வரதராஜ பெருமாள், இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் முதல்வராக இருந்தவர் என்பது வரைதான் பெரும்பாலானோருக்கும் தெரியும். அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இல்லாமல் இருந்ததும், அதற்கு எதிராக இருந்ததும் அவர் குறித்துத் தவறான கருத்தாக்கம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம்.
இலங்கையின் வடக்கு மாகாணப் பகுதியில் நடந்த முதலாவது இனப்படுகொலையைத் தொடர்ந்து அங்கே பல்வேறு போராட்டக் குழுக்கள் உருவாகத் தொடங்கின. பல படித்த, துடிப்புள்ள இளைஞர்கள் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரலெழுப்பத் தலைப்பட்டனர். அவர்களில் வரதராஜ பெருமாளும் ஒருவர்.
மாணவர் பருவத்திலேயே தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியில் தன்னை இணைத்துக் கொண்ட வரதராஜ பெருமாள், ஆரம்பகட்ட போராளிகளில் மிகவும் முக்கியமானவர். பல தமிழ் இளைஞர்கள் சிரிமாவோ பண்டாரநாயகா அரசால் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் வரதராஜ பெருமாளும் ஒருவர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தலைசிறந்த மாணவர்களில் ஒருவராகக் கற்றுத் தேர்ந்த வரதராஜ பெருமாள், அந்தப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். ஈ.பி.ஆர்.எல்.எஃப். என்கிற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்கிற போராட்டக் குழுவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான வரதராஜ பெருமாள், முழுநேரப் போராளியானார். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டார்.
1983-இல் மட்டக்களப்பு சிறைச்சாலைக் கலவரத்தைத் தொடர்ந்து, சிறையை உடைத்துத் தப்பிச் சென்றவர்களில் வரதராஜ பெருமாள் முக்கியமானவர். அதற்குப் பிறகுதான் அவர் இந்தியாவுக்கு வருகிறார். சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினரின் முகமாக செயல்பட்ட வரதராஜ பெருமாள், 1985-இல் இந்தியாவின் முன்னிலையில் இலங்கை அரசுக்கும் போராளிக்குழுக்களுக்கும் இடையே பூட்டான் தலைநகர் திம்புவில் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொண்டார்.
ஆரம்பத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த வரதராஜ பெருமாள், திம்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, போராட்ட வழிமுறைகளைக் கைவிட்டு அரசியல்ரீதியிலான தீர்வை ஏற்றுக் கொள்ளத் தலைப்பட்டார். அதில்தான் அவருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்திய - இலங்கை அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டது. அதில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில அமைப்புகளைத் தவிர ஏனைய அமைப்புகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுத் தேர்தல் அரசியலில் களமிறங்கின. ஈ.பி.ஆர்.எல்.எஃப். உள்ளிட்ட குழுக்கள் வெற்றி பெற்றன. இந்திய அமைதிப் படையின் உதவியுடன் பெறப்பட்ட வெற்றி அது என்பது விடுதலைப் புலிகளின் குற்றச்சாட்டு.
அந்த வெற்றியின் அடிப்படையில் வரதராஜ பெருமாள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதல்வராக 1988 டிசம்பர் 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய அரசால் பயிற்சி அளிக்கப்பட்ட டெலோ, பிளாட் உள்ளிட்ட போராளிக் குழுவினருக்கு வாய்ப்பளிக்கும் விதத்தில், அவர்களை "மக்கள் உதவிக் குழுக்கள்' என்கிற பெயரில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் காவல்துறைப் பணியில் ஈடுபடுத்த முதல்வர் வரதராஜ பெருமாள் எடுத்த முடிவு, இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராட்டக் குழுக்கள் அதை சந்தேகக் கண்ணுடன் பார்த்தன.
இந்திய அமைதிப் படையின் உதவியுடன் முதல்வர் வரதராஜ பெருமாள், இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் ஓரளவுக்கு அமைதியை நிலைநாட்டினார் என்று பல வெளிநாட்டு ஆய்வுகள் பதிவு செய்திருக்கின்றன. அதை மறுப்பாரும் உண்டு.
இந்தியாவிலும், தமிழகத்திலும் நடந்த ஆட்சி மாற்றங்கள், இலங்கையில் ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து, பிரேமதாசா அதிபரானது உள்ளிட்ட நிகழ்வுகள், முதல்வர் வரதராஜ பெருமாளைப் பலவீனப்படுத்தின. வரதராஜ பெருமாளின் தலைமையிலான அரசும், இந்திய அமைதிப் படையும் தொடர்வது தங்களுக்கு ஆபத்து என்று விடுதலைப் புலிகளும், பிரேமதாசா அரசும் கருதின. எதிரிகளான அவர்கள் இருவருக்கும் இடையில் சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து வெளியேற வேண்டும் என்கிற அதிபர் பிரேமதாசாவின் அறிவிப்பை விடுதலைப் புலிகள் ஆதரித்தனர். தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதியும் அதை வழிமொழிந்தார். மத்திய ஆட்சியில் இருந்த வி.பி. சிங் அரசு அதற்கு இணங்கியது.
வடக்கு - கிழக்கு மாகாணக் கெளன்சில் கலைக்கப்பட்டு, இந்திய அமைப்படை விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், முதல்வர் வரதராஜ பெருமாளுக்கு இந்தியாவில் தஞ்சமடைவதைத் தவிர, வேறு வழியில்லாத நிலைமை ஏற்பட்டது. இலங்கையில் தொடர்ந்திருந்திருந்தால், விடுதலைப் புலிகளால் கொல்லப்படுவோம் என்பதை உணர்ந்ததால், அவர் இந்தியா வந்துவிட்டார். இந்திய அரசின் பாதுகாப்பில் தங்கி இருந்தார். இந்தப் பின்னணியில்தான் நான் அவரை சந்திக்கச் சென்றேன்.
மலர்ந்த முகத்துடனும், நட்புறவுடனும் வணக்கம் சொல்லி, கைகுலுக்கி வரவேற்ற வரதராஜ பெருமாள், அதற்குப் பிறகு சொன்ன வார்த்தைகள்தான் என்னை திடுக்கிட வைத்தன.
""நான் யாரையும் சந்திக்கவோ, பேட்டி அளிக்கவோ விரும்புவதில்லை. அதற்கான காரணங்கள் உங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் என்னை சந்திக்க விரும்புகிறார் என்றும், அவர் உள்துறை அமைச்சரின் நண்பர் என்றும் சொன்னார்கள். நான்கு வார்த்தை தமிழில் பேச வாய்ப்புக் கிடைக்கிறது என்கிற மகிழ்ச்சியில்தான் நான் இந்த சந்திப்பை ஏற்றுக்கொண்டேன்.''
அவரது தர்மசங்கடம் எனக்குப் புரிந்தது. ராஜீவ் காந்தியின் படுகொலை நடந்து இரண்டு ஆண்டுகள்தான் கடந்திருந்தன. அவரது நிலையில் யாராக இருந்தாலும் அப்படித்தான் இருப்பார்கள்.
நான் புரிதலுடன் தலையசைத்தேன். அவரிடம் எனக்கு ஒரே ஒரு கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
""பேட்டிக்காகக் கேட்கவில்லை. இப்படியே எத்தனை நாள்கள் நீங்கள் இருந்துவிட முடியும்? உங்களுக்கு என்று ஏதாவது திட்டமோ, ஆசையோ இல்லையா?''
""ஏன் இல்லை. இது தற்காலிகம்தான். நான் ஈழத்துக்குத் திரும்புவேன். எங்கள் மக்கள் சுய மரியாதையுடன் வாழத்தான் போகிறார்கள். ஈழம் என்பது கனவல்ல; அது ஒருநாள் நிஜமாகும். ஆயுதப் போராட்டத்தின் மூலமாக அல்ல, ஜனநாயக முறையில் அது நடக்கும். ஒரு நாள் எங்கள் ஊருக்குத் திரும்பி, என் மக்களோடு நான் வாழத்தான் போகிறேன். அதில் எனக்கு சந்தேகமே இல்லை.''
அதற்கு மேல் அவருடன் நான் அதிகம் பேசவில்லை. அவரும் பேச விரும்பவில்லை.
வரதராஜ பெருமாள் இலங்கைக்குத் திரும்பிவிட்டார்; திரிகோணமலையில் இருக்கிறார் என்கிற செய்தி சில ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்தபோது நானடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சில நிமிடங்கள் மட்டுமே அவரை சந்தித்தேன் என்றாலும், ஓர் உறுதியான மனத்திடம் கொண்ட தலைவராக அவர் எனக்குத் தெரிந்தார்.
சிலரது பார்வையில் அவர் துரோகியாக இருக்கலாம். அது அவர்கள் பார்வை. அவரது பார்வையில், அவரை விமர்சிப்பவர்கள் துரோகிகள். அது அவர் பார்வை. இலங்கையில் எங்கோ ஒரு பகுதியில் வாழும் வரதராஜ பெருமாளை மீண்டுமொருமுறை சந்திக்க வேண்டும். நீண்ட நேரம் பேச வேண்டும். அவரது ஆசையைப்போல எனது ஆசையும் நிறைவேறாமலா போகும்?
தில்லிக்குத் திரும்பிய அடுத்த நாள், அக்பர் ரோடு காங்கிரஸ் தலைமையகத்தில் செயற்குழுக் கூட்டம். வெளியே புல்தரையில் கூடியிருந்த ஏனைய பத்திரிகையாளர்கள், கட்சிக்காரர்களுடன் நானும் காத்திருந்தேன். கூட்டம் முடிந்து தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் காரில் கிளம்பினார்கள்.
பிரணாப் முகர்ஜியும் இருந்தார். என்னைக் கோபமாகப் பார்த்தபடி எதுவும் பேசாமல் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
அவர் என்மீது கோபத்தில் இருக்கிறார் என்பது பார்வையிலேயே தெரிந்தது. என்ன காரணம் என்று புரியவில்லை. இந்த நிலையில் அவரைத் தேடிச் சென்று சந்திக்கவும் பயமாக இருந்தது.
தமிழகத்திலிருந்து வந்திருந்த காங்கிரஸ் தொண்டர்கள் இருவர், மக்களவை உறுப்பினராக இருந்த இரா. அன்பரசை சந்திக்க விரும்பினார்கள். அவர்களையும் அழைத்துக் கொண்டு மகாதேவ் சாலையில் இருந்த அன்பரசின் வீட்டிற்குச் சென்றேன்.
இரா. அன்பரசு எனது நீண்டநாள் நண்பர் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அவருடன் உணவருந்திவிட்டு, வரவேற்பறையில் வந்து அமர்ந்தோம். அவரைப் பார்க்க வந்திருந்தவர்கள் விடைபெற்றுச் சென்றுவிட்டனர். அதற்குப் பிறகுதான் நான் பேசத் தொடங்கினேன்.
""எங்கே போய்விட்டீர்கள்? கொஞ்ச நாளாக உங்களைப் பார்க்கவே முடியவில்லையே?''
""நான் வரதராஜ பெருமாளை சந்தித்தேன்.''
அன்பரசு என்னை ஆச்சரியத்துடனும், சற்று கிண்டலாகவும் பார்த்தார்.
""இலங்கையில் முதல்வராக இருந்த வரதராஜ பெருமாளையா?''
""ஆமாம்..''
""எங்கே எப்படிப் பார்த்தீர்கள்?''
நான் நடந்ததை எல்லாம் அவரிடம் விவரமாகத் தெரிவித்து, உதய்பூர் அரண்மனை ஹோட்டலில் வரதராஜ பெருமாளை சந்தித்தது வரை ஒன்று
விடாமல் சொன்னேன்.
""ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, வரதராஜ பெருமாளின் உயிருக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் அவரை சந்திக்க உங்களை அனுமதித்திருக்க மாட்டார்கள். நீங்கள் சந்தித்தது வரதராஜ பெருமாளாக இருக்காது. அவரைப் போன்ற வேறு யாரோ ஒருவரை உங்களுக்குக் காட்டி ஏமாற்றி இருக்கிறார்கள்.''
""என்னை எதற்காக ஏமாற்ற வேண்டும்? அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் அனுமதியுடன்தான் அவரைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றார்கள்.''
""இருக்கலாம். ஆனாலும் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. அப்படி உங்களை அனுமதித்திருந்தால் அது நம்பிக்கை துரோகம். உங்களுக்கும் அது ஆபத்து. நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது அட்வைஸ்!''
நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அன்று இரவு அங்கேயே அன்பரசின் வீட்டில் தங்கிவிட்டேன். ஏற்கெனவே வரதராஜ பெருமாளின் பேட்டி கிடைக்கவில்லை என்கிற வருத்தம் இருந்தது. இப்போது, வேறு யாரையோ காட்டி என்னை பாதுகாப்பு அதிகாரிகள் ஏமாற்றிவிட்டார்களோ என்கிற ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.
இலங்கையில் இருக்கும் வரதராஜ பெருமாளை நேரில் சந்திக்கும்போதுதான், எனது உதய்பூர் அரண்மனை சந்திப்பின் உண்மைத்தன்மை உறுதியாகும். அதற்காகவே விரைவில் இலங்கை செல்ல வேண்டும்.
ஒரு வாரம் கழித்து, சென்னை திரும்புவது என்று முடிவெடுத்தபோது பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேச வேண்டும் என்று தோன்றியது. அவருக்கு என்மேல் கோபமாக இருக்குமோ என்கிற சந்தேகம் தீரவில்லை. அதன் காரணத்தை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மூன்று தடவை சந்திக்க நேரம் கேட்டு அவரது உதவியாளரை அழைத்து, நான்காவது முறையாக பதில் வந்தது. இரவில் வீட்டுக்கு வந்து சந்திக்கும்படி சொன்னார்கள்.
கிரேட்டர் கைலாஷிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றேன். சுமார் இரண்டு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு, எல்லா பார்வையாளர்களும் அகன்றதைத் தொடர்ந்து நான் அவரது அறைக்குள் அனுமதிக்கப்பட்டேன்.
என்னைப் பார்த்ததும் அவரது முகம் சிவந்து விட்டது. கோபம் கொப்பளிக்க, வழக்கத்துக்கு மாறாகத் தனது குரலை உயர்த்தி, ""உன்னை என்னவென்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்?'' (வாட் டு யூ திங்க் யூ ஆர்?) என்று அவர் கேட்ட கேள்வியில் எனது சப்த நாடியும் அடங்கிவிட்டது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.