'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 79
வரதராஜ பெருமாளை சந்திப்பது என்பது எளிதாக இருக்கவில்லை.
வரதராஜ பெருமாளை சந்திப்பது என்பது எளிதாக இருக்கவில்லை. தில்லிக்கு வந்து, அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, அமைச்சர் வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியும் பெற வேண்டும் என்று கூறப்பட்டது. அமைச்சர் தினேஷ் சிங்கைத் தொடர்பு கொண்டேன். நேரில் வரச் சொன்னார்.
""எதற்காக நீ இப்போது வரதராஜ பெருமாளைப் பார்க்க விரும்புகிறாய்? உனக்கெதற்கு அந்த வேண்டாத வேலை?''
""வரதராஜ பெருமாளின் பேட்டி கிடைத்தால் எனது செய்தி நிறுவனத்துக்கு அது மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்தும். மேலும், தமிழகத்தில் அவரது தரப்பு நியாயத்தைக் கேட்க மக்கள் விரும்புவார்கள்...''
""தேவையில்லாமல் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்று நான் பயப்படுகிறேன். அவருக்கு ஆட்சேபணை இல்லை என்றால் மட்டும்தான், அவரை சந்திப்பதற்கு நான் அனுமதிக்க முடியும். உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் நான் இதுபற்றி யோசித்து முடிவுக்கு வருவேன்.''
எனக்கு நன்றாகத் தெரிந்தவராயிற்றே என்பதால்தான் அவரைத் தொடர்பு கொண்டேன். ஆனால், அமைச்சர் தினேஷ் சிங் மிகவும் கண்டிப்பாகவும், திட்டவட்டமாகவும் தெரிவித்தார்.
இரண்டு நாள்கள் கழித்துதான் அமைச்சர் ராஜேஷ் பைலட் தில்லி திரும்பினார். ஆனால், அந்த இரண்டு நாள்களும் நான் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.
கன்னாட் பிளேசிலுள்ள எனது அலுவலகத்தில் அமர்ந்தபடி நான் தட்டச்சு செய்துகொண்டிருந்தேன். அலுவலக உதவியாளர் ராதாகிருஷ்ணன், என்னைத் தேடி நான்கு பேர் வந்திருப்பதாகச் சொன்னதும், வரச் சொன்னேன்.
எனது அறையில் வந்து அமர்ந்தவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது. சற்று முரட்டுத்தனமாக இருந்தனர். நான்கு பேரில் ஒருவர் மலையாளி. ஏனைய மூவரும் வடநாட்டவர்கள். அவர்களது ஆங்கிலத்தில் ஹிந்திதான் அதிகமாக இருந்தது.
""நீங்கள் வரதராஜ பெருமாளை சந்திக்க வேண்டும் என்று கேட்டிருந்தீர்களா?''
""ஆமாம், அதற்கென்ன? நீங்கள் யார்?''
""எதற்காக நீங்கள் அவரை சந்திக்க விரும்புகிறீர்கள்?''
""நான் செய்தி நிறுவனம் நடத்தும் பத்திரிகையாளர். அவரைப் பேட்டி காண நினைக்கிறேன், அவ்வளவுதான்.''
""உங்கள் அடையாள அட்டையைக் காட்ட முடியுமா?''
எடுத்துக் கொடுத்தேன். உரிமையுடன் சாவகாசமாக அதைத் தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டுவிட்டார். நான் சற்று ஆத்திரத்துடன் அதைத் தரும்படி கேட்டபோது, என்னை அமரச்சொல்லி சைகை செய்தபடி, தனது அடையாள அட்டையை எனக்குக் காட்டினார். அவர்கள் "ரா' புலனாய்வுப் பிரிவிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று அதிலிருந்து தெரிந்து கொண்டேன்.
""நாங்கள் உங்களை அழைத்துச் செல்வது இங்கே அலுவலகத்தில் இருக்கும் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று நினைக்கிறேன். அது உங்களுக்கு சங்கடத்தைக் கொடுக்கலாம். அதனால், நட்பு ரீதியாக வருவதுபோல எங்களுடன் வந்து விடுங்கள். நாங்கள் உங்களை விசாரணை செய்ய வேண்டும்.''
""எதற்காக என்னை விசாரணை செய்யப் போகிறீர்கள்? பேட்டி எடுக்க நினைத்தது ஒரு தவறா? நான் உள்துறை அமைச்சர் ராஜேஷ் பைலட், வர்த்தகத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்தவன். என்னைப் பற்றி நீங்கள் அவர்களிடம் விசாரித்துப் பாருங்கள்.''
""அவர்களிடம் உங்களைப் பற்றி நாங்கள் விசாரிக்கத் தேவையில்லை. நாங்களே விசாரித்துத் தெரிந்து கொள்கிறோம். பிரச்னை செய்யாமல் எங்களுடன் வந்து விடுங்கள்.''
""நான் எனது வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் தொலைபேசியில் தெரியப்படுத்திவிட்டு வருகிறேன்.''
""அதற்கெல்லாம் தேவையில்லை. நாங்கள் உங்களை விசாரணைக்குத்தான் அழைத்துப் போகிறோம். கிளம்புங்கள்.''
""நான் இன்னும் மதிய உணவுகூட சாப்பிடவில்லை.''
""நாங்கள் வாங்கித் தருகிறோம். கிளம்புங்கள்.''
சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது என்பார்கள். எனக்கு அப்போது அப்படித்தான் இருந்தது. வேறு வழி தெரியவில்லை. முகத்தில் படர்ந்திருந்த அச்சத்தையும், படபடப்பையும் அடக்கிக் கொண்டு நான் முன்னால் நடக்க அவர்கள் என்னைப் பின் தொடர்ந்தனர். அலுவலகத்துக்கு வெளியே நின்றிருந்த அம்பாசிடர் காரின் பின் சீட்டில் அவர்களுக்கு நடுவில் என்னை அமரச் சொன்னார்கள். கார் கிளம்பியது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சிஜிஓ காம்ப்ளெக்சில் இருந்த "ரா' புலனாய்வு அமைப்பின் அலுவலகத்துக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். ஓர் அறையில் இருந்த பெஞ்சில் அமரச் சொல்லிவிட்டு அந்த நான்கு பேரும் போய்விட்டார்கள். அரைமணி நேரமாயிற்று, ஒரு மணி நேரமாயிற்று, யாரும் வரவில்லை. நான் அந்த பெஞ்சில் தனிமையாக.
அந்த அறையில் ஒரு மேஜையும் நாற்காலியும் இருந்தன. எதிரில் அமர்வதற்கு நாற்காலி கிடையாது. தண்ணீர் குடிக்க வசதியாக வாட்டர் கூலர் இருந்தது. நல்ல பசி. எழுந்து சென்று இரண்டு முறை தண்ணீர் குடித்தேன். அதுவும் குளிர்ந்த தண்ணீர். சிறுநீர் முட்டிக் கொண்டு வந்தது.
மெதுவாகக் கதவுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். எதிரிலும் அறைகள். "காரிடர்' என்பார்களே, அந்த ஐந்தடி நடைபாதைதான் இருந்தது. அறையிலிருந்து வெளியேறவும் பயமாக இருந்தது.
நான் சிறுநீர் கழிப்பதற்காக வெளியேறினால், அதை தப்பியோட எத்தனிப்பதாக அவர்கள் கருதிவிட்டால் என்ன செய்வது என்கிற பயம். எவ்வளவுதான் அடக்கிக் கொள்வது? ஒரு பாவமும் அறியாத நான், ஆர்வக் கோளாறு காரணமாக இப்படி மாட்டிக் கொண்டு விட்டதை நினைத்தபோது அழுகை அழுகையாக வந்தது.
அழுகையை அடக்கிக் கொள்ளலாம். சிறுநீர் கழிக்காமல் எவ்வளவு நேரம்தான் அடக்கிக் கொள்வது? ஏறத்தாழ இரண்டு மணி நேரத்துக்கு மேல் தனிமையில் விடப்பட்டிருந்தேன். நான் பட்ட அந்த அவஸ்தையை வார்த்தையில் விளக்க முடியாது.
அந்த அறையிலேயே ஏதாவது ஒரு மூலையில் சிறுநீர் கழித்துவிடாலம் என்று நான் முடிவெடுத்து இருந்தேன். வெளியே ஆள் அரவம் கேட்டது. என்னை அங்கே அழைத்துச் சென்றவர்களில் இருவர் வந்தனர். கூடவே முறுக்கிவிட்ட மீசையுடன் முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரி தோற்றத்தில் ஒருவரும். அவர்களைப் பார்த்ததும் நான் அலறிவிட்டேன்.
""எனக்கு உடனடியாக சிறுநீர் கழித்தாக வேண்டும். இங்கேயே போய்விடுவேன் போலிருக்கிறது...''
ஒருவர் எதுவுமே நடக்காததுபோல என்னைப் பின்தொடர்ந்து வரும்படி சைகை செய்தார். அறைக்கு வெளியே வந்தோம். பக்கத்து அறையை நோக்கிக் கையைக் காட்டினார். பார்த்தால் வெளியே "டாய்லெட்' என்று ஆங்கிலத்திலும் "செளச்சாலய்' என்று ஹிந்தியிலும் கொட்டை எழுத்தில் எழுதி இருந்தது. உள்ளே விரைந்தேன்.
அடக்கி வைத்திருந்த சிறுநீர் வெளியேறும்போது எனக்கு ஓர் உண்மை விளங்கியது. எல்லாம் தெரிந்து, வேண்டுமென்றேதான் அவர்கள் என்னை கழிப்பறைக்கு அருகே, குளிர்ந்த நீர் இருக்கும் அறையில் உட்கார வைத்திருந்தார்கள். பயம், பசி, தனிமை, சிறுநீர் கழிக்க முடியாத அவஸ்தை இவற்றின் மூலம் என்னை உளவியல் ரீதியாகத் தளர்வடையச் செய்வதுதான் அவர்கள் நோக்கம் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
மீண்டும் நான் பக்கத்து அறைக்கு வந்தபோது, ஒருவித ஆசுவாசம் எனக்கு ஏற்பட்டிருந்தது. அறையில் இருந்த மின்விசிறிக்குக் கீழே நான்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மேசை மீது "வெஜிடபிள் பர்கர்' இருந்தது. ஃபிளாஸ்கில் மசாலா சாயாவும். என்னைச் சாப்பிட்டு, பசியாறச் சொன்னார்கள்.
அதற்குப் பிறகு நாற்காலியில் அமர்ந்தேன். முறுக்கு மீசையுடன் இருந்தவர்தான் என்னைக் கேள்வி கேட்க (விசாரணை செய்ய) தொடங்கினார்.
""உங்களுக்கும் இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும் எவ்வளவு காலமாக நெருக்கம்?''
""பத்திரிகையாளர் என்கிற முறையில் அவர்களில் சிலரைத் தெரியுமே தவிர, யாரிடமும் நெருக்கம் என்று சொல்ல முடியாது.''
""நீங்கள் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைப் பார்த்திருக்கிறீர்களா? அவரிடம் பழகி இருக்கிறீர்களா?''
""பழகியதில்லை, பார்த்திருக்கிறேன்.''
""எங்கே பார்த்திருக்கிறீர்கள்?''
""டி.யூ.எல்.எஃப். தலைவர் அமிர்தலிங்கத்தின் அறையில் சென்னையில் பார்த்திருக்கிறேன்.''
""நீங்கள் எதற்கு அங்கே போனீர்கள்?''
""இதென்ன கேள்வி? நான் பத்திரிகையாளன். எண்பதுகளின் ஆரம்பத்தில் இலங்கையில் இனக்கலவரம் வெடித்தபோது, அமிர்தலிங்கமும் அவரது மனைவியாரும் இந்திய அரசின் விருந்தினர்களாக சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் தங்கி இருந்தனர். அவரைப் பேட்டியெடுக்க நான் போனதுண்டு.''
""அமிர்தலிங்கத்துடன் நீங்கள் நெருக்கமாக இருந்தீர்களா? அவருடன் தில்லிக்கெல்லாம் வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது...''
""அவருடன் நான் நெருக்கமாக இருந்தேன் என்று சொல்ல முடியாது. ஒருமுறை பிரதமர் இந்திரா காந்தியை சந்திக்க அவர் தில்லிக்கு வந்தபோது, நானும் தில்லியில் இருந்தேன். அவர் வந்திருப்பது தெரிந்ததும் அவரைச் சென்று சந்தித்தேன்.''
""அமிர்தலிங்கம் அறையில் அவரைச் சந்திக்க நீங்கள் போகும்போது, பிரபாகரனுடன் பேசுவதுண்டா?''
""பிரபாகரன் அப்போது பெரிய தலைவராக எல்லாம் இல்லை. அமிர்தலிங்கத்தின் உதவியாளர் என்றுதான் நான் அவரை நினைத்தேன். பேசியதெல்லாம் கிடையாது.''
""இலங்கை தீவிரவாதக் குழு தலைவர்களில் வேறு யார் யாரெல்லாம் உங்கள் நண்பர்கள்?''
""தீவிரவாதக் குழுக்களுடனோ, அவர்களது தலைவர்களுடனோ எனக்கு நெருக்கம் எதுவும் கிடையாது. அவர்களில் யாரும் எனக்கு நண்பர்களும் அல்ல.''
""டெலோ செல்வத்தை நீங்கள் பலமுறை சந்தித்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே...''
""பல தடவையெல்லாம் கிடையாது. சென்னையில் ஒரு முறையும், தில்லியில் ஒரு முறையும் சந்தித்திருக்கிறேன். அதுவும், அவரைப் பேட்டி காண்பதற்காக... பத்திரிகைகளில் அந்தப் பேட்டிகள் வந்திருக்கின்றன.''
(அந்தப் பேட்டிகளை எடுத்த பிறகு எனக்கும் டெலோ செல்வத்துக்கும் இடையேயான தொடர்பே விட்டுப் போய்விட்டது. இப்போது செல்வம் அடைக்கலநாதன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்).
அடுத்த அரை மணி நேரம் தொடர்ந்து என்னென்னவோ கேட்டார்கள். திமுக தலைவர் கருணாநிதியுடனான எனது பேட்டிகள், வைகோவுடனான தொடர்பு, இலங்கைப் பிரச்னை பற்றி நான் எழுதிய கட்டுரைகள், ராஜீவ் படுகொலை தொடர்பான எனது செய்திகள் என்று ஒன்றுவிடாமல் அவர்களிடம் தகவல்கள் இருந்தன. அவை குறித்தும் துருவித் துருவிக் கேட்டார்கள்.
அவர்கள் நாற்காலியில் இருந்து எழுந்தபோது, அத்தோடு முடிந்தது என்று நினைத்து நானும் எழுந்திருந்தேன். என்னைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தார் அந்த அதிகாரி.
""நீங்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கு இங்கேயே நாங்கள் அறை தயாராக்கி வைத்திருக்கிறோம். எங்கள் மூத்த அதிகாரி ஒருவர் நாளைக்குத்தான் வருகிறார். அவரை சந்தித்துவிட்டு நீங்கள் போகலாம். உங்களுக்குக் கழிப்பறை இணைக்கப்பட்ட வசதியான அறை ஒதுக்கிறோம்'' என்று அவர் நக்கலாகச் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியில் மயக்கமே வந்துவிட்டது.
பலிராம் பகத் என்னை இப்படி பலிகடாவாக்குவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இத்தனை விசாரணைக்கும் காரணம் ராஜீவ் காந்தி படுகொலையா, இல்லை வரதராஜ பெருமாளின் பாதுகாப்பா என்கிற சந்தேகம் எனக்கு இன்றுவரை தீரவில்லை.
அடுத்த நாள் மாலை நான்கு மணிவரை அவர்கள் என்னை ஒரு கெளரவப் பாதுகாப்புக் கைதியாக அங்கே வைத்திருந்தார்கள். இரவெல்லாம் தூங்காமல் ஏதேதோ சிந்தித்துக் கொண்டு இருந்த நான், சோர்ந்துபோய் தூங்கிவிட்டேன். என்னைத் தட்டி எழுப்பினார்கள். மேலதிகாரி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
(தொடரும்)