்கங்கள் வாசித்து அசைபோட்டால்தான் உறக்கம் வரும். எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு படுக்கை தலைமாட்டிலுள்ள விளக்கு வெளிச்சத்தில் புத்தகத்தை விரித்து, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன்.
புத்தகத்தில் கண்கள் நகர்கிறது. ஆனால் கருத்தை மனதில் நுழையவிடாமல் மனைவியின் குறட்டை ஒலி, சுவர் எழும்பி தடுத்துக் கொண்டே இருந்தது. விளக்கை அணைத்து புத்தகத்தை மூடினேன். முகத்தில் அமைதியைத் தேக்கி மனைவி உறங்கும் அழகைப் பார்த்தேன்.
அலை ஏறி இறங்குவதுபோல் உடலில் சீரான ஏற்ற இறக்கங்கள். இயற்கையை நாம் விலக்கினாலும் அது இன்னும் நம்மிலிருந்து விலகவில்லை. நீலவானத்தில் வண்ணமேகங்களின் நகர்வுகள் போல, மனதின் எண்ணங்களும் முகத்தில் உலவுகின்றன போலும். உற்று நோக்கினேன்.
நித்திரையில் கனவு விரிகின்றன; உள்மூச்சும் வெளிமூச்சும் ஜோடிப்பாடலை குறட்டையில் பாடி ஆரோகண அவரோகண வெளியில் சஞ்சரிகின்றனவோ !
மின்காந்த மோட்டாருள் இந்த குறட்டை ஒலியைச் செலுத்தி இயக்கினால் மின்னாற்றல் கிடைக்கக் கூடும். இந்த மின்சாரம் கொண்டு ஒரு மின்விசிறி ஓடினால் கூட நமக்கு நல்லதுதானே?
எலிகளின் கீச்சொலிகளும் திடு திடுன்னு ஓடும் ஒலிகளும் என் சிந்தனையைக் கலைத்தன. எரிச்சல் வந்தது. விளக்கை ஒளிரவிட்டேன். எலிகள் பதுங்கிக் கொண்டன.
விளக்கின் வெம்மை தாங்காமல் துள்ளிய இருமலிடையே கண் திறக்காமலே, ""இன்னும் தூங்கலையா, விளக்கை அணைச்சுட்டுப் படுங்க , எப்ப பார்த்தாலும் புத்தகமும் கண்ணுமா'' என்று சிறு இருமலிடையே குறட்டை சங்கீதத்தைத் தொடர்ந்தாள்.
எலிக்கு அஞ்சி விளக்கை ஒளிரவிட்டு படுக்கையில் புரண்டேன். எலிகள் உலாவிய இடத்தில் மனுஷன் திரியிறானு அது நினைக்குதோ என்னமோ... யாருடைய இடம் யாருக்கு... நினைப்பிலே தூங்கி விட்டேன்.
மறுநாள் பகலில் எலிகள் நடமாட்டம் தெரியவில்லை. ஆனாலும் எலிக்கவிச்சி மூக்கை அறுவியது. மனைவியிடம் எலி குறித்து நான் மூச்சு விடவில்லை. அப்புறம் அவள் பூனையாகி என்னைக் குதறிவிடுவாள். கரோனாவை விட பெருந்துன்பம் வந்து சேரும். என்றாலும் எலி வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை என்று எலிப்பொறி கூண்டில் வடையை செருகி வைத்தேன்.
""நீங்கதான் எலியை வளர்க்கிறீங்க; நீங்களே படுங்க. எங்கிட்ட அதைப் பேசாதீங்க'' சமர்த்தாக தன்னை விலக்கிக் கொண்டாள். கரோனா மூக்கடைப்பைத் தாண்டி வடை மணத்துக் கொண்டிருந்தது. எலிகளைக் காணவில்லை. குடை கொண்டுவரும் நாளில் மழை வருவதில்லை; எலிக்கூண்டு வைத்த நாளில் எலி வருவதில்லை போலும்!
பகலில் இருமுறை மருத்துவ சோதனைகள் இரண்டுமணிக்கொருதரம் ஆக்சிஜன் நிலவரம்னு சோதித்து மனக் கலவரமும், நம்பிக்கையுமாய் பகல் கடந்தது. செய்தி பார்க்கலாமென்று தொலைக்காட்சியை இயக்கினால் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பென்று இன்றே காய்,கனிகடைகளிலும் , கறி ,
கோழி, மீன்கடைகளில் மக்கள் தேனீக்கள் போல் அப்பிக் கிடக்கின்றனர். நோய்த் தடுப்புணர்வோ, உயிர்பயமோ இல்லாமல் இப்படித் திரிகிறார்களே? இன்று புதிதாக சாப்பிடப் போகிறார்களா? இல்லை... இன்றைக்கு கடைசியாக சாப்பிடப் போகிறார்களா? என்னவென்று புரியவில்லை. ஒருபக்கம் மனுஷன் உயிருக்காகப் போராடுகிறான். மறுபக்கம் உயிர்ப்பயமின்றி சாப்பிடுவதற்காக அலைகிறான். மனித இயல்புகளையே இந்தக் கரோனா புரட்டிப்போட்டு விட்டதே. தொலைக்காட்சியை நிறுத்தினேன்.
அவரவர் உயிரைப் பாதுகாத்துகொண்டால்தான் குடும்பத்தினருக்கும், சகமனிதருக்கும் உதவியாக இருக்கும்.
இரவு உணவு உண்டு அவரவர் மருந்துகளை விழுங்கினோம். அறைக்குள் கொஞ்சநேர நடைக்குப் பின்ஆக்சிஜன் சோதனைகள் செய்து கொண்டோம். தொண்ணுற்று ஐந்துக்கும் தொண்ணூற்று ஏழுக்கும் இடையே ஏற்ற இறக்கமாக இருந்தது. கீழிறங்கவில்லை என்ற நிம்மதியோடு படுக்கப் போனோம். மனைவி என்ன பிறவியோ தெரியவில்லை. படுத்தவுடன் குறட்டைக் கச்சேரி தான்.
நான் வழக்கம்போல கண் சோரும் வரை புத்தகத்தில் மூழ்கி எழுந்து விளக்கை அணைத்தேன். அடுத்த ஐந்தாவது நொடியில் எலிகளின்கார்வார் தொடங்கிவிட்டது. கீச்சொலிகளில் குலாவி குதூகலித்து ஓடின. கண்ணருகே வந்த தூக்கம் கலைந்து போனது. கருகருத்து திரண்டு இறங்கிய மழைமேகத்தை காற்று கடத்திப் போன பின் வறண்ட மேல்காற்று வீசுவதுபோல் வெற்றுக் கொட்டாவிகள் பிரிந்தன. கண்களை மூடினேன். மனதோடு காதுகளும் திறந்துகொண்டு எலிகளைக் கவனித்தன.
பரபரவென்று ஓடிய எலி ஒன்று பொறிக்குள் வைத்திருந்த வடையை இழுக்க முயற்சித்து கூண்டுக்குள் சிக்கவும் பட்டென்ற சத்தத்துடன் கூண்டு மூடிக்கொண்டது. கூண்டுப்பொறியின் கம்பிகளைக் கடித்துக் கடித்து பயனில்லாமல் கீச்சிட்டது. இன்னும் சில எலிகள் ஓடிவந்து கூண்டை நகர்த்தின; கூண்டைத் திறக்க முடியவில்லை ஏதோ விநோத ஒலியில் பகிர்ந்தன. அப்புறம் போய்விட்டன. சிக்கிய எலி கூண்டுக் கம்பியைக் கடிப்பதும், கூண்டை நகர்த்துவதுமாகத் துடித்தது.
நான் விழுங்கிய மருந்தின் வேகமும், எலிக்கவிச்சியும் சேர்த்து தொண்டை அறுவி இருமல்களாக வதைத்தது. உயிர்ச்சரட்டை உலுக்கியது. கரோனா எனும் கொடுங்கூண்டு சிறையிலிருந்து மீள நான் போராடுகிறேன். அங்கே எலி மரணக்கூண்டில் சிக்கிப் போராடுகின்றது. பாவம், அந்த எலி, தன் உணவுக்காகத்தானே புத்தகத்தையோ, வடையையோ தேடி வந்து தின்று ஜீவிக்கிறது. அதற்கு எட்டாத பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தால் எலி புத்தகத்தை தின்னப் போயிருக்காதில்லை. நாம் கவனமின்றி இருந்துவிட்டு எலிகள்மீது பழி போட்டு அதனைக் கொல்லவும் முயற்சிக்கிறோம்.
கவனப் பிசகால் தொற்றிய இந்த உயிர்கொல்லி நோயிலிருந்து தப்ப நமக்கு எவ்வளவு நியாயம் இருக்கோ... அந்த அளவு இந்த எலி, கூண்டிலிருந்து தப்பவும் நியாயம் உண்டல்லவா?... வருத்தும் இருமல்களுக் கிடையே மனசு உறுத்தியது.
மெல்ல எழுந்தேன். கூண்டுக்குள் சிக்கிய எலி சோர்ந்து கிடந்தது. பூனை நடையில் கதவைத் திறந்து பார்த்தேன். கூடத்தில் யாருமில்லை; என் இதயத்தை எதிரொலித்த சுவர்க்கடிகாரம் ஒரு மணியைச் சுட்டியது. கண்களைத் தவிர்த்து காது, மூக்கில், குளிர்காற்று புகாமல் துண்டால் இறுக்கி கட்டிக் கொண்டேன். அரவமில்லாமல் வெளிகதவைத் திறந்து எலிக்கூண்டை இடக்கையில் பற்றி தோட்டத்துப் பக்கம் சென்று திறந்து விட்டேன். எலி துள்ளிக் குதித்து ஓடியது. பார்த்ததும் எனக்குள் உயிரோட்டம் கூடியது.
திருநெல்வேலி என்றால் நமக்கு நினைவுக்கு வருவது அவ்வூர் அல்வாதான்.
இது வேறு.
திருநெல்வேலி செல்வந்தர்களிடம் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதாவது, எதிலும் தாங்களாகவே முந்திக் கொண்டு இறங்கி ஒரு காரியத்தை செய்து முடித்து பெருமை அடைய வேண்டும் என்ற அவசரம் அவர்களுக்குக் கிடையாது.
அபரிமிதமான பொறுமையும், எதிலும் விறுவிறுப்பு காட்டாத நிதானத் தன்மையும், கடந்த காலத்தை எண்ணத்தில் அசைபோட்டுக் கொண்டு, வரும் காலத்துக் கற்பனையில் அமைதியாகக் கழித்து விடும் திறனும் நெல்லை மாவட்டத்துக்கே உரித்தான பாணியாகும்.
இவ்வளவு அமைதியான சூழ்நிலையில், வீறு கொண்டு எழுந்த சுப்பிரமணிய பாரதியாரும், சுதந்திர தாகம் கொண்ட சிதம்பரம் பிள்ளையும் எப்படி உருவானார்கள் என்று நினைக்கிறீர்களா? திகைக்காதீர்கள்.
சாம்பலுக்குள் நெருப்பு கனிவது தெரியவா செய்கிறது?
அதுபோலத்தான். இவர்களும்!
நாவலாசிரியர் ரா.சு.நல்ல பெருமாளின் "கல்லுக்குள் ஈரத்திலிருந்து'.
ஜனநேசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.