'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 90
பிரணாப்தாவிடமிருந்து இவ்வளவு சீக்கிரம் அழைப்பு வருமென்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
பிரணாப்தாவிடமிருந்து இவ்வளவு சீக்கிரம் அழைப்பு வருமென்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பேட்டிக்காகவும், சந்திப்புக்காகவும் அனுமதி கேட்டு நான் அனுப்பி இருந்த கடிதங்களின் அடிப்படையில்கூட நான் அழைக்கப்பட்டிருக்கலாம். அவரது கிரேட்டர் கைலாஷ் வீட்டுக்கு நான் சென்றேன்.
சாதாரணமாக பிரணாப் முகர்ஜி இருக்கிறார் என்றால், அவரது வீடு இருக்கும் தெருவின் இரண்டு பக்கங்களிலும் வரிசை கட்டி கார்கள் நின்று கொண்டிருக்கும். அன்று அந்தத் தெருவே அமைதியாக இருந்தது. அதிகம் கார்கள் இருக்கவில்லை. நான் சென்றபோது இரவு சுமார் எட்டு மணி இருக்கும்.
இரவில் வந்து சந்திக்கும்படிதான் அவரது உதவியாளர் தெரிவித்திருந்தார்.
உள்ளே போனபோது, விருந்தினர்கள் யாருமே அன்று இருக்கவில்லை. வீட்டையொட்டி இருந்த அவரது அலுவலக அறையில் சென்று அமர்ந்தேன். உதவியாளர்கள்தான் இருந்தனர். நான் வந்திருப்பது வீட்டிலிருந்த வர்த்தகத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்குத் தெரிவிக்கப்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு அலுவலகத்தில் உள்ள அவரது அறைக்கு அழைக்கப்பட்டேன்.
பிரணாப்தாவுக்கு முன்பு இருந்த மேஜையில் அந்த வார "யங் இந்தியன்' இதழ் இருந்தது. தனது வழக்கமான "கம்... கம்...' என்கிற உற்சாக அழைப்பு அவரிடமிருந்து வந்தது. அவருக்கு முன்பு இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.
""விக்ஞான் பவன் நிகழ்ச்சியில் உனக்கென்ன வேலை? அது அரசியல் நிகழ்வு கிடையாதே'' என்கிற கேள்வியை அவர் எழுப்பியபோது நான் நிஜமாகவே ஆச்சரியப்பட்டேன். அந்தக் கூட்டத்துக்கு நடுவிலும் இரண்டாவது வரிசையில் ஓர் ஓரமாக அமர்ந்திருந்த என்னை அவரால் எப்படி அடையாளம் காண முடிந்தது என்கிற வியப்புதான் அது.
பெரிய தலைவர்கள் எல்லோருக்குமே இந்த அசாத்தியத் திறன் இருந்திருக்கிறது. காந்திஜிக்கு இந்தியாவின் எந்த ஊரில் யார் யார் என்னென்ன செய்கிறார்கள் என்று பெயருடன் நினைவிருக்குமாம். காமராஜரும் அப்படித்தான். திமுக தலைவர் கருணாநிதி, கேரளத்தில் கே. கருணாகரன், கர்நாடகத்தில் எஸ். பங்காரப்பா, கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், இந்திரஜித் குப்தா ஆகியோரின் நினைவாற்றலை நானே பார்த்து வியந்திருக்கிறேன்.
நண்பர் சேதுப்பிரகாசத்தின் வேன்டேஜ் லெதர் நிறுவனம் விருது பெற்றது குறித்தும், அவருடன் நான் வந்ததாகவும் தெரிவித்தேன். தெரிந்ததுபோலத் தலையை மட்டும் அசைத்தார். ஒருவேளை, அவரை சந்திக்க அனுமதி கேட்டிருந்ததும் காரணமோ என்னவோ...?
நான் "யங் இந்தியன்' இதழுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தது அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது என்று நினைக்கிறேன். அந்த வார "யங் இந்தியன்' இதழில் பிரணாப் முகர்ஜியையும், நரசிம்ம ராவ் அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்து சந்திரசேகர்ஜி தலையங்கம் எழுதியிருந்தார். அந்தத் தலையங்கத்தை அச்சுக்குப் போவதற்கு முன்பு நானும் படித்திருந்தேன்.
உலக வர்த்தக அமைப்பின் "காட்' ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் வர்த்தகத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கையொப்பம் இட்டிருப்பதை விமர்சித்து எழுதப்பட்டிருந்த தலையங்கம் அது.
அதே இதழில், தமிழக அரசியல் நிலைமை குறித்த எனது கட்டுரையும் இருந்தது. திமுக பிளவு, ஜெயலலிதா அரசின் மீதான ஊழல் புகார்கள், ஆளுநர் - முதல்வர் மோதல், காவிரிப் பிரச்னை உள்ளிட்டவை குறித்து நான் எழுதி இருந்தேன். அதைப் பார்த்தபோது, எனக்கும் "யங் இந்தியன்' இதழுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று பிரணாப்தா நினைத்திருக்கலாம். சந்திரசேகர்ஜியுடனான எனது தொடர்பு அவருக்கு நன்றாகவே தெரியும்.
""யங் இந்தியன் இதழில் "நியூஸ்கிரைப்' கட்டுரைகள் வருகின்றனவா, இல்லை அதற்குத் தனியாக கட்டுரைகள் எழுதுகிறாயா?'' என்கிற அவரது கேள்விக்கு விவரமாக நடந்ததை எல்லாம் தெரிவித்தேன். சாவதானமாக பைப்பைப் புகைத்தபடி கேட்டுக் கொண்டார்.
""சந்திரசேகர்ஜி அவரது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்ப "காட்' ஒப்பந்தத்தை விமர்சித்து எழுதி இருக்கிறார். சரி. கோப்பில் நாங்கள் ஏன் கையொப்பமிட்டு இணைந்தோம், அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று நான் எழுதினால் அதையும் அவர் "யங் இந்தியன்' இதழில் பிரசுரிப்பாரா?''
""மறுக்க மாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன். "யங் இந்தியன்' என்பது பல்வேறு கருத்துகளை முன்வைக்கும் முயற்சி. உங்கள் கட்டுரையை மறுத்தும் ஒருவர் எழுதி, விவாதம் தொடர்ந்தால் அதுவும் நல்லது தானே...''
""எனக்கு அதில் எந்தவித மறுப்போ, எதிர்ப்போ கிடையாது. சந்திரசேகர்ஜி தனது தலையங்கத்தில் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதற்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். என்னுடைய கருத்தை மறுத்து சந்திரசேகர்ஜியோ, வேறொருவரோ எழுதினால் அதில் எனக்கு எந்தவித மனவருத்தமும் இருக்காது. மக்கள் இரண்டு பக்கக் கருத்துகளையும் தெரிந்து கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.''
""கட்டுரையைத் தாருங்கள். நான் சந்திரசேகர்ஜியிடம் பேசி அடுத்த இதழிலேயே பிரசுரிக்கச் சொல்கிறேன். அப்படி அவர் மறுத்தால், அதை நான் "நியூஸ்கிரைப்' மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெளிவரும் 24 பத்திரிகைகளுக்கு அனுப்பி விடுகிறேன்.''
""காட் குறித்த எனது கட்டுரை "யங் இந்தியன்' இதழிலும் வர வேண்டும். உனது "நியூஸ்கிரைப்' மூலம் அனைத்து மொழிப் பத்திரிகைகளுக்கும் அனுப்பப்படவும் வேண்டும்.''
தலையையாட்டினேன். தொடர்ந்து அவர் மொராக்கோ தலைநகர் மாரகெஷில் ஏப்ரல் மாதம் நடந்த உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் "காட்' ஒப்பந்தம் கையொப்பமிட்ட பின்னணியை எனக்கு விளக்கிச் சொன்னார். பொருளாதாரப் பேராசிரியர் விளக்க, அதை ஒரு மாணவர் கேட்பதுபோல, நான் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். நான் கேட்காமலேயே, புரியாத விஷயங்கள், பிரச்னைகளுக்கு அவர் விளக்கம் தந்ததை வாழ்நாளில் மறக்க முடியாது.
தனது அரசியல் வாழ்க்கையின் மிகப் பெரிய வரலாற்று நிகழ்வு என்று "காட்' ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் கையொப்பமிட்டதைப் பிரணாப் முகர்ஜி கருதினார். வி.பி. சிங், சந்திரசேகர் ஆட்சிகளிலும், நரசிம்ம ராவ் அரசின் முதல் இரண்டு ஆண்டுகளிலும் இந்தப் பிரச்னையை ஆக்கபூர்வமாக அணுகி இருந்தால், இப்போது கிடைத்ததைவிட அதிகமான சலுகைகளை இந்தியா பெற்றிருக்க முடியும் என்பது பிரணாப் முகர்ஜியின் கருத்து.
ஒருபுறம் பிரணாப் முகர்ஜியும், நரசிம்ம ராவ் அரசும் "காட்' ஒப்பந்தத்தில் இணைந்ததை அவசியத் தேவையாகவும், வருங்கால இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும் கருதினார்கள் என்றால், அதற்குக் கடுமையான எதிர்ப்பு எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளிலும் "காட்' ஒப்பந்தத்துக்கும், உலக வர்த்தக நிறுவனத்திற்கும் எதிரான போராட்டங்கள் நடைபெற்றன.
45 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும் இணைந்து "ஆசாதி பச்சாவ் ஆந்தோலன்' என்கிற அமைப்பை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் போராட்டங்களை நடத்தின. கொல்கத்தாவில் ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி இருந்ததால் போராட்டம் கடுமையாக இருந்தது. பிரணாப் முகர்ஜியின் கொடும்பாவிகள், பல மேற்குவங்க நகரங்களில் எரிக்கப்பட்ட செய்தியை நான் தினசரிகளில் படித்தேன்.
தில்லியில் நடந்த பேரணியில் சந்திரசேகர்ஜி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், குருதாஸ் தாஸ்குப்தா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் நடந்த விவசாயிகள் போராட்டம் போலவே "காட்' ஒப்பந்தத்துக்கு எதிரான போராட்டமும், மிகவும் கடுமையாக இருந்தது. பிரணாப் முகர்ஜி "காட்' குறித்து விளக்கிய பிறகு நான் அவரிடம் ஒரு கேள்வி எழுப்பினேன்.
""நீங்கள் கூறிய விளக்கங்கள் எல்லாமே தர்க்க ரீதியாக சரியாக இருக்கிறது, ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு விளக்கிச் சொன்னதுபோல, உங்களாலோ, பிரதமராலோ இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் எடுத்துச் சொல்ல முடியுமா? நான் செங்கோட்டைப் பேரணிக்குப் போயிருந்தேன். அரசுக்கு எதிராக மக்கள் போராடத் தொடங்கி இருக்கிறார்கள். அதை நீங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?''
"இது தவிர்க்க முடியாதது. இந்தப் போராட்டமும், எதிர்ப்பு மனநிலையும் "காட்' ஒப்பந்தத்தின் பலன் அனுபவரீதியாகத் தெரியும்போது அடங்கிவிடும். அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக வளர்வதற்கு "காட்' ஒப்பந்தம் அஸ்திவாரம் போட்டிருக்கிறது. அப்போது நான் இருப்பேனா தெரியாது. நீ இருந்தால் நான் இப்போது சொன்னதை அப்போது உணர்வாய்...''
""யார் அப்போது இருக்கிறோம் என்பதல்ல; அடுத்த தேர்தலில் உங்கள் ஆட்சி இருக்குமா என்பதைக் கேள்விக் குறியாக்குகிறது இந்த ஒப்பந்தமும், போராட்டமும்...''
""இப்போதே அதைத் தீர்மானிக்க முடியாது. தேர்தல் வெற்றி தோல்வியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் ஆட்சியாளர்கள், அப்போதைக்கு வெற்றி பெறலாம். ஆனால், வரலாறு அவர்களைத் தண்டிக்கும், இகழும். பிரதமரும் சரி, நானும் சரி ஒரு கருத்தில் தெளிவாக இருக்கிறோம். வருங்கால இந்தியாவின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் "காட்' ஒப்பந்தம் அவசியம் என்பதுதான் அது.''
அவரது தொலைநோக்குப் பார்வையை இப்போது நினைத்துப் பார்த்து பெருமிதம் அடையத் தோன்றுகிறது.
அதற்குப் பிறகும் நான் சிறிது நேரம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தேன். அவரும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் விளக்கங்கள் தந்தார்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு நீண்ட நேரம் அவருடன் பேசிக் கொண்டிருக்க முடிந்தது. அன்று அவர் ரொம்பவும் "ரிஸாக்ஸ்டாக' (தமிழில் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை) இருந்தார். அவரிடமிருந்து இரவு சுமார் 10 மணி அளவில் விடைபெற்றுக் கொண்டபோது, நானும் மிகவும் ரிலாக்ஸ்டாகி இருந்தேன்.
அடுத்த நாள் மாலையில் அமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்திலிருந்து ஓர் உறையில் "காட்' குறித்த அவரது கட்டுரை எனது "நியூஸ்கிரைப்' தில்லி அலுவலகத்துக்கு அனுப்பப் பட்டிருந்தது. அதை சந்திரசேகர்ஜியிடம் தெரிவித்தபோது, "கட்டாயம் பிரசுரிப்போம்' என்று சொன்னார். அந்தக் கட்டுரையை சிரித்தபடியே படித்துப் பார்த்தார்.
""மறுப்புச் சொல்ல முடியாதபடி ஒரு கட்டுரையை பிரணாப் முகர்ஜியால்தான் எழுத முடியும். நாம் எதற்கு மறுப்புத் தெரிவிப்போமோ, அதற்கான பதிலையும் தந்து கட்டுரை எழுதி இருக்கிறார். எதையும் வெட்டவோ, குறைக்கவோ சொல்லாமல் அப்படியே போடச் சொல்லுங்கள். அட்டையில் வர்த்தகத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் "காட்' குறித்த விளக்கம் என்று போடுங்கள்'' என்று சொல்லித் திருப்பித் தந்தார்.
ஒருபுறம் "காட்' ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புக் கிளம்பி இருந்ததென்றால், கட்சி அளவில் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் கரங்கள் பலப்பட்டிருந்தன. நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி ஆகியோருக்குக் கிடைத்தது போன்ற மரியாதையைக் காங்கிரஸ்காரர்கள் நரசிம்ம ராவுக்கும் கொடுக்கத் தொடங்கியிருந்தனர். பிரதமர் அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்கிற செய்தி வந்தது.
கடந்த (1993) ஆண்டு சூரஜ்குண்ட் மாநாட்டில் பிரதமர் நரசிம்ம ராவை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கிய அர்ஜுன் சிங் அமைதியாகிவிட்டார். அவரைத் தவிர அவருடன் எதிரணியில் இருந்த எம்.எல். ஃபோதேதார், நட்வர் சிங், ஷீலா தீட்சித் ஆகியோரை இடைக்கால நீக்கம் செய்திருந்தார் பிரதமர் ராவ்.
அந்தப் பின்னணியில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டப்பட்டது. பிரதமர் அமெரிக்கா கிளம்புவதற்கு முன்னர் அந்த செயற்குழுவில் இரண்டு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
அவை குறித்து நரசிம்ம ராவ் இரண்டு பேரை மட்டுமே கலந்தாலோசித்தார் என்பது எனக்குத் தெரியும். ஒருவர் பிரணாப் முகர்ஜி. மற்றொருவர் வி.என். காட்கில்!
(தொடரும்)